Header Ads



ஹஜ்ஜுல் அக்பரை விடுதலை செய்யுமாறு, முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை

மிக மதிப்புக்குரிய ஒரு சிவில் சமூகத் தலைவரான 60 வயதுடைய உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றமை குறித்து ஏழு பிரதான முஸ்லிம் சிவில், சமய அமைப்புகள் தமது ஆழ்ந்த அதிர்ச்சியைத் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முறைப்பாடு செய்துள்ளனர். விசாரணைகளுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அவரை விடுதலை செய்யுமாறும் அவை வேண்டியுள்ளன.

இந்த முறைப்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய சூரா கவுன்சில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், இலங்கை மலாயர் சம்மேளனம் என்பன கையொப்பம் இட்டுள்ளன.

அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் முழு வாசகமும் வருமாறு:

கீழே கையப்பமிட்டுள்ள முஸ்லிம் சிவில் மற்றும் சமய அமைப்புக்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஆகிய நாம் ஒரு மதிப்புமிக்க சிவில் சமூகத் தலைவரான 60 வயதுடைய உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் பொலிஸின் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த 25 ஆகஸ்ட் 2019 அன்று கைது செய்யப்பட்டமை குறித்து எமது ஆழ்ந்த அதிர்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது நாட்டில் 85 கிளைகளுடன் இயங்கிவரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவராக உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் 1994 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 24 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். சமூகத்துக்கும் நாட்டுக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ள அர்ப்பணமிக்க ஒரு சமூகத் தலைவர் என்ற வகையில் அவரது கைது முஸ்லிம் சமூகத்தில் பாரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஏன் விசாரணைக்கு எடுக்கப்பட்டார்? மற்றும் அவர் ஏன் இன்னும் விடுதலை செய்யப்படாதிருக்கிறார்? என்பது இன்னும் புதிராகவே உள்ளன. எனினும் 2018 டிசம்பரில் சில விஷமிகள் கடுகண்ணாவை பகுதியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய நிகழ்வைத் தொடர்ந்து அவரது சகோதரர் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம். இந்த நிகழ்வுக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே தீவிரவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக இலங்கை ஜமாஅதே இஸ்லாமி இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் தனது சகோதரனை அவ்வியக்கத்தின் அங்கத்துவத்திலிருந்து அவர் நீக்கி இருந்தார். அவரது சகோதரனுடைய கைதைத் தொடர்ந்து வந்த ஏதாவது பொய்யான குற்றச்சாட்டு அடிப்படையிலேயே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என நாம் நம்புகிறோம்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் போன்ற தரத்தில் உள்ள ஒரு நேர்மையான தலைவர் பற்றி இது தொடர்பில் ஏதும் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவை சாத்தியமற்றவை என்றே நாம் நம்புகிறோம். மேலும் விசாரணைகளுக்குப் பங்கம் இல்லாத வகையில் அவரை விடுதலை செய்யுமாறு நாம் வேண்டுகிறோம்.

விசாரணைக்கு உதவும் வகையில் அவர் தேவையானபோது அழைக்கப்படும் தினத்தில் உரிய இடத்துக்கு அவர் சமூகம் அளிப்பதை நாம் உறுதி செய்யவும் விரும்புகிறோம்.

2 comments:

  1. நடுநிலைப் போக்குடைய இவரின் கைது மிகுந்த கவலையளிப்பதுடன். முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை மெச்சுகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.