August 27, 2019

ஹஜ்ஜுல் அக்பரின், மகனுடைய வாக்குமூலம்

சமூகத் தளத்தில் முக்கியமான பொறுப்பொன்றை வகிப்பவருடைய குடும்பம் சுமக்கின்ற இரட்டிப்பு பாரம் பற்றி அந்த அனுபவத்தைப் பெற்றவர்களைத் தவிர வேறு நபர்களால் புரிந்துகொள்ள முடியாது.
ஓர் அரசியல்வாதியுடைய குடும்பத்துக்கு அந்தப் பாரம் இல்லாதிருக்கலாம், ஒரு சமூக செயற்பாட்டாளரின் குடும்பம் ஓரளவுக்கு அதனை உணரலாம், ஆனால் ஓர் இஸ்லாமியவாதியுடைய குடும்பம் அந்தப் பாரத்தை அளவுக்கதிகமாகவே சுமக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பதே யதார்த்தம்.
எனது தந்தை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராகத் தெரிவு செய்யப்பட்ட போது அந்தப் பாரத்தின் கணிசமான ஒரு பகுதியை நாமும் சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத வயது எனக்கு. ஒரு மாபெரும் சமூகப் பொறுப்பு அவரது தலையில் சுமத்தப்பட்ட அந்த சந்தர்ப்பத்தில் தொழுகைக்காக பழக்கப்பட வேண்டிய வயதைத்தான் நான் பூர்த்தி செய்திருந்தேன். இன்று அவர் அந்தப் பொறுப்பை இன்னொருவருக்குப் பாரப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் எனது மகனுக்கு கிட்டத்தட்ட அதே வயதாகின்றது. இந்த இரண்டரை தசாப்தங்களின் எனது அனுபவங்களை எழுதுவதானால் அது புத்தகங்களாய் மாறலாம். ஆனால் பலருக்கும் பிரயோசனமளிக்கலாம் என்ற வகையில் அதன் ஒரு சில துளிகளை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
‘நான் ஓர் இயக்கத்தின் தலைவன், எனவே எனது மகனான நீ இப்படித்தான் இருக்க வேண்டும்!’ என்று என்னைப் பார்த்து எனது தந்தை கூறிய ஞாபகம் எதுவும் எனக்கில்லை. ஆனால் ‘நீ ஓர் இயக்கத்தின் தலைவருடைய மகன்! எனவே நீ இப்படித்தான் இருக்க வேண்டும்!’ என இந்த சமூகம் என் மீது விதித்த தடைச் சட்டங்கள் ஏராளம் ஏராளம்.
எட்டு வயதில் வாப்பாவோடு பள்ளிக்குப் போனால் அத்தஹிய்யாத்தில் ஒவ்வொருவரும் உட்காரும் வித்தியாசமான முறைகளில் உட்கார்ந்து பார்ப்பேன். தொழுது முடிந்து வெளியே வரும் போது தவறாமல் வாப்பாவின் காதில் ‘ஹஸரத், ஒங்கட மகன்.....’ என்ற போட்டுக் கொடுப்புகள்....
ஜமாஅத் தொழுகை முடிந்த பின் அந்த வயதில் கூட்டு துஆவுக்கெல்லாம் யார் தான் நிற்பார்கள்?! முதல் ஸலாம் கொடுத்தவுடனேயே குஞ்சு குருமானெல்லாம் எழுந்து நடையைக் கட்டி விடும். இரண்டு ஸலாமும் முடிய எழுந்து செல்லும் என்னைப் பார்த்து ‘அமீர்ட மகனெயா நீங்க! ஏ துவாக்கு நிக்காம எழும்புற?’ என்ற வலுக்கட்டாயமான உட்காரவைப்புகள்....
