Header Ads



ஒவ்வொரு முஸ்லிமிற்கும்....!

தாம் படைக்கப்பட்ட நோக்கையும், தன் வாழ்வின் இலக்கையும் ம‌றந்து அற்ப உலக அடைவிற்காய் தன் வாழ் நாட்களை அழித்துக் கொண்டிருக்கும் என் முஸ்லிம் சமுதாயமே.....

உன்னை இன்று ஆட்டிப்படைக்கும் நோய்கள், குடும்பப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, சமூக சீர்கேடுகள் தொடக்கம் இந்த உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் தீவிரவாதம் வரை அனைத்திற்குமே பிறரை நோக்கி விரலை நீட்டும் நீ, உன் கைகளின் சுத்தத்தை பற்றி ஒரு கணம் சிந்தித்ததுண்டா???

இவைகளிலிருந்து தன்னை காக்கும் முகமாக எச்சம் சொச்சமிருக்கும் மார்கத்தையும் விட்டுக்கொடுக்கும் உன் அறியாமையை என்னவென்பது??  உன்னைப் படைத்த இறைவன் கூறுகிறான்" இவர்கள் அல்ல. அல்லாஹ் தான் உங்கள் பாதுகாவலன். இன்னும் அவனே உதவி செய்வோரில் மிகச்சிறந்தவன்.

இன்னும் "விசுவாசிகளே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால், உங்களை மிகைப்பவர் எவருமில்லை; உங்களை அவன்விட்டு விட்டாலோ, அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவி செய்பவர் யார் ??" என்பதாக‌.  அனைத்து நிலைகளிலும் எம்மை பாதுகாப்பது பொறுமையும், இறையச்சமும் தான் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் பெயரும், உடையும் சில வணக்க வழிபாடுகளுமல்ல இஸ்லாம்!!!

இறைவன் திருமறையில் கூறுகிறான் "நீங்கள் வேதத்தில் சிலவற்றை விசுவாசித்து சிலவற்றை நிராகரிக்கின்றீர்களா?? இதைச் செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறில்லை, இன்னும் மறுமையில் மிகக் கடுமையான வேதனையின் பக்கம் திருப்பப்படுவீர்கள் அன்றியும் நீங்கள் செய்பவைகள் பற்றி அல்லாஹ் பாராமுகமானவனுமல்ல" என்பதாக....

நாம் இந்த உலகில் வீணிற்காய் படைக்கப்படவில்லை. இறைவன் தன் "பிரதி நிதி"என்ற ஒரு பொறுப்பைக் கொடுத்து எம்மை இந்த உலகிற்கு அனுப்பியுள்ளான்

ஒரு மனிதன் தன் வாழ்வை எவ்வழியில் அமைத்து இப்பொறுப்பை சரிவர நிறை வேற்றவேண்டும் என்ற முழு வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம். ஒரு மனிதனின் பிறப்பு, கல்வி, இளமை, ஆரோக்கியம், உணவு, உடை, பொருளாதாரம், திருமணம், குழந்தை வளர்ப்பு என அனைத்து செயற்பாடுகளும், சிந்தனைகளும், பண்பாடுகளும் எவ்வாறு அமைய வேண்டும் என ஹலாலான (நன்மையான) விடயங்களைக் கொண்டு வகுக்கப்பட்ட சட்டம்தான் குர்ஆனும் அதன் செயல் வடிவான அண்ணல் நபியின் வாழ்வியலும். இதனை தன் வாழ்வியலாகக் கொண்டு; தனக்கும் பிறருக்கும் நன்மை செய்வது கொண்டு முன்மாதிரியாய் திகழ்ந்து; இஸ்லாத்தை  உண்மைப் படுத்தி; இறைவன் தனக்களித்த‌ பொறுப்பை சரிவர நிறைவேற்றுபவனே உண்மையான "முஸ்லிம்”. "இதுதான் நேரான வழி. இதன் முடிவு இம்மையில் வெற்றியும் மறுமையில் ஒப்பற்ற சுவனமுமாகும்!

இதற்கு மாற்றமான வழிதான் இறைவனின் கட்டளைகளை ஏற்க மறுக்கும் கூட்டத்திற்கு ஷைத்தானால் வடிவமைக்கப்பட்ட‌, ஈருலகிலும் அழிவைப் பெற்றுத்தரக் கூடியவை என தடுக்கப்பட்ட ஹறாத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட தவறான வழி. இதை ஷைத்தான் அவர்களுக்கு அலங்காரமாகக் காண்பிப்பான். அற்ப உலக இன்பங்களை வாழ்வின் இலட்சியங்களாக மாற்றி சுவனத்தை மறக்கடிக்கச் செய்து விடுவான். இதில் பயணிப்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தனக்கும் பிறருக்கும் பாதகம் இழைத்துக்கொண்டே இருப்பர். இதன் முடிவு இவ்வுலகில் இழிவும் மறுமையில் கொடிய வேதனையும் ஆகும்.

