Header Ads



யார் இந்த, அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத்...?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
•29 வருட இறைப்பணி. 
• 1 கோடி 10 லட்சம் பேர் இஸ்லாத்தின் அரவணைப்பின் கீழ் வரக் காரணம்.
• 60 லட்சம் குர்ஆன் பிரதிகள் பரிசளிப்பு.
• 860 பள்ளிக்கூடங்கள், 
• 840 மத்ரஸாக்கள்,
• 4 பல்கலைக்கழகங்கள்,
• 124 மருத்துவ மனைகள்,
• 204 இஸ்லாமிய நிறுவனங்கள்,
• 5700 பள்ளிவாசல்கள் உருவாக்கம்.
• 15,000 அநாதைகளுக்கு முழுப் பொறுப்பு.
என அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர் பற்றிய தகவல்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குவைத் நாட்டின் புகழ்மிக்க மருத்துவமனைகளில் ஒன்று 'முபாரக் மருத்துவமனை'.
அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை நலம் விசாரிக்க குவைத்தின் பிரதம அமைச்சர் ஜாபிர் முபாரக் அஸ்ஸபாஹ் வந்திருந்தார்.

அந்த நோயாளிக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சையின் தன்மைகளை கேட்டறிந்தார். மிகுந்த அக்கறையுடன் அவரை கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி விட்டுப் போனார்.

அவர் மாத்திரமன்று அந்நாட்டின் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், பொரு ளாதார மேதைகள், இஸ்லாமிய அறிஞர்கள் நகர்புற, கிராமப்புற மக்கள் ஆண்கள், பெண்கள் என ஒரு பெரும் கூட்டம் படையெடுத்து வந்தது அவரை நலம் விசாரித்திட...

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர், தொலைக்காட்சி, ரேடியோ அனைத்தும் அலறின. அவரின் சுகக்குறைவு செய்தியை பரப்பின.
அவருக்காக எல்லோரும் துஆ செய்து கொண்டிருந்தனர்.

இத்தனைக்கும் அவர் ஒரு இளைஞர் அல்ல முதியவரே.
பல ஆண்டுகளாக பல நோய்களை சுமந்து வாழ்பவரும் கூட. நீண்ட நாட்களாக சர்க்கரை வியாதியுடன் வாழ்பவர். ஒரு நாளில் ஐந்து தடவை இன்சுலின் எனப்படும் மருந்தை ஊசி வழியாக தன் உடலுக்குள் தானே செலுத்திக் கொண்டிருப்பவர்.
இதயநோயால் இருமுறை தாக்குதலுக்கு ஆளானவர். முழங்கால் வலி, முதுகு வலி, இடுப்பு எலும்பு முறிவு அதற்கான சிகிச்சை என தினமும் பத்து வகையான நோய்களுக்கான மாத்திரைகளை உண்பவர். மூளையில் ஒரு சிறிய ரத்த உறைவு புள்ளியும் உண்டு.
அவர் சினிமா நடிகரோ, கால்பந்து போன்ற விளையாட்டு வீரரோ அல்ல. பொது நல ஊழியர். இஸ்லாமிய அழைப்பாளர்.

யார் அவர். வாருங்கள் பார்ப்போம்.

அவர் பெயர் அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத். 
குவைத் நாட்டின் அஸ்சுமைத் என்ற குடும்பத்தின் மூன்றாவது மகன். சிறுவயதில் படிக்கும் காலத்திலேயே பொது நலச் சேவையில் பேரார்வம் காட்டினார்.