பத்து வயதில் வாப்பாவின் துவிச்சக்கர வண்டியை மேலே உட்கார்ந்து மிதிக்க உயரம் போதாமல், இடையால் கால்களைப் போட்டு கோணலாய் மிதிக்கப் பழகிய போது ‘அமீர்ட மகன் இப்பிடியா ரோட்ல போற?’ என்பதில் தொடங்கி சைக்கிளில் கைகளை விட்டுக் கொண்டு மிதிக்கும் 90களின் இறுதியிலான ஆரம்ப டீன் ஏஜ் கனவுகளுக்குக் கூட ‘அமீர்ட மகன்’ மந்திரத்தால் தடைச் சட்டங்கள்....
சைக்கிளை வேகமாய் மிதித்தால் ட்ராஃபிக் பொலிஸ் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகையிலான ஹை ஸ்பீட் தட கொல எழுதல்கள்...
ஒரு டீஷேர்ட் அணிந்து பாதையில் சென்றால் ‘அமீர்ட மகன்’ பல்லவியை குறைந்தது இரண்டு பேராவது பாடாமல் இருக்க மாட்டார்கள். கிரிக்கட் விளையாடும் போது ஒரு விக்கட் எடுத்து விட்டு, அல்லது கால்பந்து விளையாடும் போது ஒரு கோல் அடித்து விட்டு அந்த ஆனந்தத்தைக் கொஞ்சம் celebrate பண்ணினால் அன்று மஃரிபுக்குப் பின்னர் பள்ளி முன்றலில் தவறாமல் ‘அமீரின் மகனுக்கு’ lecture ஒன்று நடக்கும்.
வாப்பாவுக்கும் எனக்குமான வயது வித்தியாசம் சுமார் இருபத்தாறு வருடங்கள். எனக்கு 16கள் தாண்ட முன்னரே நாற்பது வயதின் முதிர்ச்சியையும், பக்குவத்தையும் என்னிடம் இந்த சமூகம் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டது. ‘வாப்பாவப் போல இல்லை’, ‘அமீரின் மகன் இப்படிப் பேச முடியுமா?’ ‘அமீரின் மகன் தானே நீங்கள்?’ ‘அமீரின் மகன் மத்ரஸாவுக்குக் கட் அடிக்க முடியுமா?’ ‘அமீரின் மகன்...’ ‘அமீரின் மகன்...’ ‘அமீரின் மகன்...’ அப்பப்பா! எத்தனை சோதனைகள்! இருபதுகளுக்கான வாய்ப்புகளுக்கும் நாற்பதுகளுக்கான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலான பாலம் கட்டித் தாண்ட முடியாத தூரமது. கிட்டத்தட்ட ‘அமீரின் மகன்’ என்பது வெறுப்புக்குரிய ஒன்றாய் மாறுமளவுக்கு இந்த சங்கதிகள் தொடர்ந்தன.
தந்தையின் வயது, தந்தை வகித்த பொறுப்பு, அவருக்கிருந்த மேலதிக 26வருட அனுபவம் அனைத்தினதும் வெளிப்பாடுகளையும் இந்த சமூகம் என்னிடமும் வெளிப்படையாய் எதிர்பார்த்தது. திக்குமுக்காடிப் போனேன்.
நளீமிய்யா வாழ்க்கையும், அதற்குப் பின்னரான நேரடி சமூகப் பிரவேசமும் கூட ‘அமீர்ட மகன்’ எனும் அஸ்திரத்திலிருந்து விடுதலை பெற்றுத் தரவில்லை.
இப்போது பிரச்சினை வேறு வடிவில் வந்தது...
நான் எனக்கான சுய அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டமது. மேற்சொன்ன விடயங்கள் யாவும் சேர்ந்து எனக்குள், ‘அமீரின் மகன்’ என்பதால் கிடைக்கும் செயற்கை கண்ணியத்தால் எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது’ என்ற ஆழமான உணர்வை விதைத்திருந்தன. இந்த அத்தனை தடைச் சட்டங்களும் தந்த மிகப் பெரும் சாதக விளைவது! ‘எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு’ என்றொரு பாடல் வரியுள்ளதல்லவா! அப்படித்தான் இதுவும்.
ஆனால் எனக்குள் உருவாகியிருந்த அந்த உறுதியை நடைமுறைப்படுத்துவதில் ஒரு பெரிய சிக்கல் திரும்பவும் ‘அமீர்ட மகன்’ வடிவில் வந்தது. இப்போது தந்தை நாடளாவிய ரீதியிலும் கடல் கடந்தும் அறியப்பட்டவராக மாறியிருந்தார். எனவே நான் எங்கு சென்றாலும் எனக்கான அடையாளத்தை நானாகப் பெற்றுக்கொள்ள முன்னரே ‘இவர் அமீர்ட மகன்’ என்று யாராவது அறிமுகப்படுத்தி விடுவார்கள். 100% தூய அன்பின் விளைவாகவும் தந்தையின் மீதிருக்கின்ற அபிமானத்தின் விளைவாகவும் இஸ்லாமிய இயக்கம் தந்த உறவின் விளைவாகவும் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளே அவை என்பதில் லவலேசமும் சந்தேகமில்லை. ஆனால் அது அவர்கள் அறியாமலே, சிலபோது நான் விரும்பாத செயற்கை கண்ணியத்துடன் கூடிய அடையாளத்தை எனக்குப் பெற்றுத் தந்தது.
அதன் பின்னர் சமூக ஊடக யுகம் ஆரம்பித்தது. ‘சமூகத்தோடு இரண்டறக் கலக்கக் கலக்க ஒரு பக்கத்தில் அபிமானமும் அன்பும் வளர்வது போலவே இன்னொரு பக்கத்தில் சேறுபூசல்களும் அவதூறுகளும் அதிகரிக்கும்’ என்பது இறை நியதியாகும். அந்த நியதிக்கேற்ப சமூக வலைத் தளங்களில் இந்த இரண்டினதும் தீவிர வடிவங்களையும் கண்கூடாகக் காணக் கிடைத்தது. அப்படியான சேறுபூசல்களின் போது எங்களுக்கான பங்கும் தவறாமல் கிடைத்தது.
ஆனால் அந்தந்த வயதில் ‘இந்தத் தடைகளையெல்லாம் தாண்ட வேண்டியிருக்கிறதே’ என்ற உணர்வில் வெறுப்போடு கடந்து வந்த பாதையை ஒரு கட்டத்தில் நின்று பின்னோக்கிப் பார்த்த போது ‘அமீர்ட மகன்’ என்ற பல்லவி எத்தனை பெரிய பாதுகாப்புக் கேடயமாகவும், பண்படுத்தல் சாதனமாகவும் தொழிற்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியுமாக இருந்தது.
அற்புதமான தர்பிய்யா அது!
இரவின் இருளில் ஆன்மீகக் குரல்களால் எனக்குக் கிடைத்த பயிற்றுவிப்பை விட பன்மடங்கு பக்குவத்தை அது எனக்குள் வளர்த்திருந்தது.
அந்தத் தர்பிய்யா...
தந்தையின் மீதான புகழ்ச்சிகளினதும், பாராட்டுக்களினதும் மழையில் நானும் நனைந்து கொள்ளாமல் ஓரமாய் ஒதுங்கி நிற்கும் அடையாளத்தை எனக்குள் வளர்த்திருந்தது.
அவரின் மீதான வசைகளை அமைதியாகக் கடந்து போவதற்கும், சில போது அவற்றை லைக்கி விட்டுச் செல்வதற்குமான பக்குவத்தைத் தந்திருந்தது.
உண்மை இன்னதுதான் என்று தெரிந்திருக்கின்ற நிலையில் அது பற்றியதான பொய்களை அமைதியாய் செவிமடுப்பதன் சுகத்தைக் கற்றுத் தந்திருந்தது.
