Header Ads



முஸ்லிம் சகோதரிகள் முகம்கொடுத்த ஹபாயா பிரச்சினையும் ,தீர்த்து வைக்கப்பட்ட விதங்களும்..!!

- பர்வீன் -

இஸ்லாமிய பெயர் கொண்ட கூலிப்படை தீவிரவாதிகளின்  மிலேச்சத்தனமான தற்கொலைக்  குண்டு தாக்குதலை அடுத்து முஸ்லிம் சமூகம் பல நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. அதிலும் குறிப்பாக  முஸ்லிம் பெண்கள் பரவலாக எல்லா பிரதேசங்களிலும் அசௌகரியத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணிகின்ற புர்கா,நிகாப் போன்ற ஆடைகளை தடை செய்யக்கோரி பெரும்பான்மை சமூகத்தின் பல மட்டங்களிலிருந்து குரல்கள் எழுந்தன. எனவே முஸ்லிம் பெண்கள் முகத்தை முற்றாக  மூடி அணிகின்ற புர்கா மற்றும் நிகாப்புக்கான தடை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விதிக்கப்பட்டது. 

ஆனால் தீவிரவாத சிந்தனை கொண்ட பௌத்த குழுக்களால் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பரப்பப்பட்டுவந்த பொய்யான விஷமப்பிரச்சாரங்கள், முஸ்லிம் பெண்களை பொதுத்தளங்களில் மலினப்படுத்துவதாகவும் அவர்கள் அணிந்து செல்கின்ற முகத்தை மூடாத ஒழுக்கமான ஆடையான ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து செல்வதை தடுப்பதாகவும் அமைந்தன. 

முஸ்லிம் பெண்களின் ஆடைகளை, மிதவாத போக்கினை கொண்ட இனவாத சிங்களவர்கள் கடந்த காலங்களில்  தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு உட்படுத்தியிருந்தார்கள். பெண்கள் முகத்தை முற்றாக மூடுவதை மட்டுமே அரசு தடை செய்திருந்தே தவிர முகத்தை திறந்து தலையை மூடுகின்ற வகையில் அணிகின்ற ஹிஜாப்பினை அரசாங்கம் ஒரு  போதும் தடை செய்திருக்கவில்லை. ஆனால் வேண்டுமென்றே முஸ்லிம் பெண்களை சீண்டிப்பார்க்கின்ற நிகழ்ச்சி நிரலை நேர்த்தியாக செய்துகொண்டிருந்தன சிங்கள இனவாதக்குழுக்கள்.

பொதுத்தளங்களில், போக்குவரத்தில், வைத்திய சாலையில் , அரசாங்க அலுவலகங்களில், பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். ஹிஜாபை கழட்டுமாறு நிர்பந்திக்கப்பட்டார்கள், கீழ்த்தரமான வார்த்தைகளை பாவித்து அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தினார்கள். சில இடங்களில் பலாத்காரமாக ஹிஜாப்பினை பிடித்து இழுத்து கழட்டிப்போட்டார்கள்,வார்த்தைகளால் காயப்படுத்தினார்கள் இன்னும் சொல்லமுடியாத பல இன்னல்களை முஸ்லிம் பெண்கள் அனுபவித்தார்கள். 

முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை எதிர்பார்க்கின்ற எந்த ஒரு அரசியல் கட்சியும் அல்லது ஆத்மீக ரீதியாக முஸ்லிம்களின் பங்களிப்பை கொண்டிருந்த எந்த ஒரு இயக்கமும்  முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் இந்த அவலநிலை தொடர்பில் காத்திரமான முன்னெடுப்புகளை செய்யவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகட்டும் அல்லது ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகட்டும் அல்லது வேறு முஸ்லிம் அரசியல் கட்சிகளாகட்டும் அனைவருமே வெறும்மனே அறிக்கை அரசியலையே செய்து வந்தனர். இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு பெற்ற ஒரு கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்திரமான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டது. 

முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து வெளியே வருவதில் அனுபவித்து வருகின்ற சிக்கல்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலம் என்பனவற்றின் மூலம் வெகுவாக பேசப்பட்டது. இந்த விடயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்குஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன்,மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அர்ஷாத் நிசாமுதீன், அமைச்சரின் சகோதரர் கவிஞர் ரவூப் ஹஸீர் ஆகியோரின் மூலம் தெரிவிக்கப்பட்டதும் தலைவர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனையின் பிரகாரம் அன்றைய தினமே மேற்குறித்த மூவர் உட்பட சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் ரியாஸ் கபூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் தமீம், தலைவர் ரவூப் ஹக்கீமின் இணைப்பாளர் ஷெரீப் முஹம்மத் ரிம்ஸான்  ஆகியோர் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமை சந்தித்து பிரச்சினையின் உக்கிரத்தை விளக்கினர். அதன்போது இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் முஸ்தபாவும் தன்னுடன் பேசியதாகவும் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் தெளிவான சுற்றுநிருபத்தை சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வெளியிட உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கூறினார். அதுமட்டுமல்லாது குறித்த சுற்று நிரூபத்தின் பிரதியொன்றையும் குறித்த குழுவிடம் வழங்கியதோடு, சுகாதார திணைக்களத்தின் மூலம் திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் உடனடியாக அனுப்பும் படியும் பணித்தார்.

இதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. கவிஞர் ரவூப் ஹஸீர் தலைமையில் விஷேட  செயலணி ஹபாயா தொடர்பில் எழுகின்ற பிரச்சினைகளுக்கு நேரடியாக தளத்திற்கே சென்று தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டது. அந்த விசேட செயலணியில் ரியாஸ் கபூர், ஷெரீப் முஹம்மத் ரிம்ஸான், அஹமத்  சக்கி ஆகியோர் நியமிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டது. இந்த செயலணி தொடர்பில் ஊடகங்களின் ஊடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகம் தாருஸ்ஸலாத்தில் ஒருவர் தொடர்ந்தும் புகார்களை உள்வாங்குவதற்கு அமர்த்தப்பட்டார். பெற்றுக்கொள்ளப்பட்ட புகார்களை உரிய முறையில் விசாரித்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் இருவர் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில்   ரியாஸ் கபூர், ஷெரீப் முஹம்மத் ரிம்ஸான் களச்செயற்பாட்டுக்கு நியமிக்கப்பட்டனர். 

களச்செயற்பாட்டுக்காக  நியமிக்கப்பட்ட ரியாஸ் கபூரின் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை. இது தொடர்பில் ரியாஸ் கபூரிடம் கேட்டோம். 

ஹபாயா தொடர்பில் வருகின்ற புகார்களுக்கு,பாதிக்கப்படுகின்ற முஸ்லிம் பெண்களுக்கு உதவும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அதன் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட செயலணிக்கு களச்செயற்பாட்டுக்காக நானும் நியமிக்கப்பட்டேன். ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பான சுற்று நிரூபத்தையும், அணிய அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளின் வடிவத்தை கொண்ட படத்தையும் என்னிடம் வைத்திருந்தேன்.  

அன்றைய தினமே கொழும்பு காசல் வைத்தியசாலையிலிருந்து எமது செயலணிக்கு முதலாவது புகார் கிடைத்தது. ஹபாயாவுடன் சென்ற முஸ்லிம் பெண்ணை  பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து வைத்திருப்பதாகவும், ஹபாயாவுடன் செல்லும் முஸ்லிம் பெண்கள் திருப்பியனுப்பப்படுவதாகவும் தகவல் கிடைத்தது. உடனயாக ஸ்தலத்திற்கு நான் விரைந்தேன். எமக்கு கிடைத்த முறைப்பாட்டினை உறுதிசெய்து கொண்டேன். பாதுகாப்பு ஊழியர்களிடம் பேசியதில் பயனேதுமில்லை என்பது புரிந்தது. சுகாதார பிரதியமைச்சரின் இணைப்பாளர் என்ற எனது அடையாள அட்டையினை பயன்படுத்தி அந்த வைத்தியசாலைக்கு பொறுப்பான உயர் அதிகாரியை சந்திக்க அனுமதி கேட்டேன்.அனுமதி தந்தார்கள் அன்றைய தினம் பொறுப்பாக இருந்த நிர்வாக அதிகாரியை சந்தித்து சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தை காட்டினேன். அத்தோடு அதுதொடர்பாக விளக்கப்படத்தை அவருக்கு காட்டினேன். அவர் அதனை முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு உயர் அதிகாரியை அழைத்து  முகத்தை மறைக்காமல் ஆடை அணிந்து வரும் முஸ்லிம் பெண்களை அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்தநிமிடமே அந்தப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

