Header Ads



தமது சமூகத்துக்குள் ஒழிந்திருக்கும் பயங்கரவாதத்தை, முஸ்லிம் சமூகம் ஒழிக்க வேண்டும் - அநுரகுமார

சமூகத்திலிருந்து உருவாகும் மத அடிப்படைவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கான பொறுப்பு முஸ்லிம்கள் உள்ளிட்ட சகல சமூகத்தவர்களுக்கும் உள்ளது. அரசியல் தலைமைகள் மாத்திரமன்றி சமூகமும் முன்வந்து மத அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவையாகும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையிலான அதிகாரப் போட்டியே நாட்டில் இவ்வாறான சூழ்நிலை ஏற்படுவதற்கான பின்புலத்தை அமைத்துக் கொடுத்தது எனக் குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், இந்த நிலைமையிலிருந்து நாடு மீள்வதற்கு பலமான அரசியல் தலையீடு மற்றும் பலமான பாதுகாப்புப் பொறிமுறையொன்று கட்டியமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு எந்தளவு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வது என்ற குறிக்கோளுடனேயே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுகிறார். இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்றேன் என்ற அவருடய அறிவிப்பு அமைந்திருப்பதாகவும் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். செவ்வியின் முழுவிபரம் வருமாறு,

கேள்வி: ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கோடீஸ்வர வியாபாரியான இப்ராஹிம் என்பவர் கடந்த பொதுத் தேர்தலில் ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தார். இதனால் உங்கள் கட்சி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுபற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : அரசியலுடன் நேடியாகத் தொடர்படாதவர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கிலேயே தேசியப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதற்கமையவே எமது தேசியப் பட்டியலை நாம் தயாரிப்போம். எமது தேசியப் பட்டியலில் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் மாயாதுன்ன, மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கபில பெரேரா போன்றவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இவர்கள் எவரும் எமது செயற்பாட்டாளர்களோ எமக்கு விருப்பமானவர்களோ அல்ல. அதைப்போலவே பிரபல வியாபாரியான இப்ராஹிமும் உள்ளடக்கப்பட்டார். பல்வேறு விருதுகளைப் பெற்ற முன்னணி வியாபாரி என்ற ரீதியிலும், முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையிலும் அவருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.

இவ்வாறான நிலையில் அண்மையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் இவருடைய பிள்ளைகள் தற்கொலை குண்டுதாரிகளாக செயற்பட்டார்கள் என செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவங்களுடன் அவர் கொண்டுள்ள தொடர்புகளின் அளவுக்கு அமைய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இப்ராஹிமைத் தொடர்புபடுத்தி ஜே.வி.பியையும் குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்படுத்த எவராவது முயற்சித்தால் அது முற்றிலும் தவறாகும்.

குண்டுத் தாக்குதல்களின் பின்னரான நிகழ்வுகளை அடிப்படையாகப் பார்க்கும்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இருவரும், பொதுஜன பெரமுனை கட்சியைச் சேர்ந்த நீர்கொழும்பு பிரதி முதல்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். போலியாக கடவுச்சீட்டுத் தயாரிப்பவர்களிடம் விமல் வீரவன்சவின் புகைப்படமும் மீட்கப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறமுடியுமா? அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பலதரப்பினருடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருக்க வேண்டியிருக்கும். அரசியல் ரீதியாக மேற்கொள்கின்ற தொடர்புகளுக்கு அப்பால் எந்தத் தரப்பினருடனும் எமக்கு வேறு தொடர்புகள் இல்லை.

கேள்வி: தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீள்வதற்கு எவ்வாறான யோசனைகளை நீங்கள் முன்வைக்கின்றீர்கள்?

பதில்: பல விடயங்களைக் கூறலாம். விசேடமாக எமது நாட்டில் எந்த வகையான தீவிரவாதத்துக்கும் இடமளிக்க முடியாது. எனவே இந்த அடிப்படை வாதத்தை அல்லது தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அரசாங்கமும் பொது மக்களும் உறுதிபூணவேண்டும். இதில் இஸ்லாமிய அடிப்படைவாதமும் உள்ளடங்குகிறது. இதுவரை ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் அடிப்படைவாதிகளைப் பலப்படுத்துவதற்கும், அவ்வாறான அமைப்புக்கள் பலமாக இருப்பதற்கு இடமளிக்கும் வகையிலும் செயற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த அடிப்படைவாதத்தை முழுமையாகத் தோற்கடிக்க அரசாங்கம் நேரடியாகத் தலையிடவேண்டும்.

