Header Ads



உஸ்தாத் மன்ஸூரின் நூல் வெளியீட்டில், பாராட்டப்பட வேண்டிய சில விடயங்கள்

2019.09.03 ஆம் திகதி கொழும்பு, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் லோட்டஸ் அரங்கில் பிரம்மாண்டமான அமைப்பில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டேன்.
நூல் அறிமுகம் செய்யும்போது எதற்காக வெளியீட்டு நிகழ்வு குறித்துச் சொல்ல வேண்டும் எனச் சிலருக்குத் தோன்றலாம்.
நூல் வெளியீட்டு நிகழ்வொன்று, அதுவும் ஓர் இஸ்லாமிய நூல் வெளியீட்டு நிகழ்வொன்று எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த முன்மாதிரியாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
ஒரு முஸ்லிம் எந்தவொரு விடயத்தையும் மிகச் சிறப்பாகச் செய்வான், செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டிய நிகழ்வாக அது அமைந்திருந்தது.
எந்தப் பிரபலங்களுக்காகவும் முதற்பிரதி வாங்கும் புரவலருக்காகவும் நிகழ்வு காத்திருக்கவோ தாமதிக்கவோ இல்லை.
அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தபடியே 
நிகழ்வு குறித்த நேரத்தில் ஆரம்பமானது.
அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பிமல் ரத்னாயக்க போன்றோரும் பார்வையாளர்கள் மத்தியில் சாதாரணமாக அமர்ந்திருந்ததைக் கண்டேன்.
முழு அரங்கும் நிரம்பி வழிந்தது. மாற்றுமதத் தலைவர்கள், அதிகமான மாற்றுமதச் சகோதரர்கள், சகோதரிகள், ஏராளமான கல்விமான்கள், அறிஞர்கள், கலைஞர்கள் வருகை தந்திருந்தனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கல்கந்தே தம்மானந்த தேரர், பேராசிரியை சித்ரலேகா மெளனகுரு, ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஸப்ரி ஆகியோர் உரைகள் நிகழ்த்தினர்.
அரங்கை மெருகூட்டிய இரண்டு விடயங்களைச் சொல்ல வேண்டும். முதலாவது, வழக்கம் போல நிகழ்வின் தொடக்கத்தில் பெரிய தாடி, ஜுப்பா, தலைப்பாகை அணிந்த ஓர் ஆலிமோ, அல்லது ஒரு சிறுவனோ சிறுமியோ கிறாஅத் ஓதவில்லை ! மாறாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பிய அந்த அரங்கில் கம்பீரமான தோற்றத்தில், கணீரென்ற குரலில் இனிமையாகக் குர்ஆனின் சில வசனங்களை ஓதியவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கற்கும் ஒரு சகோதரி. அவர் அல்குர்ஆனை மனனமிட்டுள்ள ஒரு ஹாபிழாவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கல்கந்தே தம்மானந்த தேரர் பின்னர் உரையாற்றும்போது, இவ்வாறு ஒரு பல்கலைக்கழக மாணவிக்கு இந்நிகழ்வில் முன்னுரிமை கொடுத்து கெளரவிக்கப்பட்டதை மிகவும் சிலாகித்துப் பேசினார்.
முஸ்லிம் பெண்கள் இவ்வாறுதான் சமூகத்தின் பொதுவெளிக்கு வர வேண்டும், வர அனுமதிக்கப்பட, ஊக்குவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
அடுத்து நான் அவதானித்த முக்கிய விடயம் - நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவில் அரங்க உதவியாளர்களாக - அதுவும் ஓர் இஸ்லாமிய நூல் வெளியீட்டு நிகழ்வில் - இதற்கு முன்னர் நான் எங்குமே அவதானித்திருக்காத வகையில் அவர்கள் கலாசாரப்படி - நேர்த்தியாக ஆடையணிந்திருந்த பல சிங்கள, தமிழ்ச் சகோதரிகளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் !
மாற்றுமதத்தவர் என்றாலே கொஞ்சம் வித்தியாசமாக நோக்கும் நமது சமூகத்தில் இத்தகைய சகோதரிகளுக்கும் வாய்ப்புக் கொடுத்து அவர்களையும் நம்மோடு இணைந்து பணிபுரியச் செய்திருப்பதில் மிஷ்காத் நிறுவனத்தின் மானுடம் குறித்த பரந்த கண்ணோட்டம் தெளிவாக வெளிப்பட்டது.
நூலாசிரியர் உஸ்தாத் மன்ஸூர் அவர்களுக்குப் பொன்னாடைகள், பூமாலைகள், முகத்துதிப் புகழ்மாலைகள் ஏதும் போர்த்தப்படவோ சூடப்படவோ இல்லை. அவரும் எவருக்கும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் வகையில் முகத்துதி நன்றிமழை பொழியவில்லை.
மொத்தத்தில் நிகழ்வின் ஒவ்வொரு விடயமும் மிகவும் நேர்த்தியாகவே நடந்தது.
இனி, நூலுக்கு வருவோம். ஒரே தலைப்பில், ஏக காலத்தில், ஒரே மேடையில் மூன்று மொழிகளில் ஓர் இஸ்லாமிய நூல் வெளியாகியிருப்பதுவும் நானறிந்த வரையில் இதுதான் முதல் தடவையாகும்.
எவ்வளவு கால - சந்தர்ப்ப - சூழல் - தேவைப் பொருத்தமான பெறுமதிமிக்க முயற்சி இது !
மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரியதோர் அறிவியல் அறப்போராட்டம் இது ! உஸ்தாத் மன்ஸூருக்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக !

எழுபது பக்கங்களுக்குள் கட்டமைக்கப்பட்டு, உள்ளடக்கத்தினைப் பிரதிபலிக்கும் சாந்தமான மெல்லிய நிறத்தில் அட்டைப் படம் அமைக்கப்பட்டு, மிகச்சிறந்த முறையில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது இந்நூல்.
நூலின் பிரதான பேசுபொருளை, நூலின் பின்னட்டையே இவ்வாறு விபரிக்கிறது:
"ஜிஹாதின் ஒரு பிரிவான ஆயுதப் போராட்டம் என்பது அடுத்த மனிதர்களை இஸ்லாத்தின் உள்ளே இழுக்க முனையும் புனித யுத்தமன்று. அதாவது, அது முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான நம்பிக்கை சார்ந்த நிலைப்பாடன்று. அது, அநியாயக்காரர்களுக்கு எதிரான ஒழுக்கம் சார்ந்த நிலைப்பாடாகும். போர் அனுமதிக்கப்படுவதற்கான காரணமாக மார்க்கம் வேறுபட்டிருத்தலை இஸ்லாம் முன்னிறுத்தவில்லை.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில், ஜிஹாத் என்பது முஸ்லிமோ முஸ்லிம் அல்லாதவரோ, யாராக இருந்தாலும், அவர்கள் அநியாயம் செய்வோராக இருந்தால் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டமாகும். அது நீதி, சுதந்திரம் என்பவற்றோடு உடன்பட்ட, அநியாயம், அடக்குமுறை என்பவற்றுக்கெதிரான, ஒழுக்கம் சார்ந்த நிலைப்பாடாகும்.
எனவே முஜாஹித் எனும் போராளி அநியாயக்காரனுக்கு எதிராக, அவனது அநியாயத்திற்கு எதிராகப் போராடுகிறான். மாறாக, அவனது நம்பிக்கைக்கோ, கொள்கைக்கோ எதிராக அல்ல. எனவேதான், அநீதி மீது அமைந்த புரட்சியை மேற்கொள்ளும் முஸ்லிமுக்கு எதிராகப் போராடுவதையும், அநியாயக்கார முஸ்லிம் ஆட்சியாளனுக்கு எதிராகப் போராடுவதையும் இஸ்லாம் ஜிஹாத் என்கிறது"
இதைச் சுருக்கமாக இன்னொரு வகையில் சொல்வதாயின் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதார் மீது தொடுக்கும் போராட்டமல்ல ஜிஹாத். அப்படியானதொரு புனிதப் போராட்டமே இஸ்லாத்தில் இல்லை. ஒரு நம்பிக்கையை வளர்க்கவோ எதிர்க்கவோ ஜிஹாத் எனும் ஆயுதப் போராட்ட வழிமுறை கையாளப்பட முடியாது.
ஆய்வுக்கு ஒரு முன்னுரை, போர்: ஓர் அல்குர்ஆனியப் பார்வை, பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட இறை வசனங்கள், அல்குர்ஆனில் போரைத் தூண்டும் வசனங்கள் காணப்படுவதற்கான காரணங்கள் ஆகிய நான்கு அத்தியாயங்களில் அனாவசியமான மயிர்பிளக்கும் ஆய்வுகள் ஏதுமில்லாமல், சுருக்கமாக, அதேவேளை மிகவும் தர்க்க ரீதியாக விடயங்களை முன்வைக்கிறது இந்நூல்.