அடுத்த நாள் கொழும்பு  பெரியாஸ்பத்திரியில்  Accident வாட்டுக்கு சென்ற இரண்டு பெண்கள் ஹபாயா அணிந்து சென்றுள்ளார்கள். அவர்களை Security Point இல் நிறுத்தி பர்தாவை கழட்டிவிட்டு உள்ளே போகுமாறு ம், கழட்ட முடியாவிட்டால் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கடமையிலிருந்த security கேட்டுள்ளார். அவர்கள் மறுக்கவே இருதரப்பாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் குறித்த இரு பெண்களில் ஒருவர் Security இன் செயற்பாட்டை தனது கைத்தொலைபேசியினால் வீடியோ பண்ணியுள்ளார். அவசர காலச்சட்டத்தை காரணமாக வைத்து   குறித்த இரண்டு பெண்களையும் வைத்தியசாலை பொலிஸாரிடம் கையளித்தனர். வைத்தியசாலை பொலிஸார் அந்த இருவரையும் மருதானை பொலிஸாரிடம் ஒப்படைந்திருந்தனர். இந்த தகவல் எமது செயலணிக்கு கிடைத்தவுடன், எனக்கு தகவல் கிடைத்தவுடன் உடனே ஸ்தலத்திற்கு நான் விரைந்தேன்.

குறித்த இரண்டு பெண்களும் மருதானை பொலிஸ் ஸ்தானத்தில் செய்வதறியாது வீற்றிருந்தனர். அவர்களின் நிலை பார்க்க பரிதாபமாக இருந்தது. நான் நேரடியாக மருதானை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சென்றேன் விடயத்தை விளக்கினேன். சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபம் மற்றும் விளக்கப்படம் ஆகியவற்றை காட்டினேன். அவர்கள் வீடியோ எடுத்தது பிழைதான், ஆனால் அவர்களுக்கு இந்த அவசரகால சட்டம் தொடர்பில் எவ்விதமான அறிவும் இல்லாதவர்கள் என்ற விளக்கத்தை ஆறுதலாக கூறினேன். நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த இரண்டு பெண்களையும் அவர்களின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு உடனடியாக விடுதலை செய்தார்கள். விடுதலை செய்யப்பட்ட இரு பெண்களும் எனக்கு பிராத்தனை செய்துவிட்டு நன்றியுடன் கிளம்பிச்சென்றனர்.    

மாளிகாவத்தை வைத்தியசாலையில்  ஹபாயா அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்டுவதாக இன்னுமொரு புகார் எங்களது செயலணிக்கு கிடைத்தது. எனவே குறித்த வைத்தியசாலைக்கு நான் சென்று அங்குள்ள மாவட்ட வைத்திய அதிகாரியை சந்தித்தேன். அந்த வைத்திய சாலையின் அபிவிருத்திக்குழு தலைவர்  என்கின்ற வகையில் அந்த வைத்தியசாலையின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை அவர் அழைத்து விசேட கூட்டமொன்றினை ஏற்பாடு செய்து தந்தார். 

