Header Ads



ஹிஸ்புல்லாஹ்வின் ‘கணக்கு’

- மொஹமட் பாதுஷா -

ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்னர், அது தொடர்பில் ஓர் அனுமானமும் திட்டமும் இருக்கும். அது விடயத்தில் காணப்படும் நிகழ்தகவுகள் என்ன என்பது பற்றியும், இலாப நட்டம், அனுகூலங்கள், பிரதிகூலங்கள் பற்றியும் ஒரு திட்டவகுப்பு நிச்சமாக இருக்கும். இதை மனதால் கூட்டிக் கழித்துப் பார்த்தே, அந்தக் காரியத்தில் இறங்குவதா இல்லையா என்ற முடிவை எடுப்பது வழமை. இந்தத் தேர்தல் காலத்திலும், இவ்வாறான முடிவையே அரசியல்வாதிகள் எடுத்திருக்கின்றார்கள்.  

சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்‌ஷ, அநுர குமார திஸாநாயக்க தொடக்கம், இத்தேர்தலில் தனி முஸ்லிம் வேட்பாளர் என்ற சுலோகத்துடன் களமிறங்கியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வரை, எல்லோருக்கும் ஒரு மனக்கணக்கு இருக்கின்றது.   

இவர்களது எதிர்பார்ப்புகள், அனுகூலங்கள், அரசியல் இலாபங்கள் கொஞ்சமேனும் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என நம்பாத பட்சத்தில், வேட்பாளர்கள் யாரும் இப்படியொரு முடிவை எடுத்திருக்க மாட்டார்கள்; ஹிஸ்புல்லாஹ்வும் இதற்கு விதிவிலக்கல்ல.  

விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தால், கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியலில், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வகிபாகம் மிக முக்கியமானது. அவர், அதன் பெறுமதியை உணர்ந்து செயற்படுகின்றாரா என்பது தர்க்கத்துக்கு உரியது. ஆனால், மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நிறுவிய போது, அதில் இணைந்து கொண்டவர், 1989இல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.  

அஷ்ரபுக்குப் பின்னரான கிழக்கு அரசியலில், பெரும் அபிவிருத்திகளைச் செய்த இரண்டு அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். ஆனால், இவர் மு.காவை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டதில் இருந்து, கிழக்கு ஆளுநராக நியமிக்கப்படும் வரைக்கும், இவருடைய அரசியல் செயற்பாடென்பது, இவரது பிரதேசத்துக்கு உள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பின்புலங்களைக் கொண்ட ஹிஸ்புல்லா, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமை, இருவேறு கோணங்களில் பார்க்கப்படுகின்றது.  

“சுயேட்சையில், ஒட்டகச் சின்னத்தில் போட்டியிடும் இவர், ஏதோவொரு பெருந்தேசியக் கட்சியின் முகவராக, முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்து, வீணாக்கப் போகின்றார்; முஸ்லிம்கள் மீதான, இனவாத நெருக்குதல்களைத் தூண்டிவிடப் போகின்றார்” என்றும் ஒரு தரப்பு முஸ்லிம்கள், பரவலாக விமர்சிக்கின்றனர்.   

“இல்லை, இவரது வியூகம் சரியானது; இவர் சமூகத்துக்காகவே போட்டியிடுகின்றார். எனவே, நாம் ஏன் பிறருக்கு வாக்களிக்க வேண்டும்? அதைவிடுத்து, முஸ்லிம்களுக்கே வாக்களிக்கலாமே” என்று இன்னுமொரு தரப்பினர் எண்ணுகின்றனர்.  

இந்நிலையில், வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ், தனது முடிவுக்கான காரணங்கள், ஒட்டகத்தின் வியூகங்கள் பற்றி, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அம்பாறை மாவட்டங்களில் ஊடகவியலாளர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துச் சந்தித்து, விளக்கமளித்து வருவதுடன், மக்களுக்கும் தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருவதையும் காண முடிகின்றது.   



1989ஆம் ஆண்டுக்குப் பின்னர், நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்களில், பிரதான இரு வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் (2010ஆம் ஆண்டைத் தவிர) ஒரு சில இலட்சங்களாகவே இருந்திருப்பதைக் காண முடிகின்றது. 

