Header Ads



நீங்கள் வேறு தீர்மானத்தை எடுத்திருந்தால், அதனை கைவிட்டு எங்களுடன் இணையுங்கள் - கோத்தபாய

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று -19- கைச்சாத்திடப்பட்டது.

கொழும்பில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கோத்தபாய ராஜபக்சவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் அங்கு உரையாற்றிய கோத்தபாய ராஜபக்ச,

“ இந்த சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக சுதந்திரக் கட்சியினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நம்பிக்கையை பாதுகாப்பேன் என உறுதியளிக்கின்றேன்.

நாட்டின் அபிவிருத்தி, மக்களின் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுக்காக நாங்கள் இணங்கியுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதற்கு முன்னரும் இப்படியான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்னுடன் செய்துக்கொள்ளும் உடன்படிக்கையால், அந்த கட்சி அடையாளம் மற்றும் கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவது முற்றிலும் தவறானது.

நீங்கள் வேறு தீர்மானத்தை எடுக்க நினைத்திருந்தால், அதனை கைவிட்டு எங்களுடன் இணைந்துக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

சுதந்திரக் கட்சி என்பது எனக்கு புதிய இடமல்ல. எமது கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். நாட்டின் அபிவிருத்தி, பாதுகாப்பு, மக்களின் முன்னேற்றம், இளைஞர், யுவதிகளின் கல்வி, அவர்களை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லுதல் போன்ற விடயங்களில் இந்த கொள்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டுக்கு கல்வி கொள்கையை உருவாக்க வேண்டும். சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் சித்தியடைந்து, அதற்கு அப்பால் செல்ல முடியாத பிள்ளைகளுக்காக உரிய வேலைத்திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோல் நாட்டின் தேசிய வர்த்தகர்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயார். மனித வளம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் நம்பியது. அறிவை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். எமக்கு தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். முதலீட்டாளர்களை நாட்டுக்கு வரவழைக்க பாதுகாப்பான நாடு அவசியம். பாதுகாப்பான நாட்டை வழங்க நாங்கள் தயார்.

தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும். தனிப்பட்ட ரீதியில் அல்ல, நாட்டுக்காக அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் ”என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் அழிவையும் நாசத்தையும் விரும்பும் எவரும் இந்த சைத்தானுடன் இணைந்துகொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.