October 02, 2019

பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுகின்ற மேற்கின் நாடகம்

-பஷீர் அலி-

வருடத்தின் எந்தவொரு நளும் மிச்சமில்லை என்று சொல்லுமளவு இன்று *சர்வதேச தினங்கள்* மலிந்துவிட்டன.  வருடம் முழுவதும் தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டிய தாய்மார்களுக்கென்றே ஒரு தினத்தை ஒதுக்கிவிட்டமை தொட்டு, காம களியாட்டத்திற்கென்றே தினமொதுக்குமளவு இந்த சர்வதேச தினங்கள் இன்று சர்வ சாதாரணமாயிருக்கிறன.
*சர்வதேச தின வரிசையில் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தின மாபியா குறித்து இக்கட்டுரை பேசும்.*

குறித்தொரு விவகாரத்தை சமூகமயப்படுத்தி அதன் தாற்பரியங்களை விளக்கும் நோக்கில் உருவாக்கப்படும் சர்வதேச தினங்கள் அனைத்தும் *கோடிகளை அள்ளி இறைத்ததைத் தவிர, பெறுபேறுகள் எதனையும் தந்து விடாத பின்னணியில்தான் சிறுவர் தினத்தையும் நோக்க வேண்டும்.*

ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர்தான், எதோ சிறுவர் உரிமை காக்கப்போவதாக கொக்கரித்துக் கொண்ட மேற்கின் கோஷத்திற்கு முன்னால், *ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரான இஸ்லாத்தின் சிறுவர் உரிமை பளிச்சிட்டு நிற்கிறது.*

குழந்தைப் பருவத்திலிருந்து குறிப்பிட்ட வயது வரையான பிள்ளைகளை சிறுவரென அடையாளம் காட்டி அவர்களின் உரிமைகள், கடமைகள் என சில உளறல்களையும் செய்து அவற்றை பாதுகாப்போம் என பதாகைகளில் எழுதி ஊர்வலம் போவதிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன நவீன சிறுவர் தின கோஷங்கள். ஆனால், திருமண வயதை அடைந்த ஒரு ஆண் தனது எதிர்கால குடும்பத்தை திட்டமிட்டு அமைக்க, பொருத்தமான பெண்ணை- மனைவியை தெரிவு செய்ய வலியுறுத்துவதிலேயே இஸ்லாம் சிறுவர் உரிமையை பேச ஆரம்பித்து விடுகிறது.
புனித ரமழான் மாதத்தில் வேண்டுமென்றே நோன்பை விடுவதற்காக எந்த அனுமதியும் வழங்காதபோதும் வயிற்றில் சுமந்திருக்கின்ற குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கற்பினி தாய்மார்களுக்கு நோன்பில் சலுகையளித்த மார்க்கம் இஸ்லாம்.
கருவறைக்குள் வைத்து சிறுவர் உரிமை பேசும் ஒரே மார்க்கமான *இஸ்லாத்திற்கு முன்னால், நவீன சர்வதேச சிறுவர் தினங்களெல்லம் எம்மாத்திரம்?*
வயிற்றிலிருந்து இறக்கி வைத்த குழந்தைக்கு இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என தனது வேதப்புத்தகத்திலேயே குறிப்பிட்ட இஸ்லாம் அல்லாத வேறோர் மார்க்கத்தை காட்ட முடியுமா?

சர்வதேச தினமொன்றை உருவாக்கி கொண்டாடி கொண்டிருக்கும் மேற்கின் *பால்மா டின்னுக்குள்* சின்னாபின்னப்பட்டு போகும் சிறுவர் உரிமை குறித்து என்றாவது சிந்தித்திருக்கின்றோமா? மேற்கின் விளம்பரத்தித்துக்குள்ளும் வியாபார மாபியாவுக்குள்ளும் சிக்கிக்கொண்டு *புட்டிபாலும் கையுமாக அலைய வைத்துவிட்டு* சிறுவர் தினம் கொண்டாடுவதில் என்ன பயனிருக்கிறது?
*குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு வேலைக்கு செல்லுகின்ற அநாகரிகத்தை கீழைத்தேய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவிட்டு, ஒரே *ஒருநாள் மட்டும் சிறுவர் தினம் கொண்டாடி விடுவதினால் சிறுவர் உரிமை பாதுகாக்கப்படும் என கற்பனை செய்து கொண்டிருக்கிறது மேற்குலகு.*
ஆரம்ப காலத்தில் நமது நாட்டில் பெருந்தோட்டத்துறை தொழிற்துறைகளில் காணப்பட்ட சிறுவர் காப்பக நடைமுறை இன்று சாதாரணமாக நகர்புறமெங்கும் மலிந்துவிட்டன. *அந்நிய சூழலில் பாதுகாக்கப்படும் சிறுவர் காப்பகங்களில் வளர்க்கப்படும் முஸ்லிம் குழந்தைகளின் மதச்சுதந்திரங்களுக்கும் கலாசார சீரழிவுகளுக்கும் விடை தெரியாமல் தான் பலூன் உடைத்து சிறுவர் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்.*
மிட்டாயை கடித்து சமமாக பங்கிடுவது தொட்டு வாரிசுரிமை சட்டம் வரை பெற்றோர்- பிள்ளை உரிமை குறித்து தெளிவு படுத்தியிருக்கும் இஸ்லாம், *ஒவ்வொரு நிமிடமும் குழந்தைகளை கொண்டாடச் சொல்கிறது.*

