Header Ads



ரவூப் ஹக்கீமுக்கு எதிரான, நடவடிக்கைகளை நாம் முறியடிப்போம் - ஹரீஸ்

சஹ்ரானின் பயங்கரவாதத்திற்கு துணைபோனவர் என்ற தோரணையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் மீது அபாண்டமான பழியை சுமர்த்தி அவருக்கு நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியிலிருக்கும் நன்மதிப்பை இல்லாமலாக்கும் நம்மவரின் செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஹ்ரான் ஒரு பயங்கரவாதியாக அறியப்படாதிருந்த நேரமது. தேர்தல் காலத்தில் காத்தான்குடி கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் விசாரிக்க சென்ற நேரத்திலான வீடியோ காட்சியிலுள்ள சஹ்ரானை வைத்து அவருடன் தொடர்வுபட்டவர் பயங்கரவாதத்திற்கு துணை போனவர் என சித்தரிக்க முனைந்திருப்பதானது காட்டிக்கொடுக்கும் செயலாகும்.

இன்று சஹ்ரானை சந்தித்ததாக முறைப்பாடு செய்திருப்பவர்கள், அவ்வாறு சந்தித்தது குற்றமென்றால் ஏனைய தரப்புகளை விட்டுவிட்டு ஒருவருக்கெதிராக மட்டும் முறைப்பாடு செய்ததானது தேர்தலை இலக்காக வைத்தே செய்துள்ளனர்.

பெரும்பான்மை மக்கள் தலைவர் ஹக்கீமை மிதவாத தலைமையாக பார்க்கின்ற பார்வையினை மாற்றி இனவாதத் தலைமையாக சித்தரித்து காட்ட எடுத்த முயற்சியே இதுவாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகளால் பெற்றிபெற வேண்டும் என்ற அஜந்தாவுக்குள் எம்மவர்கள் விலை போயுள்ளதையே தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான முறைப்பாடு காட்டுகின்றது. இச்செயற்பாட்டினை நாம் முறியடிப்போம்.

எமது நாட்டில் ஒரு விடுதலை இயக்கத்தின் வழி நடாத்தலில் ஒரு அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்ட காலத்தைக்கூட நாம் கடந்து வந்துள்ளோம். அந்த நேரத்தில் இவ்வாறான அரசியல் தலைவர்கள் மீது பயங்கரவாத சாயம் பூசி பெரும்பான்மை மக்கள் மத்தியில் தேர்தல் காலங்களில் இனவாத விமர்சனங்கள் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

(றியாத் ஏ. மஜீத்)

1 comment:

  1. இப்பிரச்சினையை வைத்து கட்சித்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அந்த மௌலவி பிரதிதலைவரான உங்களிடம் மனு கொடுத்ததை நீங்கள் ஏற்றுக்கொண்டதாக புகைப்படங்கள் ஊடகங்களில் காட்டப்படுகின்றதே !.

    ReplyDelete

Powered by Blogger.