Header Ads



"மத அடிப்படைவாதத்திற்கு எதிராக பெரும், போரொன்றை முன்னெடுக்க சஜித் திட்டமிட்டுள்ளார்"

ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெற்றியடைந்த பின்னர் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்ற போதைப்பொருள், ஊழல் மற்றும் மத அடிப்படைவாதம் ஆகிய மூன்று விடயங்களுக்கு எதிராக பெரும் போரொன்றை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றார் என்று அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெற்றியடைந்த பின்னர் போதைப்பொருளுக்கு எதிராகவும், ஊழல் மற்றும் மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும் பாரிய யுத்தமொன்றை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறார். எமது நாட்டில் போதைப்பொருள் பாவனையின் காரணமாக பல இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. எனவே அதனை முற்றாக ஒழிப்பதற்கு நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, போதைப்பொருள் குற்றம் தொடர்பான விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். பொலிஸாருக்கும், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கும் விசேட பயிற்சிகளை வழங்குவதுடன் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும்.

போதைப்பொருள் பாவனையைப் பொறுத்தவரை அதற்கு அடிமையாகியிருப்போர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் ஆகிய இரு பிரிவினர் உள்ளனர். அவர்களில் போதைப்பொருளுக்கு அடிமையானோர் தொடர்பில் சட்டங்கள் கடுமையாக்கப்படாது. 

எனினும் அவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான புனர்வாழ்வு நிலையங்கள் தற்போது உள்ளதைப் போன்று 4 மடங்கினால் அதிகரிக்கப்படும். ஆனால் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு வாழ்நாளில் மன்னிப்பு வழங்கப்படாத வகையில் தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்படும். 

அதுமாத்திரமன்றி வெளிநாடுகளின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எமது நாட்டிற்குள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதைக் கட்டுப்படுத்துவோம். அத்தோடு எமது புதிய அரசாங்கத்தில் புதிய மதுபானச்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது.

மேலும் தனது அரசாங்கத்தில் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள் என்று சஜித் பிரேமதாஸ உறுதியளித்திருக்கின்றார். அதேபோன்று அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதனை மீறி செயற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. 

இலஞ்ச குற்றச்செயல்களைப் பொறுத்தவரை இலஞ்சம் பெறுபவர் மாத்திரமே குற்றவாளியாகவும், தண்டனைக்குரியவராகவும் பார்க்கப்படுகின்றார். ஆனால் இலஞ்சம் கொடுப்பதும் குற்றமாகும். எனவே இலஞ்சம் வழங்குபவர் மற்றும் பெறுபவர் ஆகிய இரு தரப்பினரும் தண்டனைக்கு உட்படுத்தப்படக் கூடிய விதமாக சட்டத்தில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

5 comments:

  1. very good if implemented....

    ReplyDelete
  2. மைத்திரியும் இப்படி சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கு.

    ReplyDelete
  3. இது தான் சஜிதின் அரசியல் விளையாட்டு.
    மத அடிப்படைவாதை ஒழிப்பேன் என்கிறார், ஆனால் மதவாத கட்சிகளான மரம், மயில் போன்றவற்றுடன் கூட்டணியும் வைத்துள்ளார்

    ReplyDelete
  4. பதவிகளை லஞ்சமாக கொடுத்து மற்றய கட்டசிகளின் ஆதரவை தேடுவதும் ஊழல் தானே

    ReplyDelete

Powered by Blogger.