November 27, 2019

பாலியல் இலஞ்சம் கோரினால் 077-3406212 என்ற இலக்கத்திற்கு, உடனடியாக முறைப்பாடு செய்யுங்கள்

(நா.தனுஜா)

பாலியல் இலஞ்சம் கோருதல் சட்டரீதியான குற்றம் என்ற அடிப்படையில் அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடளிப்பதற்குப் பெண்கள் முன்வரவேண்டும்.

அத்தோடு அதற்கான சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு தமது அமைப்பின் அதிகாரிகள் தயாராக இருப்பதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'பாலியல் இலஞ்சம் - சவால்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குழு கலந்துரையாடல் நிகழ்விலேயே இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பிரதி பொலிஸ்மாதிபர் பிரியந்த ஜயகொடி, சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷியாமளா கோமேஸ் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷிரீன் சரூர் கலந்துகொண்டதுடன் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் செயற்திட்டப் பொறுப்பதிகாரி சஷி டி மெல் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார்.

நாட்டில் இலஞ்சம் கோருதல் என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்ற போதிலும், பாலியல் இலஞ்சம் தொடர்பில் விரிவாகப் பேசப்படுவதில்லை. 

பாலியல் இலஞ்சம் கோரும் செயற்பாடுகளினால் பெண்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்ற போதிலும், அதுகுறித்த முறைப்பாடுகளை அளிப்பதற்கு அவர்கள் முன்வருவதில்லை.

 பொலிஸ் அதிகாரிகள் மீதான நம்பிக்கையீனம், மொழிசார்ந்த பிரச்சினைகள், முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான பெண் அதிகாரிகளின் பற்றாக்குறை போன்றவை இதற்கான காரணங்களாக உள்ளன.

குறிப்பாக 30 வருடகாலம் யுத்தம் நிலைகொண்டிருந்த வடக்கில் மொழிப்பிரச்சினை மற்றும் நம்பிக்கையீனம் என்பன பாலியல் இலஞ்சம் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்குப் பெண்கள் முன்வராமைக்கான முக்கிய காரணமாக உள்ளது என்று பிரதிப் பொலிஸ்மாதிபர் சுட்டிக்காட்டினார்.

பாலியல் இலஞ்சம் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கான பிரிவிற்கு மத்திய, வடமத்திய மாகாணங்களிலிருந்தே பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 வடமாகாணத்தில் இத்தகைய பிரச்சினைகள் இல்லை என்று கூறமுடியாது. உண்மையில் இது ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒரு புற்றுநோயைப் போன்றதாகும்.

அவ்வாறு ஆராய்ந்த போது உயர் கல்வி நிறுவனம், விசேட தேவையுடையோருக்கான பாடசாலை, தமிழ் அரசியல் கட்சி போன்றவற்றிலும் இத்தகைய பாலியல் இலஞ்சம்கோரும் செயற்பாடுகள் பதிவானமையைக் கண்டறிய முடிந்தது.

அதேபோன்று மட்டக்களப்பில் நுண்கடன் வழங்குனர்கள் பாலியல் இலஞ்சம் கோரியமையால் பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாம் கண்டறியும் தகவல்கள் மற்றும் சம்பந்தப்பட்டவரின் ஆள் அடையாளம் குறித்து உயர் இரகசியத்தன்மையைப் பேணுகின்றோம்.

எனவே சமூகத்தின் மத்தியில் பாலியல் இலஞ்சம் தொடர்பிலும், அதனைக் கோருபவருக்கு எதிராக மேற்கொள்ளத்தக்க சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும், அத்றகுரிய அணுகுமுறைகள் குறித்தும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று ஷியாமளா கோமேஸ் மற்றும் ஷிரின் சரூர் ஆகியோர் வலியுறுத்தினர்.

அத்தோடு பாலியல் இலஞ்சம் கோருதல் என்பது சட்டரீதியான குற்றம் என்ற அடிப்படையில், அத்தகைய சம்பவங்கள் தொடர்பான சட்ட ஆலோசனைகளை 077-3406212 என்ற அவசரசேவை தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதனூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துரைகள்:

Post a comment