Header Ads



முஸ்லிம்களின் இருப்பையும், எதிர்காலத்தையும் கல்முனை உபபிரதேச செயலகம் முடக்கும்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக உருவாக்கம் இன்று ஒரு பேசுபொருளாக மாறியுள்ளதுடன் அந்த விடயங்களை ஒரு முறையற்ற விதத்தில் முன்வைத்து முஸ்லிம் மக்களின் இருப்பையும், அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளையும் முடக்கி விடுகின்ற ஒரு செயற்பாடாகவே தற்போது காணப்படுகின்றது. இது தொடர்பில் எமது நியாயங்களை தெளிவுபடுத்திய கோரிக்கையை அரசுக்கு முன்வைத்துள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக பேசுபொருளாக மாறியுள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலக உருவாக்கத்தின்போது கல்முனை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் கல்முனை பிரதேச செயலக பிரச்சினைகள் குறித்தும் அட்டாளைச்சேனை பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்றிரவு (07) அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஜுனைதீனின் தலைமையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தலை முன்வைத்து சில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக தமிழ் மக்களின் மனதில் இனவாதக் கருத்துக்களை விதைத்து வருகின்றனர். இந்த செயற்பாடானது எமது முஸ்லிம், தமிழ் மக்களிடத்தில் காலா காலமாக இருந்து வருகின்ற இன நல்லூறவை பிரித்து, அவர்களுக்குள் ஒரு பகையை வளர்த்துவிடுகின்ற விடயமாகக் காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் பிரதான நகரங்களாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற பல நகரங்கள்  இருக்கிறது. ஆனால் கல்முனை மாநகரம் மட்டும்தான் முஸ்லிங்களின் தாயகமாக இருக்கின்றது. இதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. மறைந்த எம்.எஸ்.காரியப்பர், எம்.சி.அஹமத், ஏ.ஆர்.எம்.மன்சூர், தலைவர் அஷ்ரப் போன்றவர்களின் முயற்சியும், கல்முனையை செதுக்கிய பாரிய பங்கும் அவர்களுக்குண்டு. இதனை அறியாதவர்கள் தமிழ், முஸ்லிம் உறவை சீரழித்து விடுவதுடன் கல்முனையை கூறுபோட சிலர் துடியாய் துடிக்கின்றனர். 

சொற்ப அரசியல் இலாபத்துக்காக மக்களிடத்தில் ஒரு மோதலையும், ஒரு பகையையும் வளர்க்கும் செயற்பாட்டை அந்த அரசியல்வாதிகள் முதலில் கைவிடவேண்டும் என்று அவர்களை கேட்டுக்கொள்வதுடன், இந்த விடயத்தில் முஸ்லிம் மக்கள் மிக நிதானமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார். 

கல்முனை பிரதேச விவகாரம் தொடர்பாகவும், இதனால் கல்முனை முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள், கல்முனையின் கடந்தகால வரலாறுகள் பற்றிய மிகத் தெளிவான விளக்கத்தினை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எச்.எம் நிசாமினால் அட்டாளைச்சேனை மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இவ்விளக்கக் கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  
பைஷல் இஸ்மாயில், சிபான் முஹம்மட் -

1 comment:

  1. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தர உயர்வு பிரச்சினை 30 வருடங்களாக விவாதிக்கபட்ட விடயம். இன்று எல்லை மீழ் வரைவு பற்றிய விடயமே முன்னிலைபட்டுள்ளது. எல்லை மீழ் வரைவில் நீதியான விட்டுக்கொடுப்புகளுக்கு தமிழர் தரப்பை தயாராக்கவேண்டும் வேண்டும் என விருபுகிறோம். எல்லை மீழ்வரைவில் கல்முனை முஸ்லிம் குறைந்த பட்சம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முகமட் நசீர் அவர்கள் எல்லை மீழ் நிர்ணயத்தை வலியுறுத்துகிறாரா இல்லையா? வலியுறுத்தினால் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறார் என்பதை ஏ.எல்.முகமட் நசீர் அவர்கள் குறிப்பிட வேண்டும். பெரும்பாலும் அரசு விரைவில் தீர்மானத்தை எட்டிவிடுமெனச் சொல்லப்படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.