2015ஆம் ஆண்டுத் தேர்தலில், மக்கள் விடுதலை முன்னணியும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்திருந்தது. இந்நிலையில், மைத்திரிக்கு 62 இலட்சத்து 17ஆயிரத்து 162 வாக்குகள் கிடைத்திருந்தன. மூன்றாவது தடவையாகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, 57 இலட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.   

எனவே, 4,49,072 வாக்குகள் வித்தியாசத்திலேயே மைத்திரி வெற்றி பெற்றார். அதாவது, இத்தேர்தலில் மைத்திரிக்கு அளிக்கப்பட்ட 2,25,000 வாக்குகள் மஹிந்தவுக்கு அளிக்கப்பட்டிருந்தால் மஹிந்த, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பார். எனவே, இத்தேர்தலில் மூன்று இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஆயுதங்களாகப் பயன்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. அதாவது மூன்று இலட்சம் பேர், மஹிந்தவுக்கு வாக்களித்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார்.  

இம்முறை, தேர்தலில் கடுமையான போட்டி நிலவுவதால், தேர்தல் ஆணைக்குழு மீள வலியுறுத்தி இருக்கின்ற விதிமுறைகளுக்கு அமைய, எந்தவொரு வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாத நிலையே காணப்படுகின்றது.   

“பெரும்பான்மைப் பலத்துடன் நாம் வெற்றிபெறுவோம்” என்று சஜித்,  கோட்டா தரப்புகள் சொன்னாலும், சுமார் ஏழு இலட்சம் வாக்குகளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற மக்கள் விடுதலை முன்னணி, தனியாகப் போட்டியிடுகின்ற ஒரு சூழலில், சஜித்தோ கோட்டாவோ 50 சதவீதத்தைத் தாண்டுவது என்பது சாத்தியமற்றதாகும்.  

அதேபோன்று, மக்கள் விடுதலை முன்னணி, தேர்தலில் இருந்து பின்வாங்கப் போவதும் இல்லை என்பதுடன், தமது திசைகாட்டிச் சின்னத்துக்கு வாக்களிக்கும் வேட்பாளர்களை, இன்னுமொரு கட்சிக்கு விருப்பத்தெரிவு வாக்களிக்குமாறு கோரும் என்பதற்கான அறிகுறிகளும் இதுவரை தோன்றவில்லை.   

எனவே, இத்தேர்தல் முடிவுகளின்படி, நான்காவது இடத்தில் உள்ள வேட்பாளருக்கு, இந்த நாட்டின் ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்யும் அபூர்வமான ஒரு வாய்ப்பு இருப்பதாக, ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார்.  

“எனக்கு நன்றாகத் தெரியும், என்னால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட முடியாது என்று; நான் களமிறங்கினால் என்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என்பதையும் நான் சில வேளைகளில் ‘ஸீரோ’ ஆகிவிடுவேன் என்பதையும் முன்கூட்டியே அறிவேன். என் குடும்பத்தினர், என்னைச் சுற்றியுள்ளவர்கள், உங்களுக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை என்று கேட்டார்கள். உண்மையில் நான் இந்தத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருக்கவில்லை. முஸ்லிம்கள் சார்பில் ஒரு தனி வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்றே நினைத்தேன். அதற்கு மிகப் பொருத்தமானவராக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைக் கருதினேன். ஆனால், அவர் ரணில் விக்கிரமசிங்கவின் முகாமில் இருந்தமையால் அது சாத்தியமற்றுப் போனது. வேறு வழியின்றியே நான் களத்தில் குதித்தேன்” என்கின்றார் ஹிஸ்புல்லாஹ்.  

அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், கேள்விகளுக்கு விடையளித்துப் பேசிய ஹிஸ்புல்லாஹ், “நான் ஜனாதிபதியாவதற்காகப் போட்டியிடுபவன் அல்ல; மாறாக, ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் நான். அநுர குமார திஸாநாயக்க போட்டியிலிருந்து விலகிக் கொள்ளாத பட்சத்தில், எப்படிப் பார்த்தாலும் இந்த வியூகம் வெற்றிபெறும் என்றே நம்புகின்றேன்” என்று கூறினார்.  