அணிந்துரை, ஆசியுரை, மதிப்பீட்டுரை, வெளியீட்டுரை எனும் சம்பிரதாயங்கள் எதுவுமில்லாமல் நேரடியாகவே தான் சொல்ல விளையும் கருத்துக்களை அழகுறக் கட்டமைத்திருக்கிறார் உஸ்தாத் மன்ஸூர். கலைச் சொற்கள் மற்றும் அடைப்புக்குறிகள் அதிகமாகக் கையாளப்படாமை மிகவும் பொருத்தமானது. அதன் மூலமாக முஸ்லிம் அல்லாதாரும் நூலைப் புரிந்து கொள்ள வசதியாக அமையலாம். வழக்கம் போல இந்நூலிலும் உஸ்தாதின் மொழிநடை செறிவாகவே உள்ளது. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை மொழிநடையை இதைவிட இலகுபடுத்துவதில் உள்ள சிரமத்தை நாம் உணர்கிறோம்.
ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் சமூகத்தில் வெகுசில இளைஞர்கள் தடம்புரண்டிருப்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். வெறுமனே சில குற்றச்சாட்டுகளை தீவிரமாக மறுதலிப்பது மட்டுமே தீர்வாக முடியாது. நமக்குள்ளும் வெளிச் சமூகங்களோடும் மனந்திறந்து பேசியே ஆகவேண்டிய ஓர் இக்கட்டான கால கட்டத்தில் இருக்கிறோம். அதற்கான ஒரு சாதனமாக நிச்சயம் இந்நூல் அமையும் என நம்புகிறோம்.
வசதியுள்ளவர்கள் அதிகம் பிரதிகளை வாங்கி, உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், அரச அதிகாரிகள், வாடிக்கையாளர்கள், நூலகங்களுக்கு அன்பளிப்புச் செய்யுங்கள்.
பயணங்களின்போது கையில் சில பிரதிகளை எடுத்துச் செல்லுங்கள். சந்திக்கும் பயணிகளோடு உறவாடி, முடிந்தால் நூலின் பிரதியொன்றை அன்பளிப்புச் செய்யுங்கள். எப்படியோ இக்கருத்துக்களை மக்கள்மயப்படுத்தியே ஆக வேண்டும். தவறான கருத்துக்களை - விமர்சனங்களைக் களைவதில் இன்ஷா அல்லாஹ் இந்நூல் பெரியதொரு பங்களிப்பைச் செய்யும்.

அஜாஸ் முஹம்மத்

4 comments:

  1. We CAN WRITE CAN SPEAK ABOUT ISLAM.BUT IN PRACTICAL WE ARE ZERO.NABI SAL AND HIS CAMPANION
    SAHABA THEY PRACTICE THE ISLAM IN THE DAILY LIFE.SORRY TO SAY USTHAZ MANSOOR HE CAN JOIN WITH ACJU THEN HE CAN WORK GOOD JOB WITH JAMAATH.SAITAN CANT WIN WITH THOSE WHO ARE WITH JAMATH.(UNITY)
    WE HAVE TO GATHER .

    ReplyDelete
  2. @Nebosh தனது மகன் சிறுவனாக இருக்கும்போது தந்தை கூறுவதில் உள்ள யாதார்த்தம் ஒன்றும் மகனுக்கு புரிவதில்லை. காலமும் முதிர்ச்சியும் அனுபவமும் அறிவும் அடையும்பொழுது உங்களுக்கு விளங்கும்.

    ReplyDelete
  3. https://youtu.be/3bTm6tvWSig

    @ nibosh

    ReplyDelete
  4. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.33:71. (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.33.71 அல்குர்ஆன்.

    ReplyDelete

Powered by Blogger.