June 26, 2019

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி, முன்னாள் அதிபர் மர்ஹூம் MM யூசுப்


- பரீட் இக்பால் -

யாழ்ப்பாணம், சோனகத் தெருவைச் சேர்ந்த அகமது லெப்பை முத்து முகம்மது – ஆசியா உம்மா தம்பதியினருக்கு 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முகம்மது யூசுப் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை மன்ப உல் உலூம் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை வைத்தீஸ்வரா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்றார். மேலும் இவர் 1938 இல் லண்டன் மெற்றிகுலேசன் கல்வியையும் மேற்கொண்டு அதில் விசேட சித்தியும் பெற்றார்.

முகம்மது யூசுப் ஆரம்பத்தில் இலங்கை வங்கியில் பணிபுரிந்து பின்னர் 1949 இல் ஆங்கில ஆசிரியர் சேவையில் இணைந்தார்.

இவர் யாழ்ப்பாணம், சோனகத் தெருவைச் சேர்ந்த சுல்தான் - பாத்திமா தம்பதியினரின் மகள் நயீமா என்பவரை 16.08.1944 இல் திருமணம் செய்தார்.

யூசுப் - நயிமா தம்பதியினருக்கு முத்தான 03 ஆண் பிள்ளைகளும் 06 பெண் பிள்ளைகளும் ஆவார்கள். ஆண் பிள்ளைகளாக கஸ்ஸாலி (ஒய்வு பெற்ற பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்) சாஜஹான் (கணக்காளர்) சிஹாப்டீன் ( வியாபாரி) பெண்பிள்ளைகளாக சுல்பிகா, வஜீஹா (ஓய்வு பெற்ற ஆசிரியை ) முஜீபா, அஸீஸா, பெரோஸா , சுஐபா.

யூசுப் ஆசிரியராக அலுத்கம, தர்ஹா நகர் அல் ஹம்றா மகாவித்தியாலயத்திலும்  சீனன் கோட்டை கனிஷ;ட வித்தியாலயத்திலும் பின்னர் கண்டி  மாவட்டத்தில் தோட்ட பாடசாலையில் சிறிதுகாலம்  பணியாற்றிய பின்னர் அக்குறன அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்திலும் பணியாற்றினார்.

யூசுப் அதிபராக கலஹா கனிஷ;ட வித்தியாலயத்திலும் கலகெதர மகா வித்தியாலயத்திலும் பின்னர் திஹாரி மகா வித்தியாலயத்திலும் 1958, 1959 இல் மன்னார் அல்அஸ்ஹர் மகா வித்தியாலயத்திலும் பணியாற்றியுள்ளார்.

1960 இல் யூசுப் யாழ்.மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று சிரேஷ;ட ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தார்.

1963 இல் யூசுப் கொழும்பு வித்தியோதய பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டதாரியானார்.

1964, 1965 இல் இவர் யாழ்ப்பாணம், ஒஸ்மானியா கல்லூரிக்கு அதிபராக பணியாற்றினார். ஒஸ்மானியா கல்லூரியின் அதிபராக பணியாற்றும் போது இவர் மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்ய அரும்பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயாகும்.

மீண்டும் 1966 தொடக்கம் ஓய்வு பெறும் வரை 1980 வரை யாழ் மத்திய கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

யாழ் மத்திய கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் இவர் மாணவர்களின் ஆங்கில அறிவை மேலும் விருத்தி செய்வதற்காக விஷேட அக்கறை கொண்டு 'ஸ்போக்கின் இங்லிஷ் புத்தகங்கள் எழுதியுள்ளார். யாழ் மத்திய கல்லூரியில் 'அராபியன் நைட்' கதைகளின் சில காட்சிகளை ஆங்கிலத்தில் நாடகப் பிரதிகளை தயாரித்து மாணவர்களைக் கொண்டு மேடையேற்றி பலரினதும் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டார். என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஓய்வு பெற்ற பின்னர் 1980 – 1985 காலப் பகுதியில் கல் எலிய பெண்கள் அரபுக் கல்லூரியில் உதவி அதிபராக கடமையாற்றியுள்ளார். இக்காலப் பகுதியில் க.பொ.த (சாஃத) பரீட்சையின் பாடத்திட்டத்திலிருந்து அரபுப் பாடம் நீக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்களுக்கு அரபுப் பாடத்தின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் விளக்கி ஒரு நீண்ட முறைப்பாட்டு மனுவைத் தயாரித்து ஜனாதிபதி, பிரதமர் கல்வி அமைச்சர் மற்றும் அரசியல், சமய பிரமுகர்களுக்கு தெரியப்படுத்தி அரபுப் பாடத்தை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்த்து கொள்வதற்கு இவர் காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் மார்க்க விடயங்களிலும் அதிக ஈடுபாடு உடையவராக காணப்பட்டார். இஸ்லாமிய சட்டக் கருவூலமாகிய 'மஆனி' என்னும் கிரந்தத்தை அரபுத்தமிழிலிருந்து தனித்தமிழில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு எழுத்துப் பிரதிகளை தயார் செய்து வைத்திருந்தார். ஆனால் அது புத்தக வடிவம் பெறாமல் எழுத்துக் கோவையாகவே இன்னும் உள்ளது.

இவர் மண்கும்பான் பள்ளிவாசலின் ஆரம்ப வரலாறு சம்பந்தமான சுவாரஷ;யமான பல விடயங்களை உள்ளடக்கியதாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

கௌரவ பாக்கீர் மாக்கார் சபாநாயகராக இருந்த காலப்பகுதியில் அவரின் வேண்டுகோளுக்கிணங்க 1979 இல் 'முஸ்லீக் லீக்' யாழ் கிளையை உருவாக்கி அதன் தலைமைப் பதவியை வகித்ததோடு பல சமூகப் பணிகளையும் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உயர் நிபுணத்துவம், கற்பிக்கும் திறன் மட்டுமல்லாமல் இவர் நற்பண்பும் நேர்மையும் சிலேடைப் பேச்சுக்களும் கொண்டவராக சிறந்த, திறமையான ஆசிரிய பணிக்கு இவரின் மாணவர்கள் இன்றும் சான்று பகர்கிறார்கள்.

இவ்வாறு இவர் ஆசிரிய பணியோடு மட்டும் நில்லாது பல்வேறு விடயங்களில் பங்களிப்பு செய்து எளிமையாக வாழ்ந்து 2002 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி தனது 82 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்கள். 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்'

மர்ஹூம் யூசுப் அதிபர் அவர்களுக்கு பிர்தௌஸ் என்னும் உயர் அந்தஸ்துள்ள சொர்க்கம் கிடைக்க அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

0 கருத்துரைகள்:

Post a comment