Header Ads



559 முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் - இப்தார் நிகழ்வில் ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். 

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த புரிந்துணர்வுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும் என்பதோடு, நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

இஸ்லாமிய பக்தர்களுக்காக இன்று (03) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய இப்தார் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இஸ்லாமிய மதத் தலைவர்களும் பெருமளவிலான இஸ்லாமிய பக்தர்களும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர். 

நாட்டு மக்கள் ஒருவரையொருவர் குரோதத்துடனும் சந்தேகத்துடனும் நோக்கும் நிலை காணப்படும் வரையில் நாட்டில் ஐக்கியத்தினை கட்டியெழுப்ப முடியாதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முற்றாக நிராகரிப்பதோடு, சகல இன மக்களும் நியாயமான சமூகத்தில் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.  

இஸ்லாமிய மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தியதுடன், முஸ்லிம்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்விடயம் தொடர்பான அறிக்கை ஒன்றினை தான் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக 559 முஸ்லிம்கள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, உரிய விசாரணைகளின் பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்ற அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். 

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அனைத்து இனங்களினதும் மதங்களினதும் கௌரவத்தினை பாதுகாத்து அனைவருக்கும் நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சியினை பாராட்டிய இஸ்லாமிய மதத் தலைவர்கள், நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசி வழங்கினர். 

சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வெளிநாட்டு தூதுவர்கள், வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.06.03

1 comment:

  1. mmmm, hmmm , did you all drank beef kanchi??? shame on you all

    ReplyDelete

Powered by Blogger.