முஸ்லிம்களிடம் இருந்து ஒன்று தொடக்கம் இரண்டு இலட்சம் வாக்குகளை இவர் எதிர்பார்க்கின்றார். அதற்காகக் கடுமையான பிரசாரங்களிலும் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றார்.   

தமக்கு வாக்களிக்க எண்ணும் மக்களை, சஜித்துக்கோ கோட்டாவுக்கோ நேரடியாக வாக்களிக்குமாறு கோராமல், இரண்டாவது தெரிவு அதாவது விருப்பு வாக்கின் ஊடாக இவர்களுள் ஒருவருக்கு வாக்களிக்கக் கோருவதற்கு, ஹிஸ்புல்லாஹ் திட்டமிட்டிருக்கின்றார்.  

முதலாவது சுற்று வாக்கெண்ணும் நடவடிக்கையில், எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாது போகவே, சாத்தியங்கள் உள்ளன. அந்த நேரத்தில், இரண்டாவது சுற்றுக்காகப் பிரதான இரு வேட்பாளர்கள் தவிர்ந்த மற்றவர்களின் வாக்குகளில் உள்ள விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.  

இந்நிலையில், ஹிஸ்புல்லாஹ்வின் ஒட்டகத்துக்குப் பிரதான வாக்கை அளித்த வாக்காளர்கள், அவரால் முன்மொழியப்படும் பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு விருப்பத் தெரிவை, அதாவது இரண்டாவது விருப்பு வாக்கை அளிப்பார்களாயின், அதன்மூலம் அவரை ஜனாதிபதியாக்க முடியும் என்பதே ஹிஸ்புல்லாஹ்வின் கணக்காகும்.  

இதன்படி, எப்படிக் கணக்குப் பார்த்தாலும் இவ்வியூகம் பிழைத்துப் போகாது என்று கூறுகின்ற அவர், சாத்தியமுள்ள எந்தச் சூழலிலும் எப்படித் தம்மால் ஜனாதிபதியைத் தீர்மானிக்க முடியும் என்பதற்கு, அடுக்கடுக்காகப் பல கூட்டல் கழித்தல் கணக்குகளையும் மக்களுக்கு முன்வைக்கின்றார்.  

இவ்வளவு காலமும் முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைத்து, அரசாங்கங்களிடமும் ஆட்சியாளர்களிடமும் முறையான பேரம் பேசல்களை மேற்கொள்ளவில்லை.  குறைந்தபட்சம், முஸ்லிம்களின் வாக்குகளாலேயேதான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன் என்பதைக் கூட, எந்த ஜனாதிபதியும் நன்றியுடன் நினைவு கூரவில்லை என்பதென்னவோ உண்மைதான்.  

எனவேதான், வெற்றிபெறக் கூடிய வேட்பாளருடன் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைத்து, தமது கோரிக்கைக்கு உடன்படும் ஒரு வேட்பாளருக்கு இரண்டாவது வாக்கை (விருப்பு வாக்கை) வழங்கச் செய்யத் தீர்மானித்துள்ளதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேடைகளில் கூறி வருகின்றார்.  

ஹிஸ்புல்லாஹ், எந்தவித மறைமுக நிகழ்ச்சி நிரலும் இல்லாமலேயே களமிறங்கி இருக்கின்றார் என்றால், அவரது முயற்சியையும் தைரியத்தையும் பாராட்ட வேண்டும்.   
இருப்பினும் இதில் பல பாதகங்கள், சிக்கல்கள், நிச்சயமின்மைகள் போன்றவை இருக்கவே செய்கின்றன. இவை இனவாத நெருக்குவாரங்களுக்குப் புறம்பானவையாகும்.  

இலங்கையில் 16 இலட்சத்துக்கும் சற்று அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். 12 தொடக்கம் 13 இலட்சம் பேர் வாக்களிக்கலாம். ஆனால், இலங்கையில் இதுவரை முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள், 40ஆயிரத்தைத் தாண்டவில்லை.  

