September 14, 2019

மக்கள் சேவகன், அன்வர் இஸ்மாயில்

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2001 முதல் 2007 வரை சட்டத்தரணி எம்.ஐ. அன்வர் இஸ்மாயில் பணியாற்றினார். மிகவும் இளம் வயதில் பாராளுமன்றத்துக்குச் சென்று, குறுகிய காலத்துக்குள் அமைச்சராகி தனது பிரதேசத்துக்கும் தேசியத்துக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியன.

அவர் மறைந்து 12 வருடங்கள் கடந்த போதும், இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் குறுகிய காலத்துக்குள் தன்னை அர்ப்பணித்து சேவை புரிந்தார்.

சம்மாந்துறையில் எம்.எம். இஸ்மாயில் ஆசிரியர்_எம்.எம். சுபைதா தம்பதியராக 1967 ஜுலை 16 ஆம் திகதி இவர் பிறந்தார்.தான் பிறந்த ஊரை அபிவிருத்தி செய்வதில் முனைப்புடன் செயற்பட்டார். கிழக்குப் பிரதேசத்தில் ஊர் வரவேற்பு முகப்புத் தோற்றமும் உலமாக்களின் தலைமைக் காரியாலயமும், மேற்கில் வரவேற்பு முகப்புத் தோற்றத்துடன் ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நிலையமும், தொழிற் பயிற்சி நிலையமும், நீர்ப்பாசன காரியாலயமும், தென் பகுதியில் நெயினாகாடு பிரதேசத்தில் நவீன முறையில் அமையப்பெற்றுள்ள மூன்று பாலங்களும், மத்திய பகுதியில் ஹிஜ்றா சந்தையின் அழகுத் தோற்றமும், தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் செந்நெல் கிராமத்துக்கான பாரிய நீர் வழங்கல் திட்டமும் இன்றும் அவரது நாமத்தை பேசிக் கொண்டிருக்கின்றன.

தான் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த இரு வருட காலத்துக்குள் அன்வர் இஸ்மாயில் சம்மாந்துறை தொகுதி மக்களின் உள்ளங்களில் தனியானதொரு இடத்தைப் பெற்றுக் கொண்டார். இப்பிரதேச மக்களின் உணர்வுகளுக்கு மாற்றமாக அப்போதைய அரசாங்கம் செயற்பட்டபோது அதுதொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் நடவடிக்கைகளையும் விமர்சனத்துக்குட்படுத்தினார். பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்ட போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, மரச் சின்ன த்தில் போட்டியிட்டால்தான் வெற்றி பெறலாம் என்ற நிலைப்பாட்டை மாற்றியமைத்தார்.

கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல. தனிமனித ஆளுமைதான் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதற்கு முன்னுதாரணமாக அன்வர் இஸ்மாயில் பார்க்கப்படுகின்றார்.

2004 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தான் போட்டியிடாத போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக பிரசாரம்செய்து தனது தொகுதியில் அதன் வெற்றியை உறுதிப்படுத்தினார். இதற்கு நன்றிக்கடனாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கியதோடு கிழக்கு உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் பதவியையும் வழங்கினார்.

2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட போது நீர்ப்பாசனத்துக்கென தனியான அமைச்சொன்றை உருவாக்கி அதற்குப் பொருத்தமானவராக செயற்திறன்மிக்க இளைஞர் அன்வர் இஸ்மாயிலைத் தெரிவு செய்தார். தான் பதவிவகித்த ஒரு வருட காலத்துக்குள் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை ஆரம்பித்துவைத்தார்.

சம்மாந்துறைத் தாயை அழகாக அலங்கரிக்க வேண்டுமென்பதில் தணியாத தாகம் கொண்டவராக அவர் செயற்பட்டார்.

மர்ஹும் அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் அவரின் கனவை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தினார். அரச அரச சார்பற்ற நிறுவனங்களினதும், வெளிநாட்டு தூதுவர்களினதும் ஒத்துழைப்பைப் பெற்று அர்ப்பணிப்புடன் உழைத்தார்.

மர்ஹூம் அஷ்ரஃப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையேயிருந்த புரிந்துணர்வு காரணமாக உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதியை அழைத்துவர வேண்டுமென்று அஷ்ரஃப் ஆசைப்பட்டிருந்தார். அதற்கேற்ப மூன்றாவது பட்டமளிப்பு நிகழ்வுக்கு அவரை அழைத்து வந்ததன் மூலம் இப்பல்கலைக்கழகத்துக்கும் மாணவர்களுக்கும் கௌரவத்தினையும் பெருமையையும் தேடிக் கொடுப்பதில் முனைப்புடன் அன்வர் இஸ்மாயில் செயற்பட்டார். அறபு இஸ்லாமிய கற்கைநெறி பீடத்தை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தார்.

அன்வர் தனது பெயருக்கேற்ப செயற்பட்டு தனது ஊரை பிரகாசமிக்க ஊராக மாற்றியவர். இன்றும் மண்ணின் மைந்தனாக கட்சிபேதமின்றி அனைவராலும் நேசிக்கப்படுகின்றார். அன்வர் உலகை விட்டுப் பிரிந்து 12ஆண்டுகள் கடந்த போதும், அவரது ஆதரவாளர்களின் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

0 கருத்துரைகள்:

Post a comment