இவ்விரண்டில் நாம் எதில் பயணிக்கிறோம் என சிந்திக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

முஸ்லிம்கள் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளக் கூடிய எமது பள்ளிகள், குடும்பம், கல்வி, பொருளாதாரம், உணவு, மருத்துவம், திருமணம், வீடு என அனைத்துமே முற்றிலும் இறைவனுக்கு மற்றமாகவே உள்ளது. எதிலுமே அல்லாஹ்வின் முறையான சட்டங்கள் பேணப்படுவதே இல்லை. அனைத்திலும் பெருமையும், பொறாமையும் மேலெண்ணமும் வறட்டுக் கெளரவமும் பணத்தாசையும் ஆடம்பரமும் வீண் விரயமும் தலைவிரித்தாடுகிறது.

இறைவன் எம்மை எந்த நேர்வழியில் பயணித்து அழகிய சொல்லாலும், செயலாலும் முன் மாதிரி மிக்க சமூகமா வாழ்ந்து பிற மனிதனுக்கு நேர்வழி காட்டும் ''முஸ்லிம்” என்ற பொறுப்பை எமுக்குத் தந்தானோ, அதற்கு முற்றிலும் மாற்றம் செய்து கொண்டு இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி மனிதர்களை விரண்டோடச் செய்து கொண்டிருக்கின்றோம்!

''யார் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு தன் எதிர்தரப்பிற்கு நிகராக பாவம் செய்வாரோ, இறைவன் வெற்றியை எதிர்தரப்பிற்குத்தான் கொடுப்பான்'' என்பதாக உமர்(ரலி) அவர்கள் கூறூவார்கள். ஏனெனில் ''தனக்கு மாறு செய்யக் கூடிய கூட்டத்திடம் அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன். இவர்களை அழித்து பகரமாக தன்னை நேசிக்கக் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவேன்''  என அல்லாஹ் கூறுகிறான்!

அப்படியெனில், எம் எதிரிகளைக் கொண்டு இறைவனினாலேயே அழிக்கப் படக்கூடிய ஒரு சமூகமாக அழிவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கின்றோம்! இதிலிருந்து எம்மை பாதுகாப்பது இறையச்சம் ஒன்றைத் தவிர வேறில்லை! இப்போது கூறுங்கள் நாம் தூரப்பட‌ வேண்டியது மார்க்கதை விட்டா?? பாவங்களை விட்டா???

கண் மூடித் தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இறைவனால் விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை தான் இது! நாம் திருந்துவதற்க்கு இந்த ரமழானை அவகாசமாகத் தந்துள்ளான். தீமைகளை விடுவதற்கும், நன்மைகளை செய்வதற்கும் பயிற்ச்சி அழிக்கக் கூடிய மாதம்தான் இது. ஹலாலானவற்றையே இறைவனுக்காக எம்மால் தவிர்திருக்க முடியும் எனில், அதே அவனுக்காக ஹறாமானவைகளை எம்மால் விட்டு விட முடியும் என பறைசாற்றக் கூடிய மாதம்! எம்மை சீர்திருத்திக் கொள்ள‌ இதை விட ஒரு சிறந்த தருணம் கிடையவே கிடையாது! இதிலே நாம் ஒவ்வொருவரும் கண்ணீர் விட்டு உள்ளம் உருகி ''எம்மை அழித்து விடாமல் பாதுகாத்து, எம் பாவங்களை மன்னித்து, எமக்கு நேர்வழி காட்டி, உன்னை நேசிக்கக் கூடிய சமுதாயமாக‌ எங்களை நீ மாற்றிவிடு இறைவா" என பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இனியும் இவைகளை உணர்ந்து கொள்ளாது தன் போக்கிலேய வாழ்வோமெனில், இஸ்லாத்தை நாம் நம்பவில்லை என்றுதான் பொருள். உலக முடிவின் அடையாளங்கள் என நபி அவர்கள் முன்னெச்சரிக்கை செய்த அனைத்துமே இன்று எம் கண்களுக்கு முன்னால் வரிசையாக நடந்தேறிக் கொண்டிருப்பது, இஸ்லாத்தை உண்மை என ஏற்க எமக்கு போதுமான சான்றாக இல்லையா?? நவீன விஞ்ஞானத்தை வைத்து 1400 ஆண்டுகளுக்கு முந்திய குர்ஆன் உண்மைப் படுத்தப்படுவது மிகப் பெரிய சான்றில்லையா?? யுக முடிவின் இறுதி கால‌ கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இன்னும் இஸ்லாத்தைப் புறக்கணித்து, உலகையே பற்றிப் பிடிப்போமாயின் ஈருலகிலும் எம்மை விட நஷ்டவாளிகள் இருக்க முடியாது!

