December 27, 2019

A/L எழுதிய மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோருக்கும்..!!

வைத்தியராக வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஏக இலட்சியமாக இருந்தது. அதைத் துரத்திக்கொண்டு ஓடிய காலத்தில் அது மட்டுமே என் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போவதாய் எண்ணிக்கொண்டிருந்தேன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த நாட்களில் பாடசாலை விழாவில் பேசப்போகிறேன், அல்லது ஆங்கில நாடகத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறேன் என்றால் அம்மா தன் பீரங்கியைக் கையில் எடுத்துவிடுவார். அது இரவிரவாக வெடிக்கும். சன்னம் தலைக்குள் பாய்ந்தது மூளையைக் கலங்கடிக்கும். "இப்படி தறுதலை வேலை பார்த்துக்கொண்டு திரிந்தால் உன்னால் வைத்தியராக வரமுடியாது" என்பதுதான் அப்பீரங்கிக்குள்ளிருந்து வெளிப்பட்ட அத்தனை குண்டுகளும் சொன்னவை. மறுபுறம், கொஞ்சம் ஆற அமர்ந்து ஜோசித்துப்பார்த்தால் அம்மா சொல்வதும் உண்மைதானோ என்று தோன்றும். நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் உயர்தர முடிவுகளில் கொண்டுபோய் வைத்துவிட்ட ஒரு சமூக்கத்தில் இதெல்லாம் சாதாரணம் என்று அப்பொழுது இந்தப் பாலகனுக்குப் புரியவில்லை.

உறவினர்களும் இன்னும் சில நலன் விரும்பிகளும் என்னைத் தங்களால் முடிந்தளவு திட்டினார்கள். திட்டு என்று சொல்வதுகூட ஒருவகையில் குறைவாகத்தான் இருக்கிறது. "நீ இனி வாழ்க்கையில் எப்பிடி உருப்படப் போகிறாய்?" என்று தீர்க்கதரிசனம் கேட்டார்கள். உயர்தரம் தன் புற முதுகைக்காட்டி என்னைத் துயரப்படுத்தியதை விட மனிதர்களுடைய வார்த்தைகள்தான் என்னை அதிகம் துன்புறுத்தியது. ஒருவன் உயர்தரத்தில் கோட்டைவிடும் போது அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் நாசாமாகிவிடுகிறது என்கிற செய்தியை இச்சமூகம் என் பிஞ்சு மூளைக்குள் செலுத்தியபோது நான் ஆடிப்போனேன். கண்முன்னால் தெரிந்த உலகம் இருண்டு கிடந்தது. என் சிறகுகளை முறித்துக்கொண்டு வாழ்க்கையை பதினேழாவது வயதிலேயே தொலைத்துவிட்டு நிற்கிறேன் என்று நினைத்த அந்த நொடிகள் எனக்குள் மிகப்பெரிய மன அழுத்தத்தை உண்டுபண்ணியது. ஆனால், குறித்து வைத்துக்கொள்ளுங்கள், மன அழுத்தம் பொல்லாதது அல்ல. அது ஒரு தீப்பொறியை நம் மூளைக்குள் சொருகும். அதைக் கர்ச்சிதமாகப் பிடித்துக்கொள்ளவேண்டும்.

வாழ்க்கையைச் செழுமையாக்குவது கல்விதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்தக் கல்வியை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையும், சாதாரண தரப் பரீட்சையும், உயர்தரப் பரீட்சையும் கட்டங்கள் போட்டு அடைத்து வைப்பதில்லை. உயர்தரத்தில் கோட்டை விட்டபோது என்னுடைய பேராசான் அருட்சகோதரர் ஸ்டானிஸ்லாஸ் சொன்னதும் இதுதான். உயர்தரம் கைகூடி நான் ஒரு வைத்தியராக ஆகியிருந்தால் ஒரு கதவைத் திறந்து, இன்னும் ஆயிரம் கதவுகளை அடித்துச் சாத்தியிருப்பேன் என்று தோன்றுகிறது. வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தர்ப்பங்களை நமக்குக் காட்டுவது தோல்விகள்தான் என்பது எவ்வளவு உண்மையான வேடிக்கை? அதுவும் உயர்தரத்தில் அடையும் தோல்வி, தேடலும் உழைப்பும் கொண்டவர்களை உலகின் அதி உன்னத அதிசயங்களைக் காணப்பண்ணுகிறது. இதை வெறும் அறிவுரை என்று எடுத்துக்கொள்ளவேண்டாம், இது ஒரு தோற்றவனின் testimony என்று குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

