May 18, 2019

முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையேற்பட்டுள்ளது, றிசாத்தை மிரட்டி அடிபணியச் செய்ய முயற்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலையில் பயங்கரவாத்தினை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றதாக இணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் உள்ள ஜெகன் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது.

ஊரக எழுச்சி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஐந்து இலட்சம் ரூபா மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் ஒதுக்கீடுசெய்யப்பட்டு இந்த பார்வையாளர் அரங்கிற்கான நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜெகன் விளையாட்டு கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த கால ஆட்சியாளர்கள் எங்களுக்கு தந்த வடுக்களை எமது சமூகம் சுமந்து நிற்கின்றது. கடந்தகால ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக பல கோணங்களில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்து வருவதாகவும் அந்த முயற்சிகளில் சிறுபான்மை சமூகம் பலிக்கடாவாக கூடாது.

தற்போதைய ஆட்சிக்காலத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது இந்த அபிவிருத்திகள் தடைப்பட்டு எதுவும் கிடைக்காத நிலை கூட உருவாகலாம்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் பொதுஜனபெரமுன அணியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு அதற்காக கையெழுத்துகள் பெறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அதுபற்றி அக்கட்சியின் தலைவரிடம் வினவியபோது தான் அதில் கையொப்பம் இடவில்லை என்று அவர் கூறினார். அவருடைய கட்சியை சேர்ந்தவர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு கட்சியின் தலைவர் கையொப்பமிடவில்லை.

தோல்வியடையப்போகும் ஒரு தீர்மானத்திற்கு நான் ஏன் கையொப்பமிட வேண்டும் என அவர் கேட்டிருக்கின்றார். இந்த விடயத்தில் ஒரு அரசியல் சித்துவிளையாட்டு இருப்பதுபோல் தெரிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற ரிசாட் பதியுதீனை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் மிரட்டி அடிபணியச் செய்வதன் மூலம் அவரை தங்கள் பக்கமாக ஈர்த்து ஆட்சியமைப்பதற்கான ஒரு உபாயமாக இதை எண்ணத்தோன்றுகின்றது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து ஒரு தீர்மானத்தினை எடுக்கும். இது தொடர்பில் கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு அமைவாக நாங்கள் செயற்படுவோம்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறாது என பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஸவே சொல்வி விட்டார்.

அந்த கட்சியை சேர்ந்தவர்கள்தான் இந்த நம்பிக்கையில்லா தர்மானத்தினை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் வழங்கியுள்ளார்கள் என்றால் இது ஆட்சியை கவிழ்த்து தமது ஆட்சியை கொண்டுவருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என நாங்கள் கருதுகின்றோம்.

நாடு முழுவதும் ஒரு பயங்கரமான நிலையுருவாக்கப்பட்டுள்ளது. எங்கு சென்றாலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எந்தவொரு சமூகத்திலும் அப்பாவிகளும் உள்ளனர், பயங்கரவாத போக்குள்ளவர்களும் உள்ளனர். அந்தவகையில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் இருந்த ஒரு சிறு குழுவினர் இன்று பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் சோதனைகள் நடாத்தப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பலர் கைதுசெய்யப்பட்டு விசாரனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படும்போதுதான் இந்த பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை விடுத்து நிரபராதிகளை கைதுசெய்வதன் மூலமாக குளிர்காய நினைப்பவர்களுக்கு வழிகளை ஏற்படுத்திக்கொடுக்க கூடாது.

இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களாக உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள். இந்த இரண்டு இனங்களும் எதிரிகளாக தம்மைத்தாமே மோதிக்கொண்டிருக்கும் போது பிரித்தாளும் தந்திரங்களை பயன்படுத்திக்கொண்டு பேரினவாத போக்குடையவர்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தாலும் எந்த இனத்தினை சேர்ந்தாலும் அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களை சந்தேக கண்கொண்டு பார்க்கின்ற நிலமையொன்று கடந்த 21ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தினை உணர்ச்சிபூர்வமாக பார்ப்பவர்கள்தான் அதிகளவில் உள்ளனர். அறிவுபூர்வமாக பார்ப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாகவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 கருத்துரைகள்:

ஜயா,உங்களைப் போல நடு நிலையான,சிந்திக்கும் ஆற்றலுடைய தமிழ் அரசியல்வாதிகலுக்கு எப்போதும் நாம் ஆதரவும்,ஒத்துழைப்பும் வழங்குவோம்.நீங்கள் கூறியது போல் கடந்த 21 திகதிக்கு பின்னர் அதிகமான தமிழ் மக்கள் எங்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதுக்கு காரணமே ஒரு சில இனவாத கேடு கெட்ட தமிழ் ஊடகங்களும்,சில வங்குரோத்து அரசியல் வாதிகளும்.ஆனால் 30 ஆண்டு கால யுத்ததின் போது நாங்கள் எந்த தமிழரையும் பார்த்து நீ புலியா? எமது ஊருக்குள் வராதே அல்லது எந்த தமிழ் ஆசிரியர்களும் எமது ஊருக்குள் வரக்கூடாது? சலூன்,லோன்ரி எவனுமே வரக்கூடாது என சொல்லவில்லை.எத்தனையோ தமிழ் மாணவர்கள் எங்களுடன் ஒருவராக எமது பாடசாலைகளில் மதிக்கப்பட்டனர்.ஆனால் திருக்கோணமலை,புவக்பிட்டி யில் என்ன நடந்தது?யார் முதலில் இனவாதத்தை ஆரம்பித்தது? அப்படியென்ரால் வட பகுதி Muslim கள் துரத்தியடிப்பு,காத்தான்குடி பள்ளி துப்பாக்கி சூடு,ஏராவூர் படுகொலைகள் இன்னும் எத்தனயோ துன்புருத்தல்கலை புலிகள் செய்தும் நாம் தமிழரை அண்ணன் தம்பியாக நோக்கினோம்.எமக்கு தெரியும் எல்லா தமிழரும் புலிப் பயங்கரவாதி அல்ல.ஆனால் இப்போது சில தமிழ் ஊடகங்கள்,சில தமிழ் அரசியல் வாதிகள் கக்குகின்ர இனவாதம் மிகவும் மோசமான,அயோக்கியத்தனமானவை.

Post a comment