Header Ads



‘கோத்தபய இன்னமும் அமெரிக்கரே – வென்றாலும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்’ - உபுல் ஜயசூரிய

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடிமகனாகவே இருக்கிறார் என்று, சட்டவாளர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

‘ ‘கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான எந்த ஆவணங்களையும் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவில்லை.

அதிபர், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்குமாறு, தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவர் முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது, சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்கவில்லை.

அவர் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.

கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடும் விண்ணப்பத்தை ஏப்ரல் 17ஆம் நாள் கையளித்ததாவும், மே 3ஆம் நாள் அதனை உறுதிப்படுத்தும் ஆவணத்தை பெற்றதாகவும், அவரது சட்டவாளர் அலி சர்பி தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பெயர் அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தின் பட்டியலில் இடம்பெறவில்லை.

குடியுரிமை துறப்பு ஆவணங்கள் என வெளியிடப்பட்டஆவணங்களில் அமெரிக்க அதிகாரிகளின் கையொப்பங்கள் போலியானவையாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் உள்ளது.

கோத்தாபய ரராஜபக்ச தனது குடியுரிமை துறப்பு ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்தார் என்று சட்டவாளர் அலி சர்பி கூறியுள்ளார்.

ரத்து செய்யப்பட்ட அமெரிக்க கடவுச்சீட்டு இன்னமும் கோத்தாய ராஜபக்ச வசமே உள்ளது. சாதாரண சட்டத்தின்படி, ஒரு அமெரிக்க குடிமகன் தனது குடியுரிமையை கைவிட்டவுடன் அவரது கடவுச்சீட்டை அமெரிக்க அதிகாரிகள் திரும்பப் பெற்றிருப்பார்கள்.

கடுமையான தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக, அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து யாரும் பதில்பெற முடியவில்லை. அமெரிக்க அதிகாரிகள் தங்கள் குடிமக்கள் தொடர்பான எந்த தகவலையும் வெளியிடமாட்டார்கள்.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர், கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடிமகனாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்” என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.