June 01, 2019

Azeez Nizardeen னுடைய வீட்டுக்குப்போன புலனாய்வாளர்கள் - நடந்தது என்ன..?

- Azeez Nizardeen -

கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இன்று எனது வீட்டுக்கு வந்து என் மீது விசாரணை ஒன்றை மேற்கொண்டனர்.

எனக்கும் இஸ்லாமிய போர்வையில் இயங்கும் கொலைகார வெளிநாட்டு கூலிப்படையான ஐஎஸ்ஐஎஸ்க்கும் இடையில் தொடர்பு இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பாக விசாரிக்க வந்ததாகவும் அறிவித்தனா்.
இவர்கள் வரும்போது நான் வீட்டில் இருக்கவில்லை.

ஜனாஸா ஒன்றில் கலந்துகொள்ள வெல்லம்பிட்டியவுக்கு சென்றிருந்தேன். எனது மகன் அழைப்பெடுத்து அறிவித்தார். உடனே வருவதாக வந்தவர்களுக்கு அறிவித்தேன்.
எனது மனைவிடமும் பிள்ளைகளிடமும் சில விடயங்களை கேட்டு அறிய விரும்புவதாக அறிவித்த அவர்கள், அச்சமோ பதற்றமோ படத் தேவையில்லயென்றும் என்னால் வர முடியுமான நேரத்தை அறிவிக்குமாறும் கூறினர்

“பிரச்சினை இல்லை உங்களுக்கு வேண்டிய தகவல்களை அவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் ” என கூறி விட்டு அவசர அவசரமாக ஒரு அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.

இருவர் வீட்டில் முன் ஹோலில் அமர்ந்திருந்தனர்.