உயர்தரம் கைகூடாமல் போகும் தம்பி தங்கைகளைப் பார்க்கும் போது எனக்கு ஒருபோதும் வருத்தம் இருந்ததில்லை. வாழ்க்கையைத் தொலைத்துவிட்டீர்கள் என்று மலட்டுப் புத்தியோடு அறிவுரை சொல்லும் ஒரு சமூகத்தின் குரவளையைப் பிடித்துக் குதறவேண்டும் போலிருக்கிறது. சிறுவர்களின் பள்ளிக்கூடத் தேர்வு பற்றிய உளவியலையும், அவர்கள் கண்டடையக்கூடியதாக இருக்கின்ற ஆயிரம் சந்தர்ப்பங்களின் சாத்தியத்தையும் சமூகம் இன்னும் புரிந்துகொண்டதாய்த் தெரியவில்லை. வைத்தியராகவும் பொறியியலாளராகவும் தங்கள் பிள்ளைகளைக் கற்பிதம் பண்ணிக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு புற உலகமும், அதன் வாய்ப்புக்களும் மங்கலாகத் தெரிவது வேடிக்கையாயிருக்கிறது.

இன்னுமொரு கோணத்தில், தங்கள் தங்கள் comfort zone களைத் தகர்த்தெறிந்து ஒரு சவால் மிக்க உலகத்தைக் கண்டடையும் ஒரு வாய்ப்பாகவே உயர்தரச் சோதனையின் தோல்வி அமையவேண்டும். இதை எந்தளவிற்கு அவர்களுடைய பெற்றோரும் அவர்கள் சார்ந்திருக்கின்ற சமூகமும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறது? ஒரு பாதை அடைபடாமல் போனால் மற்றைய பாதைகளை நம்மால் கண்டடைய முடியுமா என்ன? உலகமும் வாழ்க்கையும் நமக்கு நம்முடைய சமூகம் கற்றுக்கொடுப்பதைப் போல குறுகிய தேக்கங்கள் அல்ல. அது கடல். திசைகளை மாற்றி மாற்றி ஓடாதவனால் அதிசயங்களைப் பார்க்க முடியாது என்கிறது காலம். அதுதான் உண்மையான வெற்றி. தரிசனம். வாழ்க்கை.

என்னுடைய உயர்தரப் பெறுபேறுகள் வந்தபோது சுமார் மூன்று நாட்களாக அம்மா என்னுடன் பேசவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய வாழ்க்கையைத் தொலைத்துவிட்டேன் என்கின்ற மிகப்பெரிய அச்சமும், ஆவேசமும் அவருடைய கண்களில் பற்றி எரிந்துகொண்டு இருந்தது. சமூகம் வேறு அவருடைய கோவத்தில் அள்ளியள்ளி எண்ணையை ஊற்றிக்கொண்டிருந்தது. மூன்று வாரங்கள் நான் வெளியில் போகவில்லை. என்னுடைய இயலாமையைத் தொட்டுத் தொட்டு இன்பம் காணத் துடித்துக்கொண்டிருந்த சமூகத்தைப் பார்க்க எனக்கு கோவம் கோவமாய் வந்தது. சிலர் வீட்டுக்கு வேறு தேடிவந்து துக்கம் விசாரித்தார்கள். அம்மா சொல்ல முடியாமல் அதைச் சொன்னபோது அவர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் விதம் விதமான கருத்து மயிரைக் கொட்டினார்கள். அத்தனையிலும் "இனி உன் மகன் என்ன செய்யப்போகிறான்?" என்கின்ற அதர்மமான கேலி இருந்தது. என் கழிசடை சமூகத்தை நான் அப்போது தீனமாக வெறுத்தேன். ஆனால், எனக்குள்ளிருந்த திறமைகளையும், தேடலையும், நம்பிக்கையையும், ஆவேசத்தையும் ஸ்தூலமாக்கிக்கொள்ள உதவியது என்னுடைய உயர்தர பெறுபேறும் இந்த சமூகமும்தான்.

அப்பா ஒரு pragmatist. சமூகத்தின் அபத்தமான தோல்களில் தன் கூரிய கத்தியால் அவ்வப்போது கீறிப்பார்ப்பவர். மனுஷன் ஐந்தாம் ஆண்டுதான் என்றாலும் உலகின் பெரு வெளியை தன் தேடல் கரங்களால் துழாவிப்பார்த்து படித்துக்கொண்டவர். என்னுடைய அந்த நாட்களில் என்னை தேற்றியவர் அவர்தான்.

"ஒண்டுக்கும் ஜோசிக்காத. வாழ்க்கையில முன்னேறுறதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு. தோல்வியப் பிடிச்சுக்கொள். அதை விட்டுடாத. கூடவே வச்சுக்கொள். அது உன்னைய எங்கையோ கொண்டுபோய் விடும்"

அவர் கைகளை பற்றி முத்தம் வைத்தேன். உள்ளுக்குள் எறிந்த தீ இன்னும் சுவாலை கட்டி எரிந்தது. தேங்க்ஸ் டு தட் பயர். இப்பொழுது உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நிறுவனத்தின் அதிகாரமிக்க கதிரையில் இருந்தபடி இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

Amalraj Francis

0 கருத்துரைகள்:

Post a Comment