Header Ads



ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர், குறித்து நாங்கள் கவலைப்படவில்லை - மஹிந்த அமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தனித்து போட்டியிடும் சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டம், அங்குணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று -12- நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

சுதந்திரக் கட்சி சார்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றோ, எங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றோ அதிகாரம் இல்லை என்றோ யாராவது கூறினால் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும் சாத்தியம் காணப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். நாங்கள் முன்வைக்கும் யோசனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது, ஒதுங்கி நில்லுங்கள் என்று சொல்லப்பட்டால் நாங்கள் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஏற்படாது என்றே நாங்கள் நம்புகின்றோம். பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கின்றது.

கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பில் நாங்கள் எதுவித தவறுகளையும் காணவில்லை. ஆனால் அவருடன் பேசவேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளன.

இணக்கப்பாடு எட்டவேண்டிய விடயங்கள் உள்ளன. ஊழல், மோசடிகளை ஒழிப்பது, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்று ஏராளம் விடயங்கள் குறித்து பேசி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் இருப்பதாக தெரிகின்றது. அவர்களின் வேட்பாளர் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் செய்யப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.