Header Ads



தொண்டமானின் 30 அம்சக் கோரிக்கைகளை, நிறைவேற்றுவதாக கோத்தபய வாக்குறுதி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 30 அம்சக் கோரிக்கைகளையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் இதனை அடிப்படையாக வைத்தே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு, இ.தொ.கா தீர்மானித்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

“ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக சபையும் தேசிய சபையும், கொட்டகலையில் இன்று காலை 9 மணிக்குக் கூடின.

இதன்போது பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.  தேசிய சபையில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இ.தொ.காவின் கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடி அறிக்கையைச் சமர்பிக்குமாறு, இ.தொ.காவின் உப தலைவர்களான செந்தில் தொண்டாமன், எம்.ரமேஸ்வரனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, மேற்படி இருவரும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன்,  கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை அறிக்கையாக இன்றைய தேசிய சபைக் கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், இவ்விடயங்கள் குறித்து, இன்றைய நிர்வாக சபையிலும் தேசிய சபையிலும் கலந்துரையாடப்பட்டு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜா தலைமையில், ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்குவது என்று, ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த 30 அம்சக் கோரிக்கைகளையும் ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் 30 அம்சக் கோரிக்கைகளை வெளியிடுவதாக மொட்டுக் கட்சி உறுதிமொழி வழங்கியுள்ளது என்றும் இதற்கமைவாகவே, தாம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றிபெற்றவுடன் 30 அம்சக் கோரிக்கைகளையும்  குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றி முடிக்கவுள்ளதாக, மொட்டுக்கட்சி  உறுதிமொழி வழங்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.