Header Ads



"மகேஸ் சேனநாயக்கவுக்கு மாரடைப்பு, என பரப்பப்படும் வதந்தியில் உண்மையில்லை"

தேசிய மக்கள் இயக்கத்தின் அதிபர் வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று நாட்களாக வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில், பதுளை, பண்டாரவளை,ருவன்வெல்ல, பலாங்கொட, இரத்தினபுரி ஆகிய இடங்களில் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தீவிரமான பரப்புரைகளிலும், கூட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முற்பகல் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, பலாங்கொட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சைகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர், இரத்தினபுரியில் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு கொழும்பு திரும்பினார்.

அதன் பின்னர் அவர் நாரஹேன்பிட்டியவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறிய சுவாச தொற்று காரணமாகவே அவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட தேசிய மக்கள் இயக்கத்தின் உறுப்பினரான லசிலி டி சில்வா, ”ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.

ஆனால் இருமல் மற்றும் சளி காரணமாக அவருக்கு சிறியளவில், சங்கடமாக இருந்தது. அவர் முதலில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட மருத்துவமனையின் மருத்துவர்கள், இது சோர்வு மற்றும் காலநிலை காரணமாக ஏற்பட்டதாக கூறினார்” என்றார்.

ஜெனரல் சேனநாயக்க, நாளை இலங்கை மன்றக் கல்லூரியில் தேசிய மக்கள் இயக்கத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர், மீண்டும் தனது பரப்புரைகளை ஆரம்பிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.