Header Ads



தெரணியகலயில் வாக்களித்த, தமிழர்கள் மீது தாக்குதல்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வன்முறையின்போது கேகாலை - தெரணியாகல பகுதியில் வாக்களித்த தமிழர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று -16- சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வாக்களிக்க சென்ற வாக்காளர்களை ஒரு தரப்பிற்கு வாக்களிக்க வேண்டுமென சில தரப்பினர் அச்சுறுத்தியுள்ளனர்.

அதையும் மீறி தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீதே சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வீடு ஒன்றுக்குள் நுழைந்த சிலர் வீட்டிலிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஆண் ஒருவரை கத்தியால் வெட்டியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நபர் தெரணியகல மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது ஒரு வீட்டுக்கு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தை அடுத்து, தெரணியகல பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.

இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள அமைதியில்லாத சூழ்நிலையை இயல்புக்கு கொண்டு வரும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்கள் வழக்கம் போல வாக்களித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுவரை வாக்களிக்காத வாக்காளர்களுக்கு தாம் முழுமையான பாதுகாப்பை வழங்குவதாகவும், அச்சமின்றி வாக்களிக்க வருகைத் தருமாறும் போலீசார் வாக்காளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர். BBC


2 comments:

  1. இப்போது புரிந்ததா தமிழ்,முஸ்லிம் மக்களே

    ReplyDelete
  2. True. X Not Tamil, Muslims,X

    It has to be Hindu, Muslims(Muslims are also Tamil). We are all tamils except few others..

    ReplyDelete

Powered by Blogger.