Header Ads



எனது தந்தை இருந்திருக்காவிட்டால் மஹிந்த இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார்

எனது தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர இருந்திருக்காவிட்டால் மஹிந்த இந்த நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

என்னுடைய தந்தையார் கடந்த 2011 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். தனது 19 ஆவது வயதில் அரசியலில் பிரவேசித்த அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். சந்திரிகா குமாரதுங்கவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய அதேவேளை, பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிற்காக தனது அரசியல் பயணத்தை முழுமையாக அர்ப்பணிப்புச் செய்திருந்தார் என்பது சுதந்திரக் கட்சியில் அனைவரும் அறிந்த விடயமாகும். 

2010 ஆம் ஆண்டில் எமது கொலன்னாவ பிரதேச ஆசனத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ துமிந்த சில்வாவை நியமித்தார். அப்போது எனது தந்தை சற்று வருத்தமடைந்த போதிலும், இனிவரும் காலத்தில் இளைஞர்களுக்கு இடமளிக்க வேண்டுமெனத் தீர்மானித்து துமிந்த சில்வாவிற்கு ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறினார். 

எனினும் அதனைத் தொடர்ந்து கொலன்னாவ பிரதேசத்தில் வாழும் பலர் தமது பிள்ளைகள் முன்னரைப் போன்று அன்றி அவர்களுடைய நடவடிக்கைகளில் வித்தியாசமிருப்பதாகவும், பிள்ளைகள் பெற்றோருடன் சச்சரவில் ஈடுபடுவதாகவும் எனது தந்தையாரிடம் கூறினார்கள். 

அதனைத் தொடர்ந்து முன்னர் எப்போதும் இல்லாதவகையில் 500 இற்கும் மேற்பட்ட போதைப்பொருள் விற்குமிடங்களை எனது தந்தையார் கண்டறிந்தார். 

எனவே அவர் மிகுந்த கோபமடைந்து, இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துமாறு எனது தந்தை துமிந்த சில்வாவை எச்சரித்தார். எனினும் அவர் நிறுத்தவில்லை. அதனால் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒருநாளில் நிகழ்வொன்றில் ஆற்றிய தனது உரையில் இதுகுறித்து எனது தந்தை குறிப்பிட்டார். அதனையடுத்து இரு தினங்களின் பின்னர் 'பாரதலக்ஷ்மன் அதிகம் பேசுவதாகவும், அவருடைய கருத்துக்களால் தனக்கும் துமிந்த சில்வாவிற்கும் கரும்புள்ளி ஏற்படுவதாகவும் எனவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்றும் கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினார். 

அதன்பின்னர் ஒக்டோபர் 8 ஆம் திகதி எனது தந்தை படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மஹிந்த, கோத்தபாய கலந்துரையாடிய இடத்திலிருந்த மேர்வின் சில்வா சி.ஐ.டி அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானமைக்கு பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவே காரணம் என்று பலர் கூறியதுண்டு. அது நிதர்சனமான உண்மை. மஹிந்தவிற்காக எனது தந்தை எவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என்பதை நான் அவதானித்திருக்கிறேன். 

எனது தந்தை இருந்திருக்காவிட்டால் மஹிந்த இந்த நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

No comments

Powered by Blogger.