மார்கத்தின் பெயரால் பிளவு பட்டிருக்கும் மார்கத் தலைவர்களே! உங்களிற்குள் இருக்கும் பகைமைகளை மறந்து ஒன்று பட வேண்டிய தருணம் இல்லையா இது??

"நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய வேதமாகிய கயிற்றைப் பலமாகப் ப‌ற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; கருத்து வேறுபட்டு நீங்கள் பிரிந்து விட வேண்டாம்; அத்தகையோருக்குத்தான் மறுமையில் மகத்தான வேதனையுமுண்டு." என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. பாவத்தில் திழைத்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கக் கூடிய சமூகத்தை சீர்திருத்தி நேர்வழிப் படுத்துவதை விட்டு, வணக்க வழிபாடுகளில் வேற்றுமை பாராட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். முழம் போகின்றது, சாணைப் பிடித்து சமூகத்தை கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

உங்கள் கொள்கைகள் வேறுபடட்டும், முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் ஒன்று சேர்ந்து இந்த‌ சமூகத்தை தூக்கி நிறுத்துங்கள். பெற்றோரை ஒன்று கூட்டி, அண்ண‌லாரின் அழகிய வழிகாட்டுதல்களைக் கொண்டு தங்களிண் குடும்பங்களை சீர்திருத்திட கற்றுக்கொடுங்கள். நாகரீகம் என்ற பெயரில் சீரழிந்து கொண்டிருக்கும் எமது இளைய தலைமுறைகளுக்கு சீர்திருத்த வகுப்புக்களை நடாத்துங்கள்.

கல்வியின் பெயராலும், நாகரீகத்தின் பெயராலும் பிள்ளைகளை சீரழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களே! முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு முறையாக இஸ்லாத்தை கற்றுக் கொடுத்து அதன் மூலம் அவர்களை ஒழுக்க சீலர்களாக வார்தெடுங்கள்.

தெரு முனைகளிலும், விபச்சாரத்திலும், போதையிலும் சிக்குண்டு தன் இளைமையை அழித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களே! நீங்கள் தான் எமது சமுதாயத்தின் முதுகெலும்பு, எம்மின் பலம். இந்த சீர்திருத்தத்தில் உங்களின் பங்கேற்பு மிக இன்றியமையாதது!

சிறந்த ஈமானோடு இஸ்லாம் எம் சமூகத்தில் முறையாக பேணப்படுமேயாயின்; ஒற்றுமை, ஒழுக்கம், வாய்மை, விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு மனப்பாண்மை, இரக்கம், கனிவு, பணிவு, பெரியோர் மீது கண்ணியம் போன்ற அண்ணல் நபியின் அழகிய குணங்களும், பண்பாடுகளும் எம் சமூகத்தையும் அலங்கரிக்கும்! அதற்குப் பின் யாரும் எம் மீது "தீவிர‌வாத'' சேற்றைப் பூசி விட முடியாது. மீறின் மாற்று சகோதரர்கள் எமக்காக குரல் கொடுப்பார்கள்! இப்படி பிற சமூகங்களுக்கு முன்னால் இறைவன் கூறிய‌ உண்மையான‌ முன் மாதிரி மிக்க முஸ்லிம்களாக திகழ்வோமேயானால் அவனின் நேசத்திற்குரிய சமூகமாக நாம் மாறி விடிவோம்! அவன் எம்மைப் பாதுகாப்பான்!

  ஒற்றுமையோடு ஒண்றிணைந்து ஈமானை அடித்தளமாக்கி, இஸ்லாத்தின் தூண்களான கடமைகளை அதிலே சீராக நிலை நாட்டி; அண்ணல் நபியியின் நீதமான‌ வாழ்கை வழிமுறைகளை அதிலே இரத்தின‌க்கற்களாக பதித்து உருவாக்கப் படக் கூடிய இறையச்சம் மிகுந்த "இஸ்லாம்" எனும் கோட்டையை எந்த ஆள் பலமோ, ஆயுத பலமோ, ஆட்சி பலமோ தகