Header Ads



ஸஹ்ரான் குழுவினரை, எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும்

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள் பொறுப்பதிகாரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் இன்று -18- சாட்சி வழங்கினார்கள். 

இதன்போது காத்தான்குடி மக்கள் தலைக்கவசம் இல்லாமல் துவிச்சக்கர வண்டி செலுத்துதல் மற்றும் ஸஹ்ரான் ஹஷீமின்  அடிப்படைவாத செயல்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை  உட்பட பல கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டது . 

இதன்போது பல கேள்விகளுக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி அமைதியாக இருந்தமையை கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி  காத்தான்குடி பகுதியில் சூபி முஸ்லிம்கள் மற்றும் ஸஹ்ரானுக்கு இடையில்   ஏற்பட்ட கலவரத்தை அடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டதுடன் இதன்போது ஸஹ்ரான் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றதாகவும்  காத்தான்குடி முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை தனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மார்ச் மாதம் 10 திகதி பாரிய கலவரம் சூபி முஸ்லிம்கள் மற்றும் ஸஹ்ரானுக்கு இடையில் இடம் இடம்பெற்றதாகவும், அது தொடர்பில் அன்றைய தினம் மற்றும் அதற்கடுத்த தினம் 9 பேர் கைது செய்யப்பட்டதாகவும்  தெரிவித்த முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஸஹ்ரானுடன் 150க்கும் 200 இற்கும் இடைப்பட்ட நபர்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

ஸஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் உட்பட மற்றுமொரு நபர் இந்த சம்பவத்தை அடுத்து காத்தான்குடி பகுதியில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதன்போது ஸஹ்ரான் கைது செய்யப்படாமை தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வீடியோ ஆதாரத்தின் மூலம் அவரை தேடியதாகவும் அப்பொழுது கலவரத்தில் ஈடுபட்டவர்களை மாத்திரம் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஸஹ்ரான் உட்பட குழுவினர் ஆயுதம் பாவித்த ஒரே ஒரு சந்தர்ப்பம் இது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். 

சூபி முஸ்லிம்கள் அன்று இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறிய பொழுதே நடவடிக்கை எடுத்து இருப்பின் இன்று இவ்வாறான பாரிய ஒரு சம்பவம் இடம்பெற்று இருக்காமல் தடுத்திருக்கலாம் அல்லவா என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிகாரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

அப்போது கோட்பாடுகளுக்கு இடையில் முரண்பாடு இருந்ததாகவும் ஸஹ்ரான் மிகவும் வன்மையாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்த அவர், 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஸஹ்ரானின் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் 

ஸஹ்ரான் 120 வீடுகளை தீ வைத்ததாகவும் பின்னர் அவரை கைது செய்வதற்காக சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் அசாத் சாலி தெரிவித்த கருத்து தொடர்பில் தெரிவுக் குழு உறுப்பினர்கள் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விசாரித்து இருந்தனர். 

இதற்கு பதிலளித்த முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தன்னுடைய மூன்று வருட சேவை காலம் முடிவடைந்த பின்னர் இடமாற்றம் வழங்கப்பட்டதே அன்றி ஸஹ்ரானை கைது செய்ய சென்ற போது அவ்வாறு நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதன்போது அப்துல் ராசிக் தொடர்பில் ஏதேனும் தெரியுமா என சரத் பொன்சேகா கேட்ட பொழுதே முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமைதியாக இருந்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

No comments

Powered by Blogger.