*பேரக்* *குழந்தைகளை முத்தமிட்டு, கொஞ்சி தோளிலேற்றி விளையாடிய மாபெரும் சாம்ராஜ்யத்தின் தலைவர் முஹம்மது நபியின் சிறுவர் உரிமை நடைமுறைகளுக்கு முன்னால் ஜெனீவாவின் வட்டமேசை பிரகடணங்கள் பெரிதாக எதனையும் சொல்லிவிடவில்லை.*

ஆக 1924இல் ஜெனீவாவில் கருக்கொண்டு 1959இல் மீண்டும் ஆராயப்பட்டு 1989ல் ஓரு சர்வதேச தின பிரகடணத்துடன் தொடரும் இந்த சிறுவர் தினத்துக்கு பின்னால் உள்ள மேற்கின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலக பொலிஸ்காரனான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அவ்வப்ப எங்கோ ஓர் நாட்டுக்குள் மூக்கை நுழைப்பதும் அழிப்பதும் எழுதப்படாத விதியாகிவிட்டது.

இதன்போதல்லாம் எந்தவோர் யுத்த தர்மத்தையோ மனிதாபிமானத்தையோ அந்நாடுகள் பார்ப்பதில்லை. ஒரு படி மேலே சென்று, எதிர்கால தலைவர்களாக உருவாகக்கூடிய குழந்தைகளை இலக்கு வைத்தே பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதை காணமுடிகிறது.
பலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா என தொடர்ந்த அட்டூழியங்கள் இனவழிப்பு நிகழ்வுகளின் போதெல்லாம் அதிக பாதிப்பை சந்தித்தது சிறுவர்கள்தான்.

இப்படி *பிள்ளைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகின்ற மேற்கின் நாடகத்தின் பெயர்தான் சர்வதேச சிறுவர் தினம்.*

வருடம் முழுவதும் சித்திரவதை செய்துவிட்டு ஒக்டோபர் ஒன்றில் ஓலமிடுவதன் மூலம் அத்தனை அட்டூழியங்களையும் பூச்சியத்தால் பெருக்கிவிடும் பணியை கண கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறது மேற்குலகு.

இன்றுகளில் பற்றி எரிந்துகொண்டிருக்கும் மியன்மார் ரோஹிங்கிய பிஞ்சுகளின் கருகிய மேனியின் மேல்தான் 2017இன் சர்வதேச சிறுவர் தினம் மலர்ந்திருக்கிறது என்பது எத்தனை வேதனை தரும் விடயம்.

இதய சுத்தியுடன்தான் சிறுவர் தினம் கொண்டாடுகிறோம் என்று சொல்லுமானால் இவ்வருட சர்வதேச தின கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கோடிக்கனக்கான டொலர்களை ரத்தக்காயங்களுடன் பங்காளதேச அகதி முகாம்களில் துடித்துக்கொண்டிருக்கும் ரோஹிங்கிய சிறுவர்களுக்காக ஒதுக்கட்டுமே பார்க்கலாம்!

*எல்லாம் வெறும் பூச்சாண்டி* அவ்வளவுதான்மேற்கின் இந்த சர்வதேச தின மாபியாவுக்குள் *நாமும் நமது முஸ்லிம் பாடசாலைகளும் நமது பெற்றோர்களும் சிக்கிக்கொண்டிருப்பதுதான்* கவலை தரும் விடயமாகும்!

2 கருத்துரைகள்:

Post a comment