Header Ads



"ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் தேடுவது என்பது, திருமணத்திற்கு பெண் தேடுவது போல்தான்"

எனக்கு தெரிந்தவரையில் ஞானசார தேரர் அரசியலுக்கு பிரவேசிக்கமாட்டார், ஏன் என்றால் அவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார் என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குனரத்ன தெரிவித்துள்ளார்.

நாவலபிட்டி - வெவேகம பகுதியில் மக்களுக்கு குடிநீர் திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நூற்றுக்கு 99 சதவீதம் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருக்கிறது.

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் தாம் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு தொடர்பான விடயத்தினை உறுதிபடுத்தியிருக்கின்றோம். ஆனால் சிலர் அரசியலுக்காக பொய்யான வதந்திகளை பரப்புகின்றார்கள்.

இந்த நாட்டின் ஜனாதிபதி இலங்கை நாட்டில் இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் சான்றிதழ்களும் வழங்கியிருக்கிறார்.

எனவே நாட்டின் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வழங்குகின்ற தகவல்களை தவிர வேறு எந்த ஒரு சமூகவலைத்தளங்கள் ஊடாக வருகின்ற தகவல் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மக்கள் தெளிவாக இருந்தால் இந்த நாட்டில் எந்த ஒரு பிரச்சினையும் இடம்பெறாது.

இன்று நாட்டில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். இன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த நம்பிக்கையில்லா பிரேரனை வெற்றி பெறாது. நம்பிக்கையில்லா பிரேரனைக்கு யாரும் வாக்களிக்க போவதில்லை.

நாட்டில் அடுத்து வருகின்ற தேர்தல் ஜனாதிபதி தேர்தல் தான். எக்காரணத்தை கொண்டும் மத்திய மாகாணசபை தேர்தல் இடம்பெறாது எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது யார் ஜனாதிபதி வேட்பாளர் என தற்பொழுது கூறமுடியாது.

ஆகவே வேட்பாளர் தேடுவது என்பது திருமணத்திற்கு பெண் தேடுவது போல் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.