Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை, அறிவிக்காவிட்டால் கொழும்பை முற்றுகையிடுவோம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிக்காவிட்டால் கொழும்பை முற்றுகையிடப் போவதாக திலிப் வெத ஆரச்சி எச்சரித்துள்ளார்.

ட்ரோலர் படகு இயக்குநர்களுக்கான பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் தேசிய நீர் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மை நிறுவனத்தினால் தங்காலையில் இன்று -26- மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

இந்த நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்காத, கொள்ளை, ஊழல் மற்றும் மோசடிகள் அற்ற அரசியல்வாதியான அமைச்சர் சஜித் பிரேமதாசவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்குமாறு மதத் தலைவர்கள் சார்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் இலட்சக்கணக்கான தொண்டர்கள் மாத்திரமன்றி பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பில் நாங்கள் கட்சித் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு பத்து நாட்கள் காலக்கெடு வழங்கியுள்ளோம்.

அதற்குள் சஜித் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும். இல்லையேல் கட்சியின் இலட்சக்கணக்கான தொண்டர்களை ஒன்றுதிரட்டி கொழும்பை முற்றுகையிடவும் தயங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.