‘அமீருக்கு ஏசுகிறார்களே!’ என்ற ஆத்திரத்தில் ரியாக்ட் பண்ணும் அன்பர்களுக்கு ஆறுதல் சொல்லி புத்தியும் சொல்லும் கலையைக் கற்றுத் தந்திருந்தது.
‘அமீர் சொல்கிறார்’ என்பதால் பலரும் பலவற்றையும் ஏற்றுக்கொள்ளும் போது அது தொடர்பில் அவருடன் கருத்து முரண்படவும் விவாதிக்கவுமான துணிச்சலையும் இயலுமையையும் எனக்குள் ஏற்படுத்தியிருந்தது.
தந்தையாக, ஆசிரியராக, தலைவராக, உற்ற நண்பனாக, ஆலோசகராக, முரண்பட்ட கருத்தில் எதிரெதிரே நின்று விவாதிக்கும் அடுத்த தரப்பாக என அனைத்து வகையிலும் அவரோடு உறவாடுவதற்கான வாசலைத் திறந்து தந்தது.
உலகத்தின் சவால்களை ‘போதுமானளவு உலகம்’ கைவசம் இன்றியே தைரியமாய் எதிர்கொள்ளும் துணிச்சலை எனக்குள் உருவாக்கியிருந்தது.
‘அமீர்ட மகன்’ என்ற கேடயம் சில ஹலாலான ஆசைகளை தடுத்ததென்னவோ உண்மைதான். ஆனால், நிறைய ஹராம்கள் என்னை அண்ட விடாமலும் அல்லது நான் அவற்றை அண்ட விடாமலும் கூட என்னையறியாமலே அது என்னைத் தடுத்திருக்கின்றது, கூடவே நிறைய நலவுகளை அது பெற்றுத் தந்திருக்கின்றது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அவர் ஜமாஅத்தின் அமீர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்ட போது எனது உள்ளத்துக்குள்ளும் ஓர் உற்சாகமான ‘அல்ஹம்துலில்லாஹ்’வும் ‘லில்லாஹி ஷுக்ரீ’யும் சத்தமாய் ஒலித்தன.
கடந்த இரண்டரை தசாப்தங்களாக ‘அமீர்ட மகன்’ எனும் கூர்மையான உளியால் என்னை செதுக்கியவர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகளும், இதயங்கனிந்த பிரார்த்தனைகளும்.
Affan Hajjul Akbar
(சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதி குறிப்பிட்ட சிலருடன் மாத்திரம் பகிர்ந்து கொண்ட இக்கட்டுரையை இப்போது பொது வெளிப் பார்வைக்கு விடுகிறேன்)

2 கருத்துரைகள்:

அல்லாஹ்வுக்கு பயந்து ஒரே சமூகமாக ஒற்றுமையாக வாழாமல் ஆழுக்கொரு இயக்கத்தை நிறுவி,அதற்கு அமீரையும் நியமித்து நாம் அனைவரும் அல்லாஹ் கூறிய “ஒற்றுமை எனும் கயிரை பற்றி பிடிக்கவில்லை” அதன் பாவம் நாம் அனைவரையும் தற்போது தாக்க ஆரம்பித்துள்ளது.இவ்வளவும் நடந்தும் கொஞ்ஞமும் ரோசம் கூட வராமல் இன்னும் இயக்கங்களை வைத்துக் கொண்டிருக்கும் ஒற்றுமையில்லாத பல ஓதி,கற்ற ஆலிம்கலையும்,புத்தி ஜீவிகலையும் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக உள்ளது.இவர்களால் வழி நடத்தப்படும் பல பெயர்களை கொண்ட அமைப்புகளில் உள்ள மக்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள்,ஏனெனில் இந்த மக்கள் நினைத்தால் அந்த இயக்கங்களை வழி நடத்துபவர்கலை தூக்கி எறிந்து விட்டு ஒற்றுமையாக முடியும்.ஆனால் சமூகர்தின் நிலையும் இன்னும் மோசமான பரிதாபத்துக்குரியது.

Post a comment