Header Ads



இலங்கையில் 6 புதியவகை பல்லிகள் கண்டுபிடிப்பு - தேசிய வீரர்களின் பெயர்களைச் சூட்டியதால் சர்ச்சை

-ரெ.கிறிஷ்ணகாந்-

இலங்கைக்கு உரித்தான 6 பல்லி இனங்களுக்கு, தேசிய வீரர்களின் பெயர்களை சூட்டியுள்ள சூழலியலாளர் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பல்லி இனங்களுக்கு தேசிய வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டமை அந்த வீரர்களை அவமதிக்கும் செயலாகும் என பலர் விமர்சித்திருந்தனர்.

அத்துடன், வீரர்களின் பெயர்களை பல்லிகளுக்கு சூட்டியுள்ளமைக்கு தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாக புலமைச் சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் கருத்துவெளியிட்டிருந்தார்.

எனினும், தேசிய வீரர்களைக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே தான் இந்தப் பெயர்களை சூட்டியுள்ளதாக பல்லிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ஊர்வன மற்றும் ஈரூடகவாழிகள் தொடர்பான ஆய்வாளரும் சூழலியலாளருமான சமீர சுரஞ்சன் கருணாரத்ன விளக்க மளித்துள்ளார்.

இருசொற்பெயரீடு மற்றும் சர்வதேச பெயரீடு முறைமைக்கமைய மதிப்பிற்குரிய நபர்களின் பெயர்களை உபயோகித்து குறித்த உயிரினங்களை உள்நாட்டு அடையாளத்துடன் சர்வதேசத்துக்கு அறிமுகப்படுத்துவதே தனது ஆய்வுக்குழுவின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், விஞ்ஞான முறை பெயரீடு தொடர்பான அறிவைக் கொண்டிராத சிலர் இது தொடர்பில் தெரிவிக்கும் கருத்தானது எவ்வித அடிப்படையும் அற்றது என்பதால் இது சமூகத்தின் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை உண்டாக்கும் என்றும் இவ்வாறான கருத்துகளை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோடயிம்பர யோதயா, நந்திமித்ர யோதயா, கொஹுகும்புர ரட்டே ரால, மீகஹபிட்டிய வலவ்வே ஹிட்டிஹாமி, புடேவே ரட்டே ரால மற்றும் கிவுலேகெதர மொஹட்டால ஆகிய தேசிய வீரர்களின் பெயர்களே இவ்வாறு இலங்கைக்கு உரித்தான, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்லி இனங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன என்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சி நடந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த வீரர்களை என்றும் நினைவில் வைத்திருக்கவும் அவர்களுக்கு கௌரவமளிப்பதற்கானதுமான எண்ணத்தை நான் கொண்டிருந்தேன். விஞ்ஞான ரீதியாக அப்பெயர்களை கொண்டுசெல்லவேண்டும். வேறு நாடுகளில், உயிரினங்களுக்கு நபரொருவரின் பெயர் சூட்டப்படுமாயின் அது நயிட் (Knight) பட்டத்துக்கு சமானமான கௌரவத்தை அந்நபருக்கு அளிப்பதாக கருதப்படும்.

இந்த பெயரை சூட்டுவதால், இவ்வாறான வீரர்கள் எமது நாட்டில் வாழ்ந்துள்ளனர் என்றும் எம்மக்கள் அறிந்துகொள்ள முடியும். வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனுமதிப் பத்திரத்துக்கமைய 2018 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரதிபலனாக இந்த 6 பல்லி இனங்களை கண்டுபிடித்தோம்.

குடும்பிகல, மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள மரகலகந்த, பதியதலாவ கொகாலகல மலை, கடுகண்ணாவை சுரங்கத்தை அண்மித்த பகுதி, பம்பரகொடுவ வனப்பகுதி மற்றும் வலப்பனை கீர்த்தி பண்டாரபுர வனப்பகுதியை அண்மித்ததாக எமது ஆய்வுகளை மேற்கொண்டோம்.

இந்தப் பல்லி இனங்களின் பேரின (Species) பெயரான Cnemaspis என்ற பெயருடன் இலங்கையின் தேசிய வீரர்களின் பெயரையும் இணைத்து இருசொற் பெயரீடு முறையில் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொடயிம்பர யோதயாவின் பெயரில் Cnemaspis Gotaimbara sp.Nov என்றும், நந்திமித்ர யோதயாவின் பெயரில் Cnemaspis Nandimithra sp.Nov எனவும், ஊவவெல்லஸ்ஸ கிளர்ச்சியின் வீரரான கொஹுகும்புர ரட்டே ராலவின் பெயரில் Cnemaspis Kohukumburai sp.Nov என்றும், புட்டேவ ரட்டே ராலவின் பெயரின் Cnemaspis Butewe sp.Nov என்றும், கிவுலேகெதர மொஹட்டாலவின் பெயரில் Cnemaspis Kivulegedarai sp.Nov என்றும், ஹிட்டிஹாமி ரட்டேராலவின் பெயரில் Cnemaspis Hitihami sp.Nov எனவும் பெயரிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை மற்றும் சர்வதேச புகழ்பெற்றுள்ள நபர்களினது பெயர்களும் இதற்கு முன்னரும் உயிரினங்களுக்கு சூட்டபட்டுள்ளது. அத்துடன், பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போன்ற அரச தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் சூழலியலாளர்களின் பெயர்கள் இவ்வாறு புதிதாக கண்டுபிடிக்கப்படும் உயிரினங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.

2 comments:

  1. விமலுக்குத் தெரியுமா கற்பூர
    வாசனை

    ReplyDelete
  2. பாரலுமன்ரத்தில் o/L சித்தியடையாத 95 பேர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ரன.இவையல்லாம் யாருக்குமே தெரிவதில்லை.ஆனால் நாட்டுக்கு நல்லது செய்யும் மனிதர்களை அவமானப்படுத்தும் “மனித பல்லிகல்” தான் எமது நாட்டில் அதிகம் உள்ளன.

    ReplyDelete

Powered by Blogger.