Header Ads



தபால் மூல வாக்களிப்பின் போது தாம் விரும்பிய, எவருக்கேனும் வாக்களிக்குமாறு TNA கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது தாம் விரும்பிய எவருக்கேனும் வாக்களிக்குமாறு தபால் மூல வாக்காளர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து கட்சிகள் கேட்டுள்ளன. 

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில் இன்று -30- குறித்த ஐந்து கட்சிகளின் பிரதநிதிகளும் யாழில் ஒன்று கூடினர். 

இந்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானத்தை எடுத்தாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் பெரும்பான்மை கட்சிகள் இரண்டின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் குறித்த ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு சொல்லமுடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறினார். 

ஆகவே நாளைய தினம் தபால் மூலம் வாக்களிக்கும் வாக்காளர்கள் தாம் விரும்பிய நபருக்கு வாக்களிக்குமாறும் கட்டாயம் தமது வாக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதேபோல் அனைத்து கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைத்த பின்னர் அது தொடர்பில் பரிசீலித்து ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்ற முடிவை எடுக்கும் எனவும் சித்தார்தன் கூறினார். 

பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றம் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அதேபோல் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் செயலாளர் சிறீகாந்தா, வடமாகாண சபை பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.