Header Ads



பேருந்து நிலையத்தில் உறங்கிய, அப்பாவி ஏழை அடித்துக்கொலை - அரசாங்க அதிகாரி அரக்கத்தனம், கலேவெலயில் சோகம்

தங்குவதற்கு வீடின்றி பேருந்து நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த கூலி வேலை செய்யும் ஒருவரை நேர கண்காணிப்பாளர் அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று கலேவெல - கலாவெவ பகுதியில் பதிவாகியுள்ளது.

கலேவெல நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கூறும் வேலையை குறித்த நபர் செய்து வந்துள்ளார்.

அதன் மூலம் கிடைக்கும் வறுமானத்தில் தனது மூவேளை உணவு மற்றும் அவருக்கான உடை என்பவற்றை வாங்கிக்கொள்வார்.

ஆனால் அவருக்கு என்று உறவினர்கள் என்று எவரும் இல்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தனது தினசரி வாழ்க்கையை கடத்திச் சென்ற அவருக்கு அவருக்கென சொந்தமாக வீடொன்றை வாங்குவதற்கு வசதிகள் காணப்படவில்லை.

தினமும் வேலை முடிந்தவுடன் இரவு நேர உணவினை உட்கொண்டதன் பின்னர் பேருந்து நிலையத்தின் ஒரு மூலைப்பகுதியில் உறக்கத்திற்கு செல்வார்.

ஆனால் நேற்றைய தினம் அவருக்கு உடல் ஆரோக்கியம் சற்று குறைவாக காணப்பட்டமையினால் கூலி வேலைக்கு செல்லவில்லை.

பேருந்து நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் நேரக்கணிப்பாளர் அவரை அவ்விடம் விட்டு நகருமாறு கேட்டுள்ளார்.

தனக்கு வேறு இடம் இல்லை.. தான் பல வருடங்களாக இந்த இடத்திலேயே உறங்குகிறேன்... என பதில் வழங்கியுள்ளார்.

இல்லை நீ வேறு இடம் பார்த்துக்கொள் இது அரசாங்க கட்டிடம் என தெரிவித்து அவரை தனது கால்களால் உதைத்துள்ளார்.

கண்ணீர் விட்டப்படி கைக்கூப்பி கெஞ்சியுள்ளார்.. தன்னை இன்று மாத்திரம் இவ்விடத்தில் உறங்க அனுமதியுங்கள்.. நான் நாளைய தினம் வேறு இடத்திற்கு செல்கிறேன்... எனக்கு உடம்புக்கு முடியவில்லை ... என மன்றாடியுள்ளார்.

கோபமுற்ற நேரக்கணிப்பாளர் சற்றும் இரக்கமின்றி தடி ஒன்றினை எடுத்து அவரை தொடர்ச்சியாக தாக்கியுள்ளார். 

கதறி அழுத அந்த ஏழை நபர் சிறிது நேரத்தில் மயக்கமுற்று அவ்விடத்திலேயே விழுந்துள்ளார்.

அதன் பின்னர் அவர் அவ்விடத்திடத்திலிருந்து எழும்ப வில்லை.... நீண்டகாலமாக தனது வாழ்நாளை கடத்திய அந்த பேருந்து நிலையத்திலேயே இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் நேரக்கணிப்பாளரின் நடத்தையை காவல் துறையினரிடம் அறிவித்தமையை தொடர்ந்து காவல் துறை நேரக்கணிப்பாளரை கைது செய்துள்ளனர்.

2 comments:

  1. நெஞ்சம் பொறுக்குதில்லையே.

    ReplyDelete
  2. மனிதம் செத்து விட்டது.

    ReplyDelete

Powered by Blogger.