1947 அக்டோபர் 15ஆம் நாள் குவைத் நாட்டில் பிறந்த அப்துல் ரஹ்மான் இளம் வயதில் படிப்பில் பெரும் ஈடுபாடு காட்டினார்.
மருத்துவரானார். ஆங்கில மருத்துவத்தில் செரிமானக்கோளாறுகளுக்கான சிறப்பு மருத்துவர் ஆனார்.
இளமைப் பருவத்தில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தால் கவரப்பட்டு அதில் இணைந்தார். இஸ்லாமிய பிரச்சாரகராகவும் ஆனார். அல்லாஹ்வின் மார்க்கம் இம்மண்ணில் நிலைபெற தன்னால் இயன்ற அனைத்தையும் தந்திட உறுதி பூண்டார்.

ஒருநாள் அமெரிக்காவின் செய்தித்தாள் ஒன்றில் ஒரு செய்தி. அது தாவீத் பராட் என்பவர் எழுதிய கட்டுரை. இவர் கிறிஸ்தவ மிஷினரிகளின் செயல்பாடு, அதைப்பற்றிய தகவல்களை கண்டறிது அவற்றை கட்டுரையாக தருபவர். அதிலே அவர் கூறியிருக்கும் தகவல் இதுதான்:

‘உலகம் முழுவதும் 35000 கிறிஸ்தவ மதமாற்ற குழுக்கள் வேலை செய்கின்றன. 3 லட்சத்து 65 ஆயிரம் கம்ப்யூட்டர்களால் வடிவமைக்கப்பட்ட பணிகளை அவர்கள் செய்கின்றனர். 5 கோடியே 10 லட்சம் நபர்கள் கிறிஸ்தவத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

360 விமானங்கள் இதற்காக பயன்படுத் தப்படுகின்றன. இவற்றில் உலகமெங்கும் பொருள்கள், நூல்கள், பொருளாதார உதவிகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு கணக்கின்படி நான்கு நிமிடங்களுக்கு ஒரு விமானம் என்ற விகிதத்தில் வானத்து விதானத்தில் கிறிஸ்துவத்தை பரப்பிட பறக்கின்றன விமானங்கள். 

மேலும் தொலைக்காட்சிகள், ரேடியோக்கள் என ஆண்டிற்கு இதற்காக 300 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுகின்றன’ என்றெல்லாம் தகவல் களை பொழியும் கட்டுரையை வாசிக்க வாசிக்க விழிகளை விரித்து அப்துல் ரஹ்மான் ஒரு வரியைக் கண்டு திகைத்தார்.

“இந்த கிறிஸ்தவ மதமாற்ற பணிகள் போதிய பலனைத் தந்து கொண்டிருப்பது ஆப்பிரிக்க நாடுகளில் தான்” 

இந்த வரிகள் அவரின் உள்ளத்தை உலுக்கின.
தான்சானியா, மடகஸ்கர், மலாவி, கென்யா, நைஜீரியா இந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் பூர்வீக மார்க்கம் இஸ்லாம் தானே! ஓ....அப்படியா னால் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று செயல்படும் மக்களிடம் கிறிஸ்தவ பிரச்சார பிரச்சாரம் கனஜோராக நடைபெறுகிறதா? இஸ்லாமிய குடும்பத்தில் கிறிஸ்தவமா? குர்ஆன் ஓதப்படும் வீட்டில் இனி பைபிளா?

மனதில் எழுந்த இந்தக் கேள்விகளோடு 
ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணமானார் டாக்டர் அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத். அங்குள்ள அவலங்களை நேரில் சென்று கண்டறிந்தார். திரும்பி வந்தார் குவைத்துக்கு. தனியொரு நபராக யோசித்தார். சிந்தித்தார். திட்டங்கள் தீட்டினார்.
அரபு நாடுகளில் உள்ள செல்வந்தர்களின் ஸகாத்தை மட்டும் திரட்டினால் போதும் உலகில் ஒரு ஏழை முஸ்லிம் கூட இல்லை என்ற நிலையை உருவாக்கலாமே என்று சிந்தித்தார். உழைத்தார். பாடுபட்டார்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆப்பிரிக்க மக்களுக்கான சேவையில் ஈடுபட்டார். ஒரு கணக்கின்படி இவர் 11 மில்லியன் (ஒரு கோடியே பத்து லட்சம்) பேரை இனிய இஸ்லாத்திடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அதாவது ஒரு நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை நிரந்தர நரகத்தில் இருந்து மீட்டு இருக்கிறார்.

