Header Ads



அப்பாவி முஸ்லிம்களை ஏனையவர்கள் பயங்கரவாதிகளாக, நோக்கும் நிலை அதிகரித்து வருகிறது - தம்ம திஸாநாயக்க


கடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாதத்  தாக்குதல்களைத் தொடர்ந்து செய்தி அறிக்கைப் படுத்துவது தொடர்பாக சில ஊடகங்கள் பின்பற்றி வரும்  பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் பல பாதகமாமான விளைவுகள் தோற்றம் பெற்றுள்ளன.

இதனால் நாட்டில் இனங்களுக்கு மத்தியில் காணப்பட்ட ஒற்றுமையும்   நல்லிணக்கமும் குறைவடைந்து வருகிறது.

பயங்கரவாதத்துடன் எவ்வகையிலும் தொடர்பற்ற அப்பாவி முஸ்லீங்களையும் ஏனைய இன மக்கள் பயங்கரவாதிகளாகவே நோக்கும் மிக மோசமான நிலையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

ஊடகங்கள் தமது சொந்த நலன்களையும், வியாபார இலக்குகளையும் கருத்திற்கொண்டு பொறுப்பற்ற முறையில்  செய்திகளை வெளியிட்டு வருகின்றன. 

இம்மோசமான செயற்பாடுகள் அனைத்தையும்  நான் மிக வன்மையாக கண்டிக்கின்றேன் என சபரகமுவ மாகாண ஆளுநர் கலாநிதி தம்ம திஸாநாயக்க இன்று(10) இரத்தினபுரியில் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளின் போது இரத்தினபுரி மாவட்ட  முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக  இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் முக்கியஸ்தர்கள் சபரகமுவ ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஆளுநர் தம்ம திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார் .

தொடர்ந்து ஆளுநர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் 

கடந்த 21 ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட இலங்கை மக்களின் ஆரோக்கியமான உள்ளங்கள் 21 இற்கு பின்னர் இல்லை.

முஸ்லிம் அல்லாத சமூகத்தினர்கள் முஸ்லிம் மக்களை வித்தியாசமான கண்ணோட்டத்திலே நோக்குகின்றனர்.முஸ்லீம்களும் முஸ்லிம் அல்லாதவர்களை அவ்வாறுதான் நோக்க ஆரம்பித்துள்னர்.

நாட்டின்  ஐக்கியத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டிய   ஊடகங்கள் கடந்த பயங்கரவாத தாக்குதல் நிகழ்வுகளைத் தொடர்ந்து  தேவையற்ற சந்தேகங்களை இனங்களுக்கு மத்தியில் உருவாக்க முயற்சிக்கின்றது.

அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து செயற்டுவதன் மூலம் இந்த மோசமான நிலைமையை மாற்றியமைக்கலாம் எனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜெம்மிய்யத்துல் உலமா இரத்தினபுரி மாவட்டக் கிளையின் வேண்டுகோளுக்கு இணங்க ஒழுங்கு  செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில்  கலந்து கொண்ட முஸ்ஸிம் சமூக பிரதிநிதிகள் 

பாதுகாப்புத் தரப்பினர்கள்  முஸ்லிம் சமய நிறுவனங்கள்,வீடுகளில் மேற்கொள்ளும்  திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது  அவதானம் செலுத்த வேண்டிய முக்கிய விடயங்கள் மற்றும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்குச் செல்லும் முஸ்லிம் மாணவிகள்,ஆசிரியர்கள் எதிர்நோக்கி வரும் கலாச்சாரப் பிரச்சினைகள் உட்பட  சில தவறான ஊடகச் செய்திகளினால் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கி வரும் நெருக்கடியான நிலைமைகள் தொடர்பாகவும் ஆளுநரிடம் விரிவாக சுட்டிக்காட்டினர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் மேற்படி பிரச்சினைகள் அனைத்தையும் எழுத்து மூலமாக முன்வைக்குமாறு வேண்டிக் கொண்டதுடன் கூடிய விரைவில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து நாட்டின் ஐக்கியம் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் ஒரு விஷேட ஊடக மகாநாடு ஒன்றை இரத்தினபுரியில் நடத்துவதற்கு தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

இதன்போது இரத்தினபுரி மாவட்ட ஜெம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷேய்ஹ் றிபா ஹசன் அகில இலங்கை ஜெம்மிய்யத்துல் உலமா சபையினால் வெளியிடப்பட்ட சில இஸ்லாமிய நூல்களையும் ஆளுநரிடம் கையளித்தார்.

மேற்படி சந்திப்பில் இரத்தினபுரி மாவட்ட ஆலிம்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள்,அரசியல் பிரமுகர்கள் உட்பட மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.