Header Ads



சமூகம் திட்டமிட்டு பழிவாங்கப்படும் என்ற, அச்சம் எங்களிடத்தில் உள்ளது - அமீர் அலி

- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்கின்ற தேர்தலாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை பசுமை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய வெய்யில் மனிதர்கள் (மொழி பெயர்ப்பு நாவல்), எனக்குள் நகரும் நதி (பத்தியெழுத்துத் தொகுதி) ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மை சமூகத்தினுடைய அபிவிருத்தி பற்றி, எதிர்கால இருப்பு பற்றி பேசுகின்ற தேர்தலாக நாங்கள் பார்க்கவில்லை. சிறுபான்மை சமூகத்தினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற தேர்தலாக மாத்திரம் பார்க்கின்றோம்.

ஒரு காலமும் இல்லாமல் இலங்கை வரலாற்றில் கிட்டத்தட்ட முப்பத்தி மூன்று பேர் ஜனாபதி தேர்தலுக்கு கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். சாதாரண உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கேட்பது போன்ற நிலவரம் ஜனாபதி தேர்தலுக்கு வந்துள்ளது.

நமது பிரதேசத்தில் முஸ்லிம்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பெயரில் இன்னொரு சக்திக்கு மறைமுகமாக சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர், செலுத்தவும் உள்ளனர். இதில் முஸ்லிம் சமூகம் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நமது பிரதேசத்தவன் என்ற எண்ணத்தில் வாக்களித்தால் ஒட்டு மொத்த முஸ்லிம் தலைவர்கள் எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு அநியாயம் செய்வதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்கின்ற தேர்தலாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறுபான்மை சமூகம் திட்டமிட்டு பழிவாங்கப்படும் என்ற அச்சம் எங்களிடத்தில் உள்ளது. நாங்களும் இந்த தேர்தலில் ஒரு அடையாளத்தை காட்ட வேண்டும் என்று முயற்சிக்கின்றார்கள். இந்த விடயத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் சமூகத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற அபாய எச்சரிக்கையை சொல்ல வேண்டும்.

அண்மையில் இந்து கலாசார அமைச்சினால் எழுத்தாளர்களை கௌரவித்ததை கண்டோம். ஆனால் முஸ்லிம் கலாசார அமைச்சு இருக்கின்றது. இனியாவது அவர்கள் சற்று கண் திறந்து பார்க்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.