சாமானிய மனிதர்களைப் போன்று சிவில் உடையில் தோற்றமளித்தனர். முதலில் அவர்களது அடையாள அட்டையைப் பரிசோதித்துப் பார்த்தேன். கடற்படை அதிகாரிகள் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
“என்ன பிரச்சினை? “ என்று கேட்டேன்.
எங்களது மேல் அதிகாரிகளால் உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி வருமாறு கட்டளையிடப்பட்டிருக்கிறோம் என்றார்கள்.
“என்னைப் பற்றி என்ன தெரிய வேண்டும்?“ நான் வினவினேன்.
“தீவிரவாத வகுப்புகள் இங்கு அதாவது உங்கள் வீட்டில் இடம் பெற்றிருக்கின்றனவா?“ என வினவினர்.
”ஓரிரண்டு தினங்களில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கின்றீர்களா? ” எனவும் வினவினர்.
”அப்படி எந்த வகுப்பும் எனது வீட்டில் இடம்பெறவில்லை யார் இந்த பொய்யான தகவலை உங்களுக்கு வழங்கியது? ” நான் கேட்டேன்.
“நீங்கள் தவறான இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள் ”என நான் கடுமையான தொனியில் கூறினேன்.
“இந்நாட்டில் இஸ்லாத்தின் பெயரில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக கருத்து தொிவித்து மோதல்களை உருவாக்கும் உரைகளை நிகழ்த்தியவர்களை சுதந்திரமாக சுற்றித்திரிய விட்டு விட்டு தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களை நீங்கள் இலக்கு வைப்பதை என்னால் புரியக் கூடியதாக இருக்கிறது.“
“என்னை விசாரிப்பதற்காக உங்களை இந்த இடத்திற்கு அனுப்பியதன் பின்னணியில் ஒரு ஐஎஸ்ஐஎஸ் காரன் நிச்சயம் இருக்க வேண்டும்” என்று எனது எதிர்ப்பை அவர்களுக்கு தெரிவித்தேன்.
எனது வீட்டில் அடுக்கடுக்காய் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்த்து ”ஒரு வாசிகசாலையே வைத்திருக்கின்றீர்கள்...” என சொல்லிக்கொண்டு பேச்சை ஆரம்பித்தார் வந்திருந்த மற்ற உத்தியோகத்தர்.
“ஆம் என்னிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. தேசிய , சர்வதேசிய அரசியல், கவிதை, இலக்கியம் தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு என்று பல மொழிகளில் உள்ள புத்தகங்கள் இருக்கின்றன. இவ்வாறான புத்தகங்கள் பலரை சிக்கலில் மாட்டி இருக்கிறது. குறிப்பாக அரபு புத்தகங்களை வைத்திருந்தவர்கள் அதுவும் குர்ஆன் பிரதிகளை வைத்திருந்ததற்காக பலர் இன்னும் சிறைகளில் இருக்கின்றார்கள்.”
“இஸ்லாமிய மத மற்றும் அரபு புத்தகங்களைக் கண்டவுடன் உங்கள் பாதுகாப்பு தரப்பினர் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு விட்டதைப் போல் ஆனந்தம் அடைகின்றனர்“ என்றேன்.
தொழில் என்ன? வினவினர்.
“பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் ஊடக செயலாளா் மற்றும் தேசிய கடலியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (NARA) பணிப்பாளர் சபை உறுப்பினா்” என்றும் கூறினேன்.
”நான் இந்த தீவிரவாதத்திற்கு எதிரானவன். 2013ம் ஆண்டு முதல் இந்த கொலைகார கும்பலுக்கு எதிராக ஊடகங்களில் உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
எழுதியிருக்கிறேன்...
பேசியிருக்கிறேன்...
“எனக்கு மரண அச்சுறுத்தல் வந்த போது பாதுகாப்புத் தரப்பினரிடமும் குற்றப்புலனாய்வு பிரிவினரிடமும் முறைப்பாடு செய்திருக்கின்றேன்.”
”முறைப்பாடுகள் கிடைத்தபோது ஒழுங்காக விசாரணை செய்து, குற்றங்களை தடுக்காத நீங்கள் இப்போது அப்பாவிகளை இலக்கு வைக்கின்றீர்கள்.
“அதுமட்டுமல்லாமல் நீங்கள் இன்று இனவாத ரீதியில் செயற்படுகின்றீர்கள். அப்பாவிகளை தொடராக சிறைகளில் அடைத்து வருகின்றீர்கள்.
“உங்களின் செயற்பாட்டில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. நீங்கள் இந்த தீவிரவாதத்தை அழிக்காமல் வளர்க்க முயற்சி செய்வதாகவே நான் நினைக்கிறேன்.
“ உங்களை இந்த இடத்திற்கு அனுப்பியவரின் பின்னணியை நான் அறிய வேண்டும். அது எனக்கிருக்கின்ற உரிமை.”
“தீவிரவாதத்திற்கு எதிராக செயற்படும் என்னைப் போன்றவர்களை ஊமையாக்கும் ஓர் “அரசியல்” இங்கு நடைபெறுகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை எதிர்த்து எழுதி வந்த புத்தளத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரி டில்ஷான் மொஹமட் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளீர்கள்.”
“நான் இப்போது ஒரு மரண வீட்டுக்கு சென்று வருகிறேன்.
“இந்த மரணம் கூட உங்களது காவல்துறையின் மோசமான செயற்பாட்டால் உருவானது. ”
“எவ்வித காரணமுமில்லாமல் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒரு இளைஞனை கிரேன்ட்பாஸ் பொலிஸாா் மீண்டும் பொலிஸிற்கு அழைத்து வரும்படி அவரின் தந்தைக்கு கட்டளையிட்டனர்.”
“இந்த தகவலை அறிந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். அந்த மரண வீட்டில், வேதனையில் கவலையில் நான் இருக்கும் போதுதான் நீங்கள் என்னை விசாரிக்க வந்த தகவல் எனக்குக் கிடைத்தது” என்று எனது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தேன்.
அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகள் 
தேவைப்பட்டால் தாம் தொலைபேசியில் கதைப்பதாக கூறி எனது தொலைப்பேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டு விடைபெற்று சென்றனா்.
அடுத்த விசாரணைக்கு யார் வருவார்கள்..?
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.
30.05.2019

3 கருத்துரைகள்:

alllah protect you definitely....sir

May Allah Protect you and all the innocent Muslims.

Post a comment