தொடக்கத்தில் ‘மலாவி’யில் ஒரு பள்ளிவாசலை கட்டினார். அங்கிருந்து தமது பணிகளை விரிவுபடுத்தினார். தம் மனைவியுடன் ஆப்பிரிக்காவில் குடியேறினார். ஆடம்பர பங்களாவை விட்டு வெளியேறி எளிய வீட்டில் வாழ்ந்தனர் இருவரும்.

“அல்அவ்னுல் முபாஷிர்” என்ற அறக்கட்டளையை நிறுவி அதை ஆப்பிரிக்காவின் பெரும் அமைப்பாக வளர்த்தார். நான்கு பல்கலைக்கழகங்களை நிறுவி மத வேறுபாடு பாராமல் அனைவருக்கும் அறிவுக் கண்ணை திறந்தார்.

நான்காயிரம் முழுநேர ஊழியர்கள் அதற்காக உழைத்தனர். பல்லாயிரம் கிணறுகள் தோண்டி நீர் தேவைகளை பூர்த்தி செய்தார். ஏராளமான பள்ளிக்கூடங்களை கட்டினார். மருத்துவமனை நிறுவினார். இஸ்லாத்தை விரும்புவோருக்கு மட்டுமே கலிமா சொல்லிக் கொடுத்தார். சேவையை சேவையாக மட்டுமே செய்தார். அதை மதமாற்றத்திற்கான ஒரு கருவியாக ஆக்கிட விரும்பவில்லை அவர்.

தன் சேவைகளைப் பாராட்டி தனக்கு வழங்கப்படும் விருதுகளின் தொகைகளையும் ஆப்பிரிக்க மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்துள்ளார்.

இஸ்லாமிய பிரச்சாரப் பணியின் சேவகர், ஆப்பிரிக்க ஏழைகளின் பணியாளர், நன்மைகளின் தூதுவன், இஸ்லாமிய பிரச்சாரகர்களின் தலைவர் என்றெல்லாம் பட்டப் பெயர்களைப் பெற்ற அப்துர் ரஹ்மான் அஸ்சுமைத் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் நான்கு நூல்களையும் எழுதியுள்ளார். அவருடைய ஒரு நூலின் பெயர் ‘தம்அத்துன் அலா ஆப்பிரிக்கா’ (ஆப்பிரிக்காவின் மீது ஒரு துளி கண்ணீர்.)

தன் பரந்த சேவைகளால் உலகின் கதவை தட்டிய அவர் முதுமையிலும் தன்சேவைக் கதவை மூட வில்லை. உடல் பலவீனமுற்று நோய்களின் இருப்பிடமாக அது ஆனபின்னரும் ஆப்பிரிக்க மக்களைப் பற்றியே சிந்தித்தார். நீண்ட தூரம் பயணித்தார். 

தம் பணிகளை உலகில் வைத்து விட்டு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இறைவனிடம் ஏகினார்.•

அஷ்ரஃப் இஸ்லாம்

7 comments:

  1. அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வழங்குவானாக.

    ReplyDelete
  2. May Allah grant him the Paradise. Had the privilege to associate with him, Alhamdulillah.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. May almighty Allah grant him Jannathul Firdous! Aameen.

    ReplyDelete
  5. May Almighty Allah Grant him the Highest place in Paradise/Janna..

    ReplyDelete
  6. اللهم اتبعه آلاف من المحسنين أمثاله

    ReplyDelete
  7. அல்லாஹ் வழங்கிய பெரும் பாக்கியம் அவர்களின் பணி இருதி நாள் வரை தெடற வல்லா இறைவன் அருள்புரிவனக

    ReplyDelete

Powered by Blogger.