July 08, 2019

மூட்டைப் பூச்சிக் கதையினால் முஸ்லிம்கள் அஞ்சி ஒடுங்கி, அமைதியிழந்து வாழ்கின்றனர் - ஜெஹான் பெரேரா

 (ஏ.எச்.ஏ. ஹஸைன்)

‘இன்றைய  வலுவிழந்த அரசாட்சியின் கீழ் மூட்டைப் பூச்சிக் கதையினால் முஸ்லிம்கள் அஞ்சி ஒடுங்கி அமைதியிழந்து வாழ்கின்றனர்’ என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையின் ‘மோதல் மாற்றத்துக்கான பல் நிலைக் கூட்டு நடவடிக்கைகளைப் பலப்படுத்தல்’ எனும் செயற்திட்டத்தின் கீழ் “வன்முறையற்ற பிரயோக தொடர்பாடல்“ பயிற்சி நெறி கண்டி லேவெல்ல பற்றிமா தியான இல்லத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தேசிய சமாதானப் பேரவையின் சமாதான செயற்பாட்டாளர்களான தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களையும் சேர்ந்த சுமார் 45 பேரின் மத்தியில் அவர் சிறப்புரையாற்றினார்.

ஞாயிற்றுக்கிழமை 07.07.2019 இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வில் பங்குபற்றுநர்களுக்கு சான்றிதழை வழங்கி வைத்து அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்று கூறுமளவுக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி வன்முறைகளைத் தூண்டுவோரின் அராஜகம் கோலோச்சுகிறது. எனக்கு நன்கு தெரிந்த சுமார் 25,30 வருட காலமாக பொம்பாய் மிட்டாய் விற்கும் ஒரு ஏழை முஸ்லிம் அன்பர் விரக்தியுற்றவராக நிற்கிறார். காரணம் அவரிடம் அராஜக சிந்தனையாளர்கள் மூட்டைப்பூச்சிக் கதையைச் சொல்லி அவரது முடங்கச் முடங்கச் செய்திருக்கிறார்கள்.

அவர் செல்லுமிடங்களில் அவர்கள் “தம்பிலா” என்றும் இன்னும் தரமற்ற எத்தனையோ வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி அவரை வசைபாடுவதாக வேதனைப்படுகிறார்.

ஒரு மூட்டைப்பூச்சி கடித்தால் ஒட்டு மொத்த மூட்டைப் பூச்சியையும்தானே கொல்ல வேண்டும் என்ற உலுத்தர்களின் கதைகளால் இந்த நாடே உயிரற்றுப்போய் நிற்கின்றது.

இன்னும் ஒரு 6 மாத காலத்துக்குள் கட்டத்துக்குள் தேர்தலுக்குச் செல்கின்றோம்.எப்படியாவது வாக்குகளைப் பெற்றுக் கொள்ள இனவாதத்தைத் தூண்டி பயத்தையும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று அராஜகவாதிகள் கங்கணம்கட்டி நிற்கிறார்கள்.

அதற்கான முன்முயற்சிகள் இப்போ து மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன.தூண்டி விடும் வெறுப்புப் பேச்சு அளவு கடந்து போயுள்ளது.ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் நாடு பிளவுபட்டு நம்பிக்கையிழந்துள்ளோம்.எங்களுடைய நாட்டிலே பரந்த சிந்தனையாளர்கள் குறைவு.

எங்களை அழிக்க ஆயத்தமாகின்றார்கள் என்று இலங்கையில் வாழும் எந்த சமூகமாவது நினைக்குமளவுக்கு நாட்டு நடப்புக்கள் செல்லுமாக இருந்தால் அது எங்களுக்கு நல்ல சகுனமல்ல. நாம் அழிவுகளையே சந்திப்போம். 19 ஆது திருத்தத்தை நீக்கி 18க்குப் போவோம் என்று ஜனாதிபதி சொல்கிறார் அது உண்மைதான்.

19வது அரசியல் திருத்தத்தின் மூலம் இந்த நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. அதிகாரம் பகிரப்பட்டதினால் இந்த இழுபறி. ஜனாதிபதியும் பிரதமரும் எதிரிகள் போல பணியாற்றுகின்றார்கள். அதனால் அரசாங்கம் மிகவும் வலுவிழந்து விட்டது.

மரண தண்டனையால் ஒருபோதும் தீர்வு கிடைப்பதில்லை. பௌத்த தர்மத்தின் கீழ் ஒரு உயிரைப் பறிக்கவும் முடியாது. ஆனால் இந்த விடயத்தில் உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்” என்றார்.

0 கருத்துரைகள்:

Post a comment