Header Ads



"இந்த அரசாங்கம் சுனாமியில் சிக்கிய, தென்னை மட்டை போல அடித்துச் செல்லப்படும்"

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் சுனாமியில் சிக்கிய தென்னை மட்டை போல் அடித்துச் செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மக்களின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை ரத்தோட்ட பிரதேசத்தில் வெனிலா பயிர் செய்கையில் ஈடுபடுவோருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு தற்போது மோசமான நிலைமையில் உள்ளது. வளர்ந்து வரும் நாட்டுக்கு ஜனநாயக ரீதியான முழு சமூகத்தின் மக்களும் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ தேவையான பிரதான தூண்களான நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

நாட்டின் தலைவர் என்ற வகையிலும் 19வது திருத்தத்திற்கு அமையவும் நாட்டின் பிரதானியும் அமைச்சரவையின் தலைவரும் ஜனாதிபதி. ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்திற்கு வரவில்லை என்றால், அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த முடியாது. அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே அனைத்து சட்டமூலங்கள் மற்றும் ஏனையவற்றுக்கான அங்கீகாரத்தை நாடாளுமன்றத்தில் பெற முடியும்.

தற்போது புதிய சட்டமூலங்களை கொண்டு வரவோ, திருத்தங்களை செய்யவோ முடியாது போயுள்ளது. இதனால், நாட்டின் பணிகள் ஸ்தம்பிதமடையும். நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரும் பொறுப்புக் கூற வேண்டும் என பிரதமர் தற்போது கூறி வருகிறார். இது சூழ்ச்சி. மத்திய வங்கியின் கொள்ளையும் எங்களுக்கு தொடர்பில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்த போகின்றவர்களின் பெயர், ஊர் விபரங்கள் வழங்கப்பட்டும், அந்த தாக்குதலை தடுக்க முடியவில்லை. இதற்கு எதிர்க்கட்சி பொறுப்புக் கூற வேண்டியதில்லை. வெளிநாட்டவர்களை மகிழ்விக்கும் வகையில் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டமைக்கான பொறுப்பு எமக்கில்லை.

அரசாங்கம் மீது மக்கள் அதிருப்திக் கொண்டுள்ளதன் காரணமாகவே பிரதமர், நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேர் மீது பொறுப்பை சுமத்த முயற்சித்து வருகிறார் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அடுத்தபொதுத்தேர்தல் வந்தால் சுனாமியில் முதலில் அடித்துச்செல்பவர் இந்த கருத்தை வெ ளியிடுபவர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலம் பதில் சொல்லும்.பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.