Header Ads



தேசிய ஷூரா சபை, விடுக்கும் முக்கிய செய்தி

வரலாற்றில் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தை தேசமும் முஸ்லிம் சமூகமும் கடந்து கொண்டிருப்பது பற்றி நாம் நன்கு அறிவோம். முஸ்லிமல்லாதவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய சந்தேகமும் பயமும் நிலவும் அதேவேளை, முஸ்லிம்களுக்கு மத்தியிலும் ஒரு வகையான பீதியும் அச்சமும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ்.கூலிப் படை அமைப்பிற்கும் இஸ்லாத்திற்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவை சர்வதேச, பிராந்திய சக்திகளின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டங்கள் என நாட்டிற்கும் உலகிற்கும் எடுத்துக் கூறிய கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களையும் சகோதர கிறிஸ்தவ சமூகத்தையும் மற்றும் விவகாரத்தை நியாயமாக  அணுகியவர்களையும்  தேசிய ஷூரா சபை நன்றியுடன் பாராட்டுகிறது.

அதேபோன்று இலங்கை வாழ் முஸ்லிம் சமூகமும் சமூகத் தலைமைகளும் அரசுடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் பூரணமாக ஒத்துழைத்து குறுகிய காலத்திற்குள் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்களை கைது செய்வதற்கும் நிலைமைகளை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் ஒத்துழைத்தமை எல்லாத் தரப்புக்களாலும் மெச்சப் படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

என்றாலும், அரசியல் உள்நோக்கங்களுடன் செயற்படுகின்ற சில தரப்புக்கள் நன்கு திட்டமிட்டு மேற்கொண்டுவரும் காழ்ப்புணர்வுப் பரப்புரைகளும் மே மாதம் 13 திகதி முதல் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளும் நாட்டின் அமைதி சமாதானத்திற்கும் ஸ்திரத் தன்மைக்கும் பொருளாதார சுபீட்சத்திற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளமை கவலைக்கிடமான செய்தியாகும்.  

இப்படியான சூழலில் வழமை போன்று  சமாதான சகவாழ்வை கட்டியெழுப்பவும் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு  , நல்லுறவு என்பவற்றை வளர்க்கவும் ஏற்பட்டிருக்கும் இழப்புகளுக்கு  மத்தியிலிருந்து தைரியமாக வெளிவரவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை தேசிய சூரா சபை பின்வரும் வழிகாட்டல்கள் மூலம் தர விரும்புகிறது.

ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைக்கு முன்னால் எவரும் விரக்தியடையலாகாது. முஸ்லிம் சமூகத்திற்கு சோதனைகள் புதியவை அல்ல.நபிமார்கள் மற்றும் நல்லடியார்கள் அனைவரும் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈமானை பரிசோதிக்கவே அல்லாஹ் சோதனைகளைத் தருகிறான். நாம் விரும்பாத சில நிகழ்வுகளுக்குப் பின்னால் அல்லாஹ் நலவுகளை வைத்திக்கலாம். எனவே, அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக் கொண்டு பொறுமைகாப்போம்.துஆச் செய்வோம்! 

எம்மைச் சீண்டி விட்டு எமக்கு அழிவை  உண்டு பண்ண முயலும் சக்திகளது நோக்கங்களை அறிந்து உணர்ச்சி வயப்பட்டு எதிர்வினயாற்றாது பொறுமை சகிப்புத்தன்மை விவேகம் என்பவற்றின் மூலமே அவற்றை எம்மால் முறியடிக்க முடியும். 

நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும்  மதித்து ஜனநாயக வழிமுறைகளில் எமது பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.

ஆன்மீக வறுமை, கல்வித்துறையில் பின்னடைவு, ஐக்கியமின்மை,  பண்பாட்டுத் துறை வீழ்ச்சி என்பன முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கான பிரதானமான காரணங்களாகும். எனவே, இவற்றை நிவர்த்தி செய்ய நாம் தேவையான நீண்டகாலத் திட்டங்களை வகுத்துச் செயல்படுவது தான் பிரச்சினைகளுக்கான நிரந்தரமான தீர்வுகளுக்கு வழிவகுக்குமே தவிர உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு எடுக்கப்படும் தீர்வுகள் அல்ல.

வரலாற்றில் மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் நாம் அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரையில் சமூகத்தின் எல்லாத் தரப்பினர்களும், எல்லாத் துறை சார்ந்தவர்களும் வேற்றுமைகளுக்கு மத்தியிலும் ஒற்றுமை பேணி ஏனைய சமூகங்களில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து இன்று இந்த தேசமும் எமது சமூகமும் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முகம் கொடுக்க கூட்டுப் பொறுப்புடன் முன்வர வேண்டும்.

தீவிரவாத தக்குதல்களை தொடர்ந்து இஸ்லாம் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலை முஸ்லிம் அல்லாத பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.இஸ்லாத்தின் நடு நிலையான - உன்னதமான தூதை ஆதாரங்களோடும் இனிமையான விதத்திலும் முன்வைக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.ஊடகத் துறையில் எமது பின்னடைவை உணர்ந்து நாம் காத்திரமான முயற்சிகளில் இறங்கியாக வேண்டும்.

