Header Ads



சஹ்ரான் குழுவினரிடையே கருத்து மோதல், பல தாக்குதல்கள் கைவிடப்பட்டன - விசாரணைகளில் அம்பலம்


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹ்ரான் காஸிமின் சகாக்களுக்கிடையே இடம்பெற்ற சில கருத்து மோதல்கள் காரணமாக, அன்றை தினம் நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இந்தக் கருத்து மோதலானது, தாக்குதல் நடத்தப்பட்ட நாளுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், தாக்குதலை நடத்துவதற்கான களத்தில் இறங்காதிருந்த சஹ்ரானும், களத்தில் இறங்கித் தாக்குதலை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத் தரப்பு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து மோதலின் பின்னர், சஹ்ரானுக்கு எதிராகக் குரலெழுப்பிய சிலர், தங்களுக்கான வேறு தலைவரொன்றை நியமித்துக்கொண்டு, வேறொரு இஸ்லாமிய பள்ளிவாசலொன்றுக்குச் சென்றதாகவும், இதனாலேயே, தாக்குதல்கள் பல நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை பிரதேசத்திலுள்ள பாதணி விற்பனை நிலையத்திலிருந்து கைதுசெய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும், சஹரானுக்கு எதிரான கருத்து மோதலில் ஈடுபட்டவர்கள் என்றும் இந்தக் கருத்து மோதலுக்கு முன்னதாக, நாடு முழுவதிலும், பல இடங்களில் தாக்குதல்களை நடத்துவதற்கே தீர்மானிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில், கருத்து மோதலில் ஈடுபட்ட குழு பங்குபெறாததாலேயே, பல தாக்குதல்கள் தவிக்கப்பட்டதாகவும் இல்லையேல், தற்போது இடம்பெற்ற உயிர்ச் சேதங்களை விட 4, 5 மடங்கு உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.