June 28, 2019

தமிழர்கள் பெருமளவில் இந்நாட்டில் குறைவடைந்துள்ளார்கள் - திலகராஜ் Mp

- பா.நிரோஸ் -

தற்போது நாட்டில், சனத்தொகையை இன ரீதியாகக் கட்டுப்படுத்தும் கைங்கரியங்கள் இடம்பெறுவதாகவும் அதுபற்றிய தீர்க்கமான விசாரணைகள் வேண்டும் எனவும் பல்வேறான கோரிக்கைகள் எழுகின்ற நிலையில்,  மலையகத் தமிழ் மக்கள் மீது,  திட்டமிடப்பட்டவகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டாயக் கருத்தடை திட்டம் தொடர்பில்,  தீர்க்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று,  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கோரிக்கை விடுத்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதுத் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, அவசரகால நிலைமையை, மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணையை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும் இந்த சட்டங்களின் மூலம், பாதுகாப்பு எனும் போர்வையில் பாடசாலைகளுக்கு முன்பாக, ஆயுதம் தாங்கிய படைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அது பிள்ளைகளின் பாதுகாப்புக்கானதாக இருந்தாலும்கூட, தினமும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரைக் கடந்தே எமது மாவணர்கள் பாடசாலைக்கு செல்வதால், அதனால் ஏற்படும் உளவியல் தாக்கத்தை   புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

“குறிப்பாக மாணவர்கள், அந்த ஆயுதங்களைப் பற்றி தெரிந்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் அது பின்னாளில் அவர்களை எவ்வாறு உருவாக்கப் போகின்றது என்றக் கேள்வியை எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

வீட்டிலே விளையாடும் சிறுவவர்கள், அடையாள அட்டையைக்  கோருவதையும் உடற்பரிசோதனை செய்வதையும்,  தமது விளையாட்டின் அங்கமாகச் சேர்த்துக்கொள்கிறார்கள். இல்லாவிட்டால் தமது வீட்டில் குண்டு வெடிக்கும் எனக் கருதுகிறார்கள். இந்த உளவியல் மனநிலை,  எமது எதிர்காலச் சந்ததியனருக்கு உகந்தது அல்ல. எனவே, பாதுகாப்பு எனும் பெயரில் நாம் எத்தனை காலத்துக்கு, பாடசாலைகளுக்கு முன்பாக  இராணுவத்தை நிறுத்தப்போகிறோம் எனும் தீர்மானத்தை, நாடாளுமன்றத்தில் எடுக்க வேண்டியுள்ளது. இது தொடரபில் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும் கூறிய அவர்,  “அவசர காலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில்,  பலமுறைக் கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான விடுதலைப்புலி உறுப்பினர்களை, புனர்வாழ்வளித்து விடுதலை செய்தபோதும் நூறுக்கும் குறைவான தமிழ் இளைஞர்களை, உரிய விசாரணையின்றி தடுத்து வைத்திருப்பது வேதைனைக்குரியது.

“கண்டி தலதா மாளிகை மீதுத் தாக்குதல் நடத்திய பிரதான சூத்திரதாரிகள் விடுதலைப் பெற்றுவிட்ட நிலையில், அதனோடு தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், இன்னும் சிறையில் வாடுகின்றனர். இத்தகைய  அப்பாவி இளைஞர்கள் விடுதலை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்துரைத்த அவர், இன்று நாட்டில், சனத்தொகை விடயத்தில், இன ரீதியாகவம் மத ரீதியாகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், புள்ளிவிவரங்களுடன் தரவுகளை முன்வைத்தார். அதில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 23.5 சதவீதமாக இருந்த நாட்டின் இந்து சனத்தொகை,  தற்போது 12.5 சதவீதமாக உள்ளது என குறிப்பிட்டார்.

“நான் மத ரீதியாகவோ, இன ரீதியாகவே எனதுக் கருத்தை முன்வைக்கவில்லை. இந்துக்களில் பெருளமவானோர், தமிழர்கள் என்கின்றவகையில் தமிழர்கள் பெருமளவில் இந்த நாட்டில் குறைவடைந்துள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பொதுவாக இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ்மக்கள் புலம் பெயர்ந்து சென்றதும் உயிர்களை இழந்தததும் காரணமாக இருக்கலாம் என யாரும் எண்ணக் கூடும். எனினும் மலையக நிலையில், இதற்கு வேறுபட்ட காரணங்கள் உள்ளன. இந்த நாட்டில் மலையக மக்கள் மீது பிரதானமானது நான்கு அநீதிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று அவர்களின் குடியுரிமைப் பறிக்கப்பட்டமை, இரண்டாவது சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ், கொத்து கொத்தாக இலட்சக்கணக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தியமை, மூன்று, பொருளாதார ரீதியாக அவர்களை நசுக்கும் வகையில் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை திட்டமிட்டு வீழ்ச்சி அடையச் செய்தமை, நான்காவது மலையக மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் கட்டாயக் கருத்தடை முறைமையை நடைமுறைப்படுத்தியமை போன்ற அநீதிகள் நடந்தேறின.

1985ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுகியில், மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டவகையில் கட்டாயக் கருத்தடை நிகழச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை, அந்த மக்களின் பிரதிநிதிநதி என்றவகையில் உயரிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கிறேன்” என்றார்.

1 கருத்துரைகள்:

ORU SHILA BOUTHA THUVESHIHALIN
PILLAI PERHINRA VIYAZI, IWANAYUM
THOTRI IRUKKU.

Post a comment