October 03, 2019

"பொய்ச் சாட்சியம் வழங்கி, குற்றவாளிக் கூண்டுக்குள் அனுப்பி வைத்தார்கள்" - ஹஜ்ஜுல் அக்பர்

பொய்ச் சாட்சியம் வழங்கி போலியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கி குற்றவாளிக் கூண்டுக்குள் அனுப்பி வைத்தார்கள் விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலர். அல்லாஹ் அவர்களை மன்னித்து அவர்களுக்கு நல்வழியைக் காட்டட்டும். 

அதேவேளை ஆயிரக்கணக்கான உள்ளங்கள் அழுது, தொழுது, நோன்பு நோற்று குற்றமற்றவரை யா அல்லாஹ் விடுதலை செய்வாயாக! என உளமுருகப் பிரார்த்தித்து நேர் சாட்சியம் வழங்கினார்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய ஷூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் சம்மேளனம், முஸ்லிம் மீடியா போரம், இலங்கை மலாயர் சம்மேளனம், ஸலாமா, மிஷ்காத் மற்றும் கொழும்புப் பெரிய பள்ளிவாயல் ஆகிய அமைப்புக்கள் எனது கைதுக்கெதிராக மும்முரமாக செயல்பட்டன. 

என்மீதான விசாரணையை துரிதமாக மேற்கொண்டு விடுதலை செய்யுமாறு கோரி அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் குரலெழுப்பிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கரைப்பற்று, கல்முனை மாநகர சபைகள், கிண்ணியா நகர சபை, இறக்காமம், அட்டாளைச்சேனை, கிண்ணியா, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனது கைதுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றினர். 

இவற்றோடு தேசிய மற்றும் கிராம மட்டங்களில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஒத்துழைத்துப் பங்காற்றிய சமூகத் தலைவர்கள் “கைது செய்யப்பட்டவர் மண்ணுக்கும் மனித நேயத்துக்கும் மார்க்கத்தின் நடுநிலை சிந்தனைக்குமாக உழைத்தவர்” என சமூக வலைதளங்களில் தொடராக பதிவேற்றங்களைச் செய்தவர்கள். தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட்டவரை தீவிரவாதத்தின் பெயரால் கைது செய்திருப்பதை கடுமையாக ஆட்சேபித்தவர்கள். 

இவ்வாறு நேர் சாட்சியம் வழங்கி எனது விடுதலைக்காகப் பிரார்த்தித்த அனைத்து உள்ளங்களுக்கும் அதற்காக இராப்பகலாக தூய்மையாக உழைத்த மார்க்க, அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுக்கும், என் மீது அன்பு வைத்திருந்த ஆயிரக்கணக்கான இனிய நெஞ்சங்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும், ஆனந்தக் கண்ணீருடன் இதயம் நிறைந்த நன்றியுணர்வுகளை சமர்ப்பிக்கின்றேன். அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக! உங்களது உலக மறுமை ஈடேற்றங்களுக்கு அவன் துணையிருப்பானாக! இலங்கை மண்ணுக்கும் இனிய மார்க்கத்துக்கும் தொண்டு செய்யும் பேறை உங்களுக்கு வழங்கி உங்கள் அனைவரையும் அவன் அங்கீகரிப்பானாக! என மனமுறுகிப் பிரார்த்திக்கிறேன்.

'மனிதர்கள் அறியப்படுவது மார்க்கத்தால் தான். மார்க்கம் அறியப்படுவது மனிதர்களால் அல்ல' என்பார்கள் எமது முன்னோர்கள். அந்தக் கூற்றுக் கேற்ப ஆயிரக்கணக்கான உள்ளங்கள் வழங்கிய அழகிய சாட்சியங்களின் பெருமை சத்திய மார்க்கத்துக்கும், அதன் உரித்தாளனாகிய அல்லாஹ்வுக்குமே சேரும். அவனது மார்க்கத்தின் நேரிய சிந்தனைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே அந்த சாட்சியங்களை நான் பார்க்கிறேன். அந்தவகையில் சத்திய மார்க்கத்தின் நேரிய சிந்தனைகளையும் நடுநிலைப் போதனைகளையும் விளங்கி செயற்படுவதற்கு வழிகாட்டிய அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அல்ஹம்துலில்லாஹ், பின்னரும் அல்ஹம்துலில்லாஹ்.

இலங்கை முஸ்லிம் சமூகம் தீவிரவாதத்திற்கோ, பயங்கரவாதத்திற்கோ எங்கும் எப்போதும் துணை நின்றதில்லை. நாட்டுக்கோ, அதன் நற்பெயருக்கோ அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டதுமில்லை. நாட்டை கூறு போட்டு துண்டாடுவதற்கோ, இன, மத மோதல்களால் இலங்கையின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கருமமாற்றுவதற்கோ முயன்றதுமில்லை. எனினும் அந்த கட்டுப்பாட்டை மீறி ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் ஓர் இரகசியக் கும்பலால் அரங்கேற்றப்பட்டது. முஸ்லிம் சமூகம் அதற்கெதிராக தனது சாட்சியங்களை ஒருமுகப்படுத்தி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கௌரவமான இடத்தில் நிலைப்படுத்துவதற்கும் அதேவேளை நாட்டின் அமைதி, சுபீட்சம், அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக ஒத்துழைக்கவேண்டும். அல்லாஹ் அதற்கு அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

2019.10.03

2 கருத்துரைகள்:

This is indeed a good way of expressing gratitude and thanks.it should include not merely Islamic groups and Mps.
But; president; police; TID; CID and many other people too contributed to this relassee.it is unjust and unwanted arrest.
So. It is good move by public too.
But all must be thanked for this rapid releases .We should learn many lessons form this .
All those who have given wrong information and false witness must learn lessons too.
They must fear Allah for their witness in the day of judegment.
All their evidence will be produced by angles on that day to see who said lies and who said the truth.
Islamic groups too should learn some lessons.they must stop internal fights between them .
All groups..
Moderate: salafi; sufi and all must stop their narrow politics now for the good of Islam and Muslims ..
We stand between Islam and it's reach to wider community in Sri Lanka.
Negative image about Islam was created by our groups ?.
How did police and judges come to know about our internal dispute unless we went to courts or police .
Salafi groups created this in many areas .
Let them learn a lesson from this

Post a comment