Header Ads



முஸ்லிம்களுக்கு சங்கு ஊதுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள், சஹ்ரானை கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்...?

11 ஆயிரம் புலனாய்வு அதிகாரிகள் உள்ள இந்த நாட்டிலே ஒரு சஹ்ரானை பிடிக்க முடியாமல் போன செய்தியை யாராலும் நம்ப முடியாது என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்கும் சமூகம் வாழும் இந்த நாட்டிலே பயங்கரவாதி சஹ்ரானை ஒழித்துவைத்த பெருமை கோத்தபாய ராஜபக்ச பரம்பரையினருக்குச் சொந்தம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மட்டக்களப்பு, ஏறாவூரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

முஸ்லிம் அரசியல்வாதிகள் என்றால் பணத்துக்கு, பதவிக்கு அல்லது வேறுவேறு கைமாறுகளுக்கு சோரம் போகக்கூடியவர்கள் என்று எதிர்பார்த்து என்னைப் பிரதமராக்குங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளை விலைகொடுத்து வாங்குகிறோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூறி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என அழைத்தார்.

அந்த சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் அவருடன் போயிருந்தால் பாரிய நஸ்டத்தினை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும்.

இதன் காரணமாக எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கினை இல்லாமல் செய்து சங்கு ஊதுவதற்கு திட்டமிட்டார்கள். இதன் அடிப்படையிலேயே ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் இடம்பெற்றது.

காத்தான்குடியிலிருந்து பொலிஸாருக்குப் பயந்து தப்பியோடிய சஹ்ரானை அழைத்து மூளைச் சலவை செய்து குண்டுதாரியாக மாற்றி கிறிஸ்தவ, தமிழ் சமூகத்தைப் பிரித்து முஸ்லிம் சமூகம் பயங்கரவாதிகள் என்ற செய்தியை தமிழர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து முஸ்லிம்களின் வாக்கினை மாத்திரம் அல்லாமல் தமிழர் கிறிஸ்தவர்களுடைய வாக்குகளை சூரையாடுவதற்காக போட்டுக்கொண்ட நாடகமே சஹ்ரானுடைய குண்டுவெடிப்பு.

இந்த நாட்டிலே 11 ஆயிரம் பலனாய்வு அதிகாரிகள் உள்ளார்கள். நாட்டில் எந்த மூலையில் ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றால் முதலில் வருவது புலனாய்வு அதிகாரிகளே. அவ்வாறான வலையமைப்பில் புலனாய்வுத்துறை இயங்குகிறது.

இவ்வாறு 11 ஆயிரம் புலனாய்வு அதிகாரிகள் உள்ள இந்த நாட்டிலே ஒரு சஹ்ரானை பிடிக்க முடியாமல் போன செய்தியை யாராலும் நம்ப முடியாது. சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்கும் சமூகம் வாழும் இந்த நாட்டிலே பயங்கரவாதி சஹ்ரானை ஒழித்துவைத்த பெருமை கோத்தபாய ராஜபக்ச பரம்பரையினருக்குச் சொந்தம் என்பதை முஸ்லிம் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஏதிர்காலத்திலே நாடாளுமன்றத்திற்கு வரவிருக்கும் முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான வைத்தியர் ஷாபியை அடையாளப்படுத்தி அவர் குருணாகல் மாவட்டத்திலிருந்து அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக அவருக்காக தேடிய விடயம் எட்டாயிரம் பேருக்கு கருத்தடை எனும் பிரளயம்.

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெரியும் இதனை யார் முன்கொண்டு செய்தார்கள் என்று. இந்த நாட்டிலே எத்தனை தலைகள் துவண்டாலும் பரவாயில்லை நான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்ற ராஜபக்ச குடும்பத்திற்கு சார்பாக யாராவது முஸ்லிம் சமூகத்திலிருந்து பேசுவதாகவிருந்தால் அது இல்லாமிய சமூகத்திற்குச் செய்கின்ற மாபெரும் அநியாயம்.

பௌத்த இராஜ்யத்தை அமைத்துக்கொள்ள வேண்டும், எதிர்காலத்தில் இலங்கை பௌத்த சனநாயக சோசலிஷ குடியரசு அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமூகம் ஒரு பயங்கரவாத சமூகம் என நிரூபிக்க வேண்டும் என்பதில் அவர்கள் அக்கறையுடன் செயற்படுகிறார்கள். இலங்கையை மியன்மாராக மாற்றுவதற்கு எதிர்பார்க்கிறார்கள்.

ஜனாதிபதி வேட்பாளர் பிரதேசசபை, மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனநாயக நீரோட்டத்தில் பழகி வந்தவராக இருக்க வேண்டும்.

அண்ணன் ஜனாதிபதியாக இருந்தவேளை போருக்குப் பயந்து அமெரிக்காவில் இருந்து இறுதி நேரத்தில் தொப்பியைப் போட்டுக்கொண்டு நான்தான் போரை வென்றவன் என சொல்லி பாதுகாப்புச் செயலாளர் என்று கூறி தற்போது ஜனாதிபதி வருவதாகவிருந்தால் முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கும் பிரச்சினை ஏற்படும்.

எங்கேயும் தனியாக செல்ல முடியாத, ஒரு பத்திரிகை மாநாட்டில் மஹிந்த ராஜபக்ச இல்லாமல் பேச முடியாமல் உள்ளவரிடம் இந்த நாட்டை கொடுப்பதா என்று சிந்தித்துப் பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.