Header Ads



'ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறையும் சிறுபான்மை சமூகங்கள்'

கடந்த கால அரசியல் வரலாற்றில் இருவருக்கிடையில் மாத்திரமே போட்டி  காணப்படுவது வழக்கம்.  இம்முறை வித்தியாசமான தேர்தல் சூழலொன்று  ஏற்பட்டுள்ளது. இரு நபர்களுக்கிடையில் அதிகமான போட்டி காணப்பட்டாலும்,  மற்றைய வேட்பாளர்கள் இருவரும் கணிசமான வாக்குகளைப் பெறக் கூடியவர்களாக  இருக்கின்றனர். அவர்கள் மாற்றீடான அரசியலுக்கான தெரிவுகளாகப் பார்க்கப்படுவதால், நிச்சயம் இம்முறை வாக்கு எண்ணிக்கைகளில் பாரிய  வேறுபாடுகளைப் பார்க்கக் கூடியதாகவிருக்கும்

எந்தவொரு வேட்பாளரும் 50வீதத்துக்கும்  அதிகமான வாக்குகளைப் பெற முடியாத நிலைமை ஏற்படலாம் என அரசியல் அவதானிகள்  எதிர்வுகூறுகின்றனர். அப்படியானதொரு நிலை ஏற்படுமாயின் வாக்களிப்பின் போது  வாக்காளர்களுக்கு இரண்டாவது தெரிவையும் முன்வைக்க வேண்டி ஏற்படலாம். இது இலங்கை வாக்காளர்களுக்கு நிச்சயம் புதியதொரு அனுபவமாக  இருக்கப் போகிறது     

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் 42நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், போட்டிக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர் யார் என்ற விடயத்தில் நீண்ட இழுபறியில் இருந்த பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தமக்குள் காணப்பட்ட சிக்கல்களுக்கு ஒருவாறு தீர்வைக் கண்டு அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவே வேட்பாளர் என அறிவித்துள்ளது.

ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டு தேர்தல் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 'அன்னம்' சின்னத்தில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகின்ற போதும், கூட்டணிக்கான சின்னம் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இதற்கிடையில் மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஊழல் மோசடி நிறைந்த அரசியலுக்கு அப்பால் புதிய நாட்டை வழிநடத்தக் கூடிய ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்ற பொதுவான எண்ணம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்த எண்ணப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு புதிய நபர் ஒருவரும் தேர்தலில் இறக்கப்பட்டுள்ளார். அண்மையில் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவே அரசியலுக்குப் புதுமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

தேசிய மக்கள் இயக்கம் சார்பில் அதாவது சிவில் சமூகங்களின் பிரதிநிதியாக அவர் தேர்தலில் போட்டியிடுகின்றார். குறிப்பாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம், முன்னாள் புலனாய்வுத்துறை ஆய்வாளர் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்ட தேசிய மக்கள் இயக்கம் சார்பில் மகேஷ் சேனாநாயக்க களமிறக்கப்பட்டுள்ளார். மாற்றத்தை விரும்பும் நடுத்தர மக்களின் பிரதிநிதியாகவும், நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் அதிக கரிசனையை வெளிப்படுத்தும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாற்றீடாகவும் இவருடைய தெரிவு அமைந்துள்ளது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 மகேஷ் சேனநாயக்கவின் வரவைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதுடன், எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நான்கு முனைப்போட்டியாக அமையப் போவது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும், தேசிய மக்கள் சக்தி அமைப்பின் சார்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் இயக்கம் சார்பில் மகேஷ் சேனாநாயக்கவும் போட்டியிடுகின்றனர்.

 கடந்த கால அரசியல் அனுபவத்தில் இரு நபர்களுக்கிடையில் மாத்திரமே போட்டி காணப்படுவது வழக்கம். எனினும் இம்முறை வித்தியாசமான தேர்தல் சூழலொன்று ஏற்பட்டுள்ளது. இரு நபர்களுக்கிடையில் அதிகமான போட்டி காணப்பட்டாலும் மற்றைய வேட்பாளர்கள் இருவரும் கணிசமான வாக்குகளைப் பெறக் கூடியவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக மாற்றீடான அரசியலுக்கான தெரிவுகளாகப் பார்க்கப்படுவதால் நிச்சயம் இம்முறை வாக்கு எண்ணிக்கைகளில் பாரிய வேறுபாடுகளைப் பார்க்கக் கூடியதாகவிருக்கும்.

 பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எந்தவொரு வேட்பாளரும் 50வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாத நிலைமை ஏற்படலாம் என அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர். அப்படியானதொரு நிலை ஏற்படுமாயின் வாக்களிப்பின்போது வாக்காளர்களுக்கு இரண்டாவது தெரிவையும் முன்வைக்க வேண்டி ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இது இலங்கை வாக்காளர்களுக்கு நிச்சயம் புதியதொரு அனுபவமாக இருக்கப் போகிறது. இதற்கு முன்னரும் ஒரு தடவை இரண்டாவது தெரிவு வழங்கப்பட்ட போதும், அதற்கான தேவை ஏற்பட்டிருக்கவில்லை. எனினும், நாட்டில் தற்பொழுது காணப்படும் அரசியல் சூழ்நிலையில் இரண்டாவது தெரிவொன்றை நோக்கி செல்ல வேண்டிய தேவையை மக்கள் உருவாக்குவார்கள் என்றே பெரும்பாலும் எண்ணப்படுகிறது.

இதுஇவ்விதமிருக்க, பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவது தொடர்பில் புதியதொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தமை புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இலங்கையில் குடியுரிமை இல்லாத நபர் ஒருவர் ஆள் அடையாள அட்டையைப் பயன்படுத்தி எவ்வாறு வாக்களிக்க முடியும் என்ற பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு எதிர்வரும் சில தினங்களில் இது குறித்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இத்தீர்ப்பு கோட்டாபயவுக்கு சாதகமாக அமையாவிட்டால் மாற்று வேட்பாளர் குறித்தும் அக்கட்சி ஆராய்ந்து வருவதாகத் தெரியவருகிறது. எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை மாற்று வேட்பாளராகக் களமிறக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன.

அது மாத்திரமன்றி, முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவின் பெயரும் கூறப்படுகிறது. கோட்டாபயவை வேட்பாளராக அறிவிப்பதில் ஆரம்பத்திலிருந்தே மஹிந்த ராஜபக்ஷவுக்கு முழுமையான திருப்தி இருக்கவில்லையென கூறப்பட்டு வந்த நிலையில், இரட்டை பிரஜாவுரிமை விவகாரம் கோட்டாபய போட்டியிடுவதற்கு தடையாக அமைந்து விடலாம் எனக் கூறப்படுகிறது.

அப்படியானதொரு நிலைமை ஏற்பட்டால், ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு அலை அதிகரிக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏழை மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் என வர்ணிக்கப்படும் சஜித் பிரேமதாசவுக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமட்டத்தில் ஆதரவு காணப்படுகிறது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாச இனவாதம் அற்ற தலைவராக நோக்கப்படுகின்றார். இவ்வாறான பின்புலத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகள் யார் ஜனாதிபதி என்பதைத் தேர்ந்தெடுப்பதில் கணிசமான பங்காற்றுவதாக அமையும்.

சாரங்கன்...

No comments

Powered by Blogger.