Header Ads



முடிவைக் கைவிட்டார் மைத்திரி

தனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

19 ஆவது திருத்தச்சட்டம் 2015  மே 15ஆம் நாளே நடைமுறைக்கு வந்த நிலையில், தமது 5 ஆண்டு பதவிக்காலம் எப்போது தொடங்கி – எப்போது முடிகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்க சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார் என்று கடந்தவாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் 18 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய 6 ஆண்டுகளா, அல்லது 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய 5 ஆண்டுகளா என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.

அதுகுறித்து முன்னாள் தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 5 நீதியரசர்களைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி, 12 பக்க விளக்கத்தை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியிருந்தது.

இந்தநிலையிலேயே, தமது 5 ஆண்டு பதவிக்காலம் எப்போது தொடங்கியது என்று வினவ சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

எனினும், இவ்வாறு உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோர வேண்டாம் என்று சிறிலங்கா அதிபருக்கு அவரது சட்ட ஆலோசகர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஏற்கனவே உச்சநீதிமன்றம், அளித்திருந்த 12 பக்க விளக்கத்தில், ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே அதனை தம்மால் மீளாய்வு செய்ய முடியும் என்று தெளிவாக கூறியிருந்தது.

19 ஆவது திருத்தம் இப்போது சட்டமாகி விட்ட நிலையில், திருத்தத்தின் செல்லுபடியாகும் தன்மை அல்லது அரசியலமைப்பு தன்மையை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று நீதியரசர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையிலேயே, பதவிக்கால நீடிப்புத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை சிறிலங்கா அதிபர் நாட முடியாது என, சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் உச்சநீதிமன்ற விளக்கத்தைக் கோரும் முடிவை மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.