Header Ads



தாமரை கோபுரம் விவகாரத்தில், சீனாவுக்கான இலங்கை தூதுவரின் அறிக்கை

தாமரை கோபுர வேலைத்திட்டத்தில் இணைந்திருந்த எலிட் (ALIT) என்ற நிறுவனம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு எவ்வித அறிவித்தலையும் மேற்கொள்ளாமல் குறித்த திட்டத்தில் இருந்து விலகியதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

குறித்த நிறுவனம் தொடர்பில் ஆராயுமாறு, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தன்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அறிவித்ததாகவும், அதன்படி தான் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 16 ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுரத்தை திறக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமரை கோபுர நிர்மாணத்திற்காக சீனாவின் எலிட் என்ற நிறுவனத்திற்கு கடந்த அரசாங்கத்தால் 200 கோடி ரூபாய் வழங்கப்படுள்ளதாகவும், பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததில் அவ்வாறான நிறுவனம் ஒன்று எங்கும் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். 

அதனை தொடர்ந்து, தாமரை கோபுர திட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த நிதி மோசடி தொடர்பில் பல்வேறுபட்ட பேச்சுக்கள் அடிப்பட்ட சூழலில், சீனாவுக்கான இலங்கை தூதுவர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். 

எலிட் என்ற நிறுவனம் வேறு ஒரு இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டதை அறிந்துக் கொள்ள கிடைத்ததாகவும், அது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு எவ்வித அறிவிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

பின்னர் தான் அந்த இடத்திற்கு சென்று எலிட் நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்ததாகவும், குறித்த நிறுவனம் அந்த வேலைத்திட்டத்தில் இருந்து விலகியுள்ளதாக அவர்கள் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் தன்னால் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.