முஸ்லிம் பெண்களின் ஆடைகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் தொடர்பில் அவர்களுக்கு பூரண விளக்கத்தை கொடுத்து விளக்கப்படத்தையும் காட்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு விளக்கமளித்தேன். அவர்கள் அனைவரும் எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு வைத்தியசாலையின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்கள். இவ்வாறு கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் எமது சமூகத்து பெண்களின் ஆடை விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு  முன்னின்று செயற்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும், சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இவ்வாறே களப்பணியில் இயங்கிய ஷெரீப் முஹம்மத் ரிம்ஸானின் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார் 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பற்சிகிச்சை பிரிவுக்கு சென்ற முஸ்லிம் பெண்ணொருவர் அவர் அணிந்திருந்த ஹபாயாவை கழட்டுமாறு வற்புறுத்தப்பட்டதாகவும் அவர் அதனை மறுக்கவும் அவரை உள்ளே செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாத்தில் இருந்து எனக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நான் குறித்த இடத்திற்கு சென்றேன். அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்ளிடம் என்னிடம் இருந்த முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பிலான சுற்று நிரூபத்தை காட்டினேன். அதற்க்கு அவர்கள் எங்களுக்கு மேலிடத்தில் இருந்து வருகின்ற உத்தரவின் படியே நாங்கள் நடக்கின்றோம் என்றனர். உயர் அதிகாரிகளிடம்  பேசவேண்டும் என்றேன். அனுமதியளித்தார்கள் பற்சிகிச்சை பிரிவில் பெண் உத்தியோகத்தர் ஒருவரே என்னுடன் கதைத்தார். அவருக்கு சுற்று நிருபம் தொடர்பில் எவ்விதமான அறிவித்தலும் கிடைக்கவில்லை என்றார்.

என்னிடமிருந்த சுற்று நிருபத்தை அவருக்கு காட்டினேன். அவர் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஹபாயா அணிந்து முஸ்லிம் பெண்கள் தலையை மூடி வருவதனால்  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே ஹபாயாவை அனுமதிக்க முடியாது என்றார். எனக்கும் அவருக்கும் இடையில் மிகநீண்ட வாக்குவாதம் இடம் பெற்றது. இறுதியில் இதுதொடர்பில் குறித்து சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்க நான் முனைந்தேன். இறுதியில் அவர் அந்த சுற்று நிருபத்தை ஏற்றுக்கொண்டார். அப்போதைக்கு அந்த பிரச்சினை தீர்ந்தது. அதன் பின்னர் சுகாதார இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு சென்று குறித்த வைத்தியசாலைக்கு அந்த சுற்று நிருபத்தை உத்தியோகப்பூர்வமாக அனுப்ப வைத்தேன். ஏற்கனவே அந்த சுற்று நிருபமானது அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும் அது உரிய முறையில் குறித்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்படாமையே இந்த குழப்ப நிலைக்கு காரணம் என என்னால் உணர முடிந்தது. 

இவ்வாறு கொழும்பையும், அதை அண்டிய பல இடங்களில் இருந்தும்  இந்த ஹபாயா தொடர்பிலான புகார்கள் வந்தன அவற்றில் சுமார் 80% மானவற்றை உடனடியாக குறித்த ஸ்தலத்திற்கு சென்று நாங்கள் தீர்த்து வைத்தோம். சிலவற்றை உடனடியாக  எம்மால் தீர்க்க முடியவில்லை.  ஆனால் சிலநாட்களில்  அந்த பிரச்சினைகளும்   முடிவுக்கு வந்தன. 

இந்த கால எல்லையில்  முஸ்லிம் பெண்கள் ஆடை தொடர்பில் முகம் கொடுத்த பல்வேறு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முனைப்புடன் செயற்பட்டது. இவ்வாறான சமூகம் சார்பான செயற்பாடொன்றில் எனக்கும் இணைந்து செயற்பட கிடைத்ததையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 

அண்மைக்காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிய பிரச்சினைகளில் பிரதானமானது இந்த ஹபாயா பிரச்சினையாகும். இதனால் முஸ்லிம் பெண்கள் பலத்த கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆனால் சிக்கலான அந்த பிரச்சினைக்கு களத்தில் நின்று செயற்பட்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற தனித்துவமான முஸ்லிம் சமூகத்தின் அடையாளக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.