இஸ்லாத்துக்கெதிராக சர்வதேச ரீதியாக இருந்து வரும் மிகப்பெரிய சவால் இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் தீவிரவாதக் குழுக்களாகும். இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வுகொண்ட சக்திகள் அந்தக் குழுக்களைப் போஷித்து வருகின்றன. இந்த உண்மையை விளங்கி எமது இளைஞர்கள் அந்த தீவிரவாத வலைகளில் சிக்கி விடாதிருக்க பெற்றோரும் ஆசான்களும் சமூகத்தின் முக்கியஸ்தர்களும் தம்மாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

எமது சமூக உறவுகள் மற்றும் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் என்பவற்றை நாம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி அவற்றை முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையிலும் வெளிப்படைத் தன்மை கொண்டவையாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தில் நிலவும் கட்சி, இயக்க மற்றும் கொள்கை முரண்பாடுகளால் மாற்றுக் கருத்துடையவர்கள் என்பதற்காக மற்றைய தரப்பினரை பழிவாங்கும் நோக்கோடு சிறுசிறு முரண்பாடுகளுக்காக  அவர்களைப் பற்றி அதிகாரிகளிடம் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதால் அவ்வதிகாரிகள் எம்மைப் பற்றிய நல்லெண்ணத்தை இழப்பார்கள் .ஏனைய சமூகங்களது பார்வையில் நாம் மதிப்பற்றுப் போய்விடுவோம். எமது சமூகம் சின்னாபின்னப்பட்டு மேலும் பலவீனமடையும். கருத்து முரண்பாடுகளை அறிவுபூர்வமாக மட்டுமே பேசித் தீர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

தற்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காழ்ப்புணர்வுப் பரப்புரைகள், அரசியல் வாதிகளின் ஏட்டிக்குப் போட்டியான அறிக்கைகள், ஒரு சில ஊடகங்களின் பொறுப்பற்ற பரப்புரைகள் என்பன உளவியல் ரீதியாக எம்மைப் பாதித்தபோதும் நாம் நிலைகுலைந்து சளைப்படைந்து விடாது மாமூல் வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

எமது பாடசாலைகள் போன்று அரபுக் கல்லூரிகளும் இஸ்லாமிய அமைப்புக்களும் புனித ரமழான் விடுமுறைக்குப் பின்னால் வழமைபோன்று தமது பணிகளை முன்னெடுப்பதில் எவ்வித தடையுமில்லை, அவ்வாறு ஏதாவது அறிவுறுத்தல்கள் வரும் பட்சத்தில் முஸ்லிம் சமய கலாசார அமைச்சு மற்றும் சிவில் சன்மார்கத் தலைமைகள் முஸ்லிம் சமூகத்தை அவ்வப்பொழுது அறிவுறுத்துவார்கள்.  

பெருநாளை கொண்டாடும் போது நாம் ஆடம்பரத்தை, ஆரவாரங்களை தவிர்க்க வேண்டும். ஈஸ்டர் தின சம்பவங்களால் முழு நாட்டிலும் ஒரு சோகம் நிலவுகிறது .வடமேல் மாகாண பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் பலவாறான நஷ்டங்களை முஸ்லிம்கள் சந்தித்திருக்கிறார்கள். பலர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள் என்பற்றையெல்லாம் கவனத்தில் எடுத்த நிலையில் தான் எமது பெருநாள் கொண்டாட்டம் அமைதல் வேண்டும். 

எமது நோன்புப் பெருநாள் செலவினங்களில் ஒரு  பகுதியை  பாதிக்கப்பட்ட மக்களுக்கும்  வழங்கி அவர்களது இன்னல்களை அகற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் அருளைப் பெறுமுடியும்.

ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தற்காலிகமானது. இன்ஷாஅல்லாஹ் அது படிப்படியாக விலகும். நம்பிக்கையை நாம் இழந்து விடலாகாது. உண்மை எதுவோ அது வெல்லும். போலிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் அல்லாஹ் நிச்சயமாக வெளிப்படுத்துவான். நாம் எமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றினால், நடந்து முடிந்த சம்பவங்களில் இருந்து படிப்பினை பெற்று எம்மை மாற்றிக் கொண்டால் அல்லாஹ் நிச்சயமாக மாற்றத்தை கொண்டு வருவான்.

வல்ல அல்லாஹ் எமது தாய்நாடான இலங்கையில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு சமாதானத்தை மலரச் செய்வானாக!

இவ்வண்ணம் 
ஊடகப்பிரிவு  -  தேசிய ஷூர சபை
30.5.2019

1 comment:

  1. இலங்கையில் முஸ்லிம்கள் அடையாளங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு அன்பானவர்களாக நல்லிணக்கமுள்ளவர்களாக வாழ்ந்திருப்பார்களாயின் தஃவா செய்யாமலேயே பாரிய மாற்றத்தைக் கண்டிருப்பர்.

    ReplyDelete

Powered by Blogger.