Header Ads



இன்றைய "அபே ஸ்ரீலங்கா" மாநாட்டில், விளாசித் தள்ளிய சந்திரிக்கா

யுத்தத்தில் முக்கால்வாசியை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் கால்வாசியை முடிவுக்கு கொண்டு வரும் வேலை மட்டுமே எஞ்சியிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று -05- நடைபெற்ற நாம் ஸ்ரீலங்கா அமைப்பின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமது கட்சியை துண்டு துண்டாக்கியுள்ளனர். நான் கட்சியின் ஆலோசகராக இருந்தாலும் என்னை எதனுடனும் சம்மந்தப்படுத்திக்கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 95 வீதமானவர்கள், கட்சியின் தற்போதைய தலைவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கோரினர்.

கட்சியின் அகில இலங்கை மத்திய செயற்குழுவின் பெரும்பான்மையானவர்கள் கூறியதை ஏற்காது, கட்சியின் செயலாளர் உள்ளிட்ட சிலர், மொட்டுக் கட்சியுடன் இணைந்தனர். வேறு கதைகள் தேவையில்லை கட்சியையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் நபர் யார் என்று நினைப்பதை விட கொள்கை பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. 2015 ஆம் ஆண்டும் இதே விதமாகவே நான் தீர்மானத்தை எடுத்தேன். நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற தீர்மானத்தில் அந்த முடிவை எடுத்தேன்.

தற்போது இரண்டு பிரதான வேட்பாளர்கள் இருக்கின்றனர். புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மற்றும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர். இவர்கள் இருவரின் தேர்தல் அறிக்கைகளை பார்த்தேன். கோத்ததபாயவின் தேர்தல் அறிக்கையில் அழகான கதைகள் உள்ளன.

மக்களுக்கு சுதந்திரத்தை தருவாராம். அதனை பார்த்ததும் சிரிப்பு வந்தது. மேலும் எதனையோ செய்ய போகிறாராம். 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது வறிய மக்களுக்காக கையாண்ட கொள்கை என்ன?.

ஊழலை ஒழிப்பாராம். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கேலி. அதிக செலவில் வீதிகளை நிர்மாணித்த உலகில் ஒரே அரசாங்கம் ராஜபக்ச அரசாங்கம். வேறு என்ன செய்தனர். நீர்ப்பாசனத்தை முன்னேற்றினார்களா?. கல்வியை முன்னேற்றினார்களா?. ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே குழந்தைகளின் போஷாக்கின்மை அதிகரித்தது.

மக்களின் சுதந்திரத்தை எப்படி உறுதிப்படுத்த போகிறார் என்று கோத்தபாய ராஜபக்சவிடம் கேட்க விரும்புகிறேன். ஊடகவியலாளர்களை கொலை செய்வாரா இல்லையா?.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் மிகவும் வெற்றிகரமான வேலைத்திட்டங்கள் இருப்பதை பார்த்தேன்.

தற்போதைய அரசாங்கத்தின்போது சுகாதார துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நானும் இதற்கு உதவினேன்.

நாங்கள் அத்தனகல்ல தொகுதியில் நான்கு குளங்களை நிர்மாணித்தோம். தற்போதைய அரசாங்கத்திற்கு அதனை மக்களுக்கு வெளிப்படுத்த தெரியவில்லை. ஊடக குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் அரசாங்கத்தில் இருக்கின்றனர். எனினும் தாம் செய்த வேலைகளை சரியாக மக்களிடம் சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க தெரியவில்லை.

அறிக்கையில் கூறியுள்ளவைகள் நடக்கலாம், ஆனால் என்னால் உறுதிப்படுத்த முடியாது. ஒருவருக்கு உறுதி வழங்கி நான் அடி வாங்கினேன்.

பொதுஜன பெரமுனவுடன் இணைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சட்டரீதியாக தீர்மானிக்கவில்லை. சட்டவிரோதமாக மொட்டுக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.

7 முறை கட்சி மாறிய கட்சியின் செயலாளர் எங்களை கட்சியில் இருந்து விலக்க போவதாக கூறுகிறார். கட்சியின் யாப்புக்கு அமைய கட்சியில் இருந்து விலக்க சுமார் ஓராண்டு செல்லும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாக்க மகிந்த ராஜபக்சவின் கட்சியுடன் இணைந்துள்ளனராம். மகிந்த ராஜபக்ச மூன்று முறை கட்சியை அழிக்க பார்த்தார். அவற்றை நாங்கள் தடுத்தோம் எனவும் சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.