இந்நிலையிலேயே, கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 16 ஆயிரத்துக்குச் சற்றுக் குறைவான வாக்குகளைப் பெற்று, சொற்பளவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போன ஹிஸ்புல்லாஹ், இப்போது தனி முஸ்லிம் வேட்பாளர் சுலோகத்துடன் இரண்டு இலட்சம் வாக்குகளைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளார். அவருக்கு, இந்தளவுக்கு வாக்குகள் கிடைக்குமா எனத் தெரியவில்லை.  

இவர் ஒரு மறைமுகத் திட்டத்தோடு, முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கத்தோடு, குறிப்பிட்ட ஒரு கட்சிக்குப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தோடு களமிறங்கியுள்ளதாக, ஒரு சந்தேகம், மக்களுக்கு ஏற்பட்டுள்ளமையாலும், இதனை ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் பரப்புரை செய்வதாலும், இவரது கணக்கின்படி வாக்குகள் கிடைப்பதில் தடைகள் உள்ளன.  

சரி! ஜனாதிபதியை தீர்மானிப்பதற்குத் தேவைப்படும் அளவுக்கு, இரண்டு இலட்சம் வாக்குகளை இவர் பெறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றாலும், பல அரச உத்தியோகத்தர்கள் உட்பட, அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்படுகின்ற ஒரு நாட்டில், இரண்டாவது தெரிவு வாக்கை, நிராகரிக்கப்படாத விதத்தில், மிகச் சரியாக அடையாளமிடுவதற்கு எவ்வாறு வாக்காளர்களை இரு வாரங்களுக்குள் அறிவூட்டப் போகின்றீர்கள் என்ற கேள்விக்கு, ஹிஸ்புல்லாஹ்விடமே பதில் இல்லை.   

அத்துடன், இவ்வாறு வாக்குகளைப் பெற்ற ஹிஸ்புல்லாஹ் சமூகத்துக்கான சரியான பேரம் பேசலை மேற்கொள்ளாமல் விட்டாலோ, அன்றேல் ஒருவேளை, ஒட்டகத்தின் வாக்குகள் மொட்டுக்கோ, அன்னத்துக்கோ அவசியப்படாத ஒரு நிலைமை ஏற்படுமாயின், இந்த முயற்சி வீணாகிப் போய்விடலாம்.  

எனவே, இந்த நிலைமைகள் எல்லாம் சாதகமாக அமைந்தால் மாத்திரமே, தனி முஸ்லிம் வேட்பாளரான ஹிஸ்புல்லாஹ் போட்டுள்ள கணக்குக்கு, அவர் நமக்குப் பிரசாரம் செய்வதுபோல, சரியான விடை கிடைக்கும்.  

3 comments:

  1. The method you have taken is not suitable for President election but this is possible in Parliment election because minority parties can be a deciding factor when forming a Government. Winning candidate need 50% plus 1 vote to become a President so this can be possible because third party (JVP) vote base is around 5%.
    Please compare the last President and parliment election. JVP has taken most of the PA votes in parliment election that was polled in President election. So my opinion is JVP will take most of the SLPP votesthan UNP. So UNP candidate easily reach 50% in this election.
    Please follow comparison of UNP and PA in last President and Parliment election of about 90% Sinhala population in certain districts.
    Maithree (%) UNP (%) Mahinda (%) PA (%)
    District Prsesident General President General Election.
    Galle 43% 42% 55% 50%
    Matara 41% 39% 58% 52%
    Hambantota 36% 35% 63% 54%
    Kurunegala 45% 46% 53% 49%
    Anuradhapura 45% 45% 53% 48%
    Moneragala 37% 42% 61% 52%
    Ratnapura 43% 45% 55% 51%
    Kegale 47% 49% 52% 45%

    Please understand mostly PA votes has gone to JVP in Parliment election so SLPP vote base % in this election will reduce due to JVP.

    ReplyDelete
  2. This ridiculous idea elicits that Mr.Hisbullah doesn't know the ABC
    Of a SL Presidential election

    ReplyDelete

Powered by Blogger.