மறுபக்கத்தில் பாதுகாப்புத் தொடர்பில் காணப்படும் அரசியல் பெறிமுறை மற்றும் இராணுவப் பொறிமுறை பலவீனமாக உள்ளது என்பதையே இந்த தொடர் குண்டுத் தாக்குதல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. எனவே இது உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றுமொரு விடயம், சம்பவங்களுக்கு முன்னரும், அதன் பின்னரும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் செயற்பாடுகள் அதிகாரத்துக்கான போட்டியாகவே காணப்படுகிறது. தமக்கிடையிலான அதிகாரப் பேட்டியை தற்காலிகமாகவாவது கைவிட்டு இப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது அரசாங்கத்தின் கட்டாயமாகும். ஏந்தவொரு அரசியல் கட்சியினதும் அரசியலில் அடிப்படைவாதம் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டு விடக்கூடாது. ஜே.வி.பி தனது அரசியல் செயற்பாட்டில் இனவாதம், அடிப்படைவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றை ஒரு அங்கமாக இணைத்துக்கொள்ள இடமளிக்கவில்லை. இந்தச் சம்பவங்களின் பின்னரும் சிலர் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு முயற்சிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அரசியல் கட்சிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமலிருப்பது அவர்களின் கடமையாகும். அரசியலை முன்னெடுப்பதற்கு பல்வேறு கோஷங்கள் இருக்கின்றன. அதற்காக இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் என்பவற்றை அரசியலுக்கான கோஷங்களாகக் கொள்ளவேண்டிய தேவை அரசியல் கட்சிகளுக்கு இல்லை. விசேடபொதுமக்களுக்கும் கடமை உள்ளது.

மதவாதம், இனவாதம் என்பன சமூக்திலிருந்தே உருவாவதுடன், சமூகத்துக்கிடையிலேயே பரவுகிறது. எனவே இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை பொதுமக்களுக்கும் உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாகியிருக்கும் இந்த மதவாதம் அல்லது அடிப்படை வாதத்தை தமக்குள்ளேயே இல்லாதொழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும். தமது சமூகத்துக்குள் ஒழிந்திருக்கும் இந்தப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முஸ்லிம் சமூகத்தினருக்கு பொறுப்பு இருப்பதைப் போன்று ஏனைய மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டிய பொறுப்பு உள்ளது.

கேள்வி: குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடத் தயார் என்றும், பயங்கரவாதத்தைத் தோற்டிக்கத் தன்னால் மாத்திரமே முடியும் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து

பதில் : அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதையே அவருடைய கருத்து தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில்  என்னால் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியமா? மற்வொருவரால் கட்டுப்படுத்த முடியுமா? நான் தேர்தலில் போட்டியிடுகின்றேனா இல்லையா என்பதல்ல முக்கியம். பெரும் எண்ணிக்கையானவர்கள் உயிரிழந்திருப்பதுடன், ஸ்திரமற்ற நிலைமையொன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகள் செய்ய வேண்டியது என்னவெனில் இச்சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதேயாகும். இதனைவிடுத்து இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆசனத்தில் அமரும் தமது கனவை நனவாக்கும் முயற்சியாகவே இதனைப் பார்க்க முடிகிறது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு எந்தளவு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வதே அவருடைய ஒரேயொரு குறிக்கோள் என்பது அண்மைக் காலமாக கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கையிலிருந்து தெரிகிறது.

கேள்வி: இலங்கை மீதான குண்டுத் தாக்குதல்களின் பின்னால் அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளின் பின்புலம் இருப்பதாக நீங்கள் குற்றச்சாட்டியிருந்தீர்கள். எதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றீர்கள்?

பதில்: நிச்சயமாக உலகில் மீண்டும் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. மூலப்பொருட்கள், மனிதவளம், இலாபம் மற்றும் சந்தையை கைப்பற்றுவதற்காக போட்டி நடைபெறுகிறது. இதில் ஒருபகுதிக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எமது நாட்டைப் போன்ற நாடுகள் எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கோ அல்லது வேறு நபர்களுக்கே ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லை. அப்படியாயின் இவ்வாறான அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் கிடைத்தது எவ்வாறு?

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் அதிகாரத்தைத் தோற்கடிப்பதற்காக முஜாகிதீன் அமைப்புக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது. சிரியாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உருவாக்கி அதற்கு ஆயுதங்களை வழங்கியது.

இதற்காகத் தமக்குத் தேவையான யுத்தத்தை உருவாக்கியது. பாதுகாப்பு, பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான முரண்பாடுகளை உருவாக்குவதே பின்னணியில் உள்ளது. இதுதவிர முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இருக்கவில்லை.

ஏன் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையைத் தேர்வுசெய்தார்கள்? ஏன் நட்சத்திர ஹோட்டல்களைத் தெரிவுசெய்தனர். உலகளாவிய ரீதியிலான போட்டித் தன்மையை இது எடுத்துக் காட்டுகிறது.

நேர்காணல்: மகேஸ்வரன் பிரசாத் 
படங்கள்: சாலிய ரூபசிங்ஹ

1 comment:

  1. Please explain us in open platform, how can Muslim destroy them. Come out with your suggestion.

    ReplyDelete

Powered by Blogger.