Header Ads



எமது நாட்டுக்கு சர்வாதிகாரிகள் தேவையில்லை, எந்த தியாகத்தையும் செய்ய ரணில் தயார் - கபீர்

ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக எந்த தியாகத்தையும் செய்ய பிரதமர் தயாராக இருப்பதாகவும் நாட்டில் அதிகமான மக்கள் கோரும் தலைவரை கட்சி வேட்பாளராக நிறுத்த தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

எப்பாவள நகரில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பு 7 இல் உள்ள பொருளாதார பண்டிதர்கள், சாராய நிறுவனங்களில் உள்ள பெண்மணிகள், அவர்களின் துரைமாருக்கு ஒப்பந்தங்கள் கிடைப்பதில்லை என்பதாலும் கொள்ளையடிக்க முடியவில்லை என்பதாலும் எமது அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்துகின்றனர்.

இதனால், வியத் மக என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். 20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தார்கள். நாட்டை அபிவிருத்தி செய்ய அவர்களுக்கு 20 ஆண்டுகள் போதவில்லையா?.

10 ஆண்டுகள் மகிந்த ராஜபக்சவுக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரமும், மாகாணங்களின் அதிகாரமும் இருந்தது.

ஜே. ஆர்.ஜெயவர்தனவின் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மகிந்தவுக்கு பெண்ணை ஆணாகவும் ஆணை பெண்ணாகவும் மட்டுமே மாற்ற முடியாது இருந்தது. ஏனைய அனைத்து அதிகாரங்களும் அவருக்கு இருந்தன. எனினும் எதனையும் செய்யவில்லை.

மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்களின் நிறுவனங்கள் போஷிக்கப்பட்டு, அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்தனர். அவர்கள் தமது கைகளை பலப்படுத்திக்கொண்டனர்.

மக்கள் வீதியில் இறங்கினால், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக நேரிட்டது. அத்துடன் வெள்ளை வானில் தூக்கிச் சென்றனர். இதுதான் அந்த காலத்தில் இருந்த கலாசாரம். தற்போது பெரிய வைபவங்களை நடத்தி மக்கள் கோரும் வேட்பாளரை நிறுத்துவதாக கூறுகின்றனர். பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ராஜபக்ச வளவில் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச பெரிய நாற்காலியில் அமர்ந்திருப்பதுடன் ஏனையோர் சிறிய ஆசனங்களில் அமர்க்கின்றனர். ஏற்ற தாழ்வு முறையை அதன் மூலம் காண்பித்தனர். எமக்கு சர்வாதிகாரி வேண்டுமா அல்லது தலைவர் வேண்டுமா?.

சண்ட அசோக மன்னன் பெரிய அழிவை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்த பின்னர், பௌத்த துறவியின் போதனைகளை கேட்டு, சண்ட அசோகர் தர்ம அசோக மன்னராக, தர்மத்தின் அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்ய ஆரம்பித்தார் என்பது பௌத்தர்களாகிய உங்களுக்கு தெரியும்.

எமது நாட்டுக்கு தேவை சர்வாதிகாரிகள் அல்ல. நாட்டு மக்கள் வறுமையை அறிந்த, மக்கள் மட்டத்திற்கு சென்று பேசக் கூடிய தலைவரே தேவை. அப்படியான தலைவரையே ஐக்கிய தேசியக் கட்சி உங்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளது. அந்த தலைவர் மக்கள் கோரும் உண்மையான தலைவர். வீட்டு சமையல் அறையில் தெரிவு செய்யும் தலைவர் அல்ல எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.