October 31, 2019

அகதிகளில் ஒருவனாக நின்று, அவலத்தை அனுபவித்தவன் நான் - றிசாத் உருக்கம்

வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து, இழந்து போன நமது சமூகத்தின் உரிமைகளை  பெற்றுக்கொடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னை முழுமையாக தொடர்ந்தும் அர்ப்பணிக்குமென  அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

வடபுல அகதிகள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் (31) 29 வருடங்கள் நிறைவடையும் நிலையில், இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வரும் மக்கள் துரிதகதியில் மீள்குடியேறவும், மீள்குடியமர்ந்து இன்னும் அடிப்படை வசதிகள் நிறைவுபெறாத வகையில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்பிலும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களுக்காக இன்றைய நாளில் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.  

1990ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் வடக்கு முஸ்லிம்களுக்கு நேர்ந்த அவலத்தை, அகதிகளில் ஒருவனாக நின்று அனுபவித்தவன் என்ற வகையில் நாம் பட்ட வலிகளை நினைத்துப்பார்க்கின்றோம் . சொந்த இடங்களிலிருந்து துரத்தப்பட்டு, ஒரே நாளில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு  கடல் வழியாகவும் , தரை வழியாகவும் நாள் கணக்கில் நடந்து தென்னிலங்கை வந்தபோது நமது சகோதரர்கள் எங்களை அரவணைத்து முடிந்தளவு வசதிகளை செய்து தந்த்தை நன்றி உணர்வுடன் நினைத்துப்பார்க்கின்றோம்.

புத்தளம் வாழ் மக்கள் வடபுல அகதிகளை பெருமளவு உள்வாங்கி தமது வீடுகளிலும், பாடசாலைகளிலும், மதராசக்களிலும், தோட்டங்களிலும்  தற்காலியமாக குடியேற்றி ஆசுவாசுப்படுத்தினர். பசி பட்டினியுடன் வெறுங்கையோடு வந்த அகதிகளான எம்மை ஆதரித்து, அனுசரித்து முடிந்தளவு உதவி வழங்கிய  நல்லுள்ளங்களை நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றோம். வடபுல முஸ்லிம்கள் தென்னிலங்கையின் புத்தளம், குருநாகல், அநுராதபுரம் , நீர்கொழும்பு, பாணந்துறை  உள்ளடங்கிய முஸ்லிம்களையும் பரோபகாரிகளையும் எந்தக் காலத்திலும்  மறப்பதற்கு இல்லை.

கடந்த காலத்தில் வடக்கிலே மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றன. தற்போதும் அந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இருந்த போதும் இன்னும் முழுமையாக பூரணப்படுத்தப்படவில்லை. அமைச்சராக இருந்து என்னாலான முழு முயற்சிகளையும் உதவிகளையும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மேற்கொண்டிருக்கின்றேன் மேற்கொண்டும் வருகின்றேன். என்ற திருப்தி நிரம்ப உண்டு. இனிவரும் காலங்களிலும் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் ஈடுபட்டு என்னாலான பணிகளை மேற்கொள்வேன். வடபுல முஸ்லிம்களாகிய நீங்கள் கடந்த காலங்களில் மீள்குடியேற்ற முயற்சிக்கு எவ்வாறன ஒத்துழைப்பை வழங்கினீர்களோ அதேபோன்ற ஒத்துழைப்பையும் உத்வேகத்தையும் வழங்குவீர்கள் என நம்புகின்றேன். 

2 கருத்துரைகள்:

வடக்கில் வாழ்ந்த அனைத்து மக்களும் யுத்ததினால் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அகதி வாழ்க்கை அனுபவித்தவர்கள் தான்

பாரபட்சமில்லாத உங்கள் சேவையினை அல்லாஹ் பொருந்திக்கொள்வான்.
எம் தமிழ் சகோதர்களின் மீள் குடியேற்ற அபிவிருத்திகளிலும் பங்கெடுத்து அவர்களையும் எம்மோடு அரவணைத்து உங்கள் அரசியல் பயணத்தை தொடரும்போது எந்த அடிவருடிகளாலும் உங்களை இனவாதம் பேசி வீழ்த்திட முடியாது- தமிழ் முஸ்லீம் உறவின் பாலமாக உங்களையே கருதுகிறோம்.நன்றி
மர்சூக் மன்சூர்- தோப்பூர்

Post a Comment