Header Ads



கஃபேயின் 2019 ஜனாதிபதி தேர்தல், இறுதி அறிக்கை


குறிப்பிடத்தக்க அம்சங்கள்
• அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதி தேர்தல்
• பதவியிலிருக்கும் ஜனாதிபதியோ பிரதமரோ போட்டியிடாத ஒரே ஜனாதிபதி தேர்தல்
• அதிகளவு நீளம் கொண்ட வாக்குச்சீட்டைக் கொண்ட ஜனாதிபதி தேர்தல்
• ஜனாதிபதி தேர்தலுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டது

1. தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதி

கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி, 2019 ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்திலிருந்து இம்மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு வரை தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பிற்கு 735 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில், சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள், அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் போன்ற தேர்தல் விதிமீறல் சம்பவங்களே அதிகமாக பதிவாகின. மிகவும் குறைந்தளவான தேர்தல் வன்முறைகளே பதிவாகின.

ஒட்டுமொத்தமாக நோக்கும்போது, 2005, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டு தேர்தல்களை விட 2019ஆம் ஆண்டு தேர்தல் தூய்மையான தேர்தலாக அமைந்துள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சகல வேட்பாளர்களும் தேர்தல் சட்டத்தை மதித்து செயற்பட்டனர். இதன் காரணமாக சட்டவிரோத தேர்தல் பிரசாரம், இலஞ்சம் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கடந்த தேர்தல்களைவிட இம்முறை குறைவடைந்துள்ளன.

1:1. தேர்தல் சட்டங்களை அமுல்படுத்துதல்

தேர்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு சிறப்பாக செயற்பட்டன. தேர்தல் சட்டத்தை மதித்தமை தொடர்பாக கஃபே அமைப்பும் கருத்து வெளியிட்டுள்ளது. அதாவது, கட்சி அலுவலகங்களை நெறிப்படுத்தி நடத்திச் சென்ற விதம் உள்ளடங்களாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த வழிகாட்டல்களை அரசியல் கட்சிகள் உரிய முறையில் கடைப்பிடித்தன.

1:2. ஊடகங்களின் செயற்பாடு

குறிப்பிடத்தக்களவு சம்பவங்களைத் தவிர, பொதுவான தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் குறைவடைந்திருந்திருந்தபோதும், அரச மற்றும் தனியார் ஊடகங்கள் செயற்பட்ட விதம் தொடர்பாக கரிசனை கொள்ள வேண்டியுள்ளது. பல அரச மற்றும் தனியார் ஊடகங்கள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நேரடியாகவே ஆதரவளித்து செயற்பட்டன. கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரத்தை தவிர, செய்தியறிக்கையின் உள்ளடக்கம் மற்றும் அதில் ஒதுக்கப்பட்ட நேரம் என்பன பாரபட்சமாகவே காணப்பட்டன.

போலிச் செய்திகள், தவறான தகவல்கள், திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் என்பன பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அதிகமாக பரவின. சமூக ஊடகங்களில் சுய கட்டுப்பாடு என்ற விடயம் இல்லாத நிலையில், அங்கு இவ்வாறான தகவல்கள் அதிகமாக காணப்பட்டன. இவ்வாறான போலியான, தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அதிகளவில் பரவியதன் தாக்கத்தை நாம் காணலாம். சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எவ்வித தேர்தல் சட்டங்களும் இல்லாத நிலையில், சில அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களை தேர்தலுக்காக வெளிப்படையாகவே பயன்படுத்திக்கொண்டன.

2. மௌன காலம்

கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி காலை 7 மணிவரை மௌன காலம் அல்லது அமைதி காலப்பகுதியாகும். வேட்பாளர்களை ஆதரிக்கும் எந்தவித நடவடிக்கைகளையும் இக்காலப்பகுதியில் முன்னெடுக்க முடியாது.

இக்காலப்பகுதியில் கஃபே அமைப்பிற்கு 25 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதோடு, அவற்றில் அதிகமானவை சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பானதாகும். தேர்தல் பிரசார நடவடிக்கையானது சமூக ஊடகங்களில் தடையின்றி இடம்பெற்றதோடு, வேட்பாளர்களுக்கு பாதகமான நடவடிக்கைகளும் முன்னெடுத்துச் செல்லப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவானது எதிர்வரும் காலத்தில் தனியார் மற்றும் சமூக ஊடகங்களை நெறிப்படுத்துவதற்கான அதிகாரத்தை பெறும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவருமென கஃபே அமைப்பு நம்புகின்றது.

3. தேர்தல் தினம்

நவம்பர் மாதம் 16ஆம் திகதி காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதி தேர்தல் தினமாகும். தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் உள்ளடங்களாக, 104 முறைப்பாடுகள் இத்தினத்தில் கஃபே அமைப்பிற்கு கிடைக்கப்பெற்றன. அவற்றில், மன்னாரில் இரண்டு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு, மரங்களை வெட்டி வீழத்தி வீதித் தடை ஏற்படுத்தப்பட்டன. சிறுபான்மை மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர்கள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் பொலிஸ் ஜீப் வண்டியொன்று சேதமடைந்துள்ளது. எதிர்த்தரப்பு அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலிலேயே, பொலிஸ் வண்டி சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதேநேரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தேசிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இடையே இடம்பெற்ற தாக்குதலில் இருவர் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய முறைப்பாடுகள் யாவும் தேர்தல் விதிமீறல் தொடர்பானவையாகும்.

கஃபே அமைப்பு
16.11.2019

No comments

Powered by Blogger.