Header Ads



பௌத்த அலை ஓரணியில் திரளும் வகையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படக்கூடாது - வேலுகுமார் Mp

சிங்கள, பௌத்த வாக்குகளை ஓரணியில் திரட்டுவதற்கான அரசியல் வியூகம் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன்ஓர் அங்கமே அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டமாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

அத்துரலிய ரத்ன தேரரால் கண்டியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே வேலுகுமார் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“ 21/4 தாக்குதலையடுத்து சிங்கள, பௌத்த மக்களை ஒருநிலைக்கு கொண்டுவந்து வாக்குவேட்டை நடத்துவதற்கான முயற்சியில் கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் ஈடுபட்டுவருகின்றன.

இன்று நேற்று அல்ல, முன்பிலிருந்தே தெற்கு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய பலத்தை பிக்குகள் கொண்டுள்ளனர். இதனால், எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் தேரர்களை அரவணைத்துக்கொண்டு பயணிக்கவே முற்படும். இதுவே வெளிப்படையான உண்மையும்கூட.

நாட்டின் நலனுக்காக பிக்குகள் களமிறங்கினால் வரவேற்கலாம். ஆனால், அரசியல் நோக்கத்துடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமானால் அதை ஆதரிக்கமுடியாது.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளன. எனவே, சிங்கள, பௌத்த மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் தற்போதிலிருந்தே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

2015 ஆம் ஆண்டிலும் அப்போதைய மஹிந்த அரசுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தவர்தான் ரத்தன தேரர். பல்வேறு அறிவிப்புகளை விடுத்தார். ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவற்றையெல்லாம் மறந்துவிட்டு தற்போது புதியதொரு விடயத்தை கையிலெடுத்துள்ளார்.

எனவே, தெற்கில் சிங்கள, பௌத்த அலை ஓரணியில் திரள்வதற்கு வழிவகுக்கும் வகையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படக்கூடாது. அரசியலுக்கு அப்பால் சமூகம்கருதி தீர்மானங்களை எடுக்கவேண்டும்.’ என்றார்.

4 comments:

Powered by Blogger.