July 06, 2019

"மறந்து விடாதீர்கள்" - சிங்களவர்களில் இப்படி நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்

பெண்ணியல் நோய்கள் மற்றும் மகப்பேற்று மருத்துவத் துறை நிபுணரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மேற்படி துறைத் தலைவருமான பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க அவர்களை நேற்று கொழும்பில் RRG(பொறுப்பு மிக்க ஆட்சிக்கான மதங்கள்)அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செயலமர்வின் போது சந்திக்க நேரிட்டது.

டாக்டர் ஷாபியின் விவகாரத்தில் மிகவுமே நியாயமாகப் பேசிய,எழுதிய வைத்தியர் அவர். அவருடன் தனிப்பட்ட முறையில் எனக்கு உரையாடக் கிடைத்த போது, டாக்டர் ஷாபியின் விடயமாக தான் நியாயத்தைப் பேசிய போது பலத்த எதிர்ப்பு சமூகத்திலிருந்து வந்ததாகவும் அதில் தான் ஈடுபட்டமை ஒரு புண்ணியமான கருமம் என்றும் சொன்னார்.

மேலும் அவர் தனக்கு முஸ்லிம் நண்பர்கள் அதிகம் இருந்ததாகவும் அவர்களுடன் நெருக்கமாக தான் பழகியதாகவும் சந்தோஷமாகத் தெரிவித்தார்.

அவரது அடக்கத்தையும் துணிச்சலையும் நியாயத்திற்காக குரல் கொடுக்கும் ஆர்வத்தையும் கண்ட பொழுது உண்மையில் உள்ளத்தில் சந்தோஷமும் அவர் மீதான அன்பும் ஏற்பட்டது. பெரும்பான்மை சமூகத்தில் இப்படியான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நினைத்து நிம்மதி அடைய முடிந்தது. உரையாடலின் போது அவரது அடக்கமான தன்மையை உணர முடிந்தது.

அவரது தொலைபேசி இலக்கத்தை கேட்ட பொழுது எவ்வித தயக்கமின்றி தந்ததுடன் எந்த நேரத்திலும் தன்னுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். சிரச தொலைக்காட்சி நிறுவனம் தன்னை ஒரு நேர்காணலுக்காக அழைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

அவரிடம் கல்வி கற்ற தர்கா நகரைச் சேர்ந்த எனது நண்பரான ஒரு வைத்தியரை நான் தினமே சந்திக்கக் கிடைத்த பொழுது பேராசிரியரை சந்தித்தமை பற்றி கூறினேன். அப்போது அந்த வைத்தியர் தான் மருத்துவத் துறை கல்வியை முடித்த பின்னர் வைத்தியசாலையில் இன்டன்ஷிப் internship செய்துகொண்டிருந்த போது பேராசிரியரியரிடம் இருந்து பயிற்சி பெற்றதாகவும் பேராசிரியர் அவர்கள் பணத்துக்குப் பின்னால் ஓடாதவர் என்றும் நோயாளிகளுடன் மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் ஒரு வைத்தியர் என்றும் தனியார் வைத்தியசாலைகளை விட அரச வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை வரவழைத்து வைத்தியம் பார்ப்பதில் தான் அவர் கூடிய அக்கறை எடுப்பார் என்றும் அவரது வைத்தியப் பணி Genuine Practice (நியாயமான பணி) என்றும் கூறினார்.

இத்தகைய தகவல்கள் பேராசிரியர் மீதான அபிமானத்தை இன்னும் அதிகரித்தது. சுயநலமிகள் மலிந்திருக்கின்ற இந்த உலகத்தில்,தமது வைத்திய துறையில் இருந்த ஷாபி டாக்டர் மீது வீண் பழி சுமத்திய வைத்தியர்கள் இருக்கும் இக் காலகட்டத்தில் இப்படியான வைத்தியர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க 21ஆம் நூற்றாண்டில் வாழும் ஒரு அபூதாலிப் அல்லது முத்இம் இப்னு அதி. இத்தகையவர்களுடனான உறவுகளைப் பலப்படுத்துவோம்.அந்த அணியில் இன்னும் பலரைச் சேர்ப்போம்.

முஸ்லிம் அல்லாத அனைவரும் மோசமானவர்கள் இல்லை.

டாக்டர் ஷாபிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட போது பேராசிரியர் அவர்கள் Daily Mirror பத்திரிகையில் எழுதிய ஆக்கத்தின் link இது:- http://www.dailymirror.lk/breaking_news/Sterilisation-story--’highly-unlikely’:-Prof--Senanayake/108-168605?fbclid=IwAR1vcjVVO-DWGMDT5XjN6DYtPko3QqYCUIDoAkQMlPCwlui0Y96h2Fd6IYI

S.H.M.Faleel


3 கருத்துரைகள்:

ஒரு இனவாதிகலால்தான் இவ்வளவு பிரச்சினையும் நமது நாட்டில்.ஆனால் பெரும்பாண்மை சிங்கள மக்கள் இன்னும் மனாசாச்சி,மனிதாபிமானத்துடந்தான் உள்ளனர்.

We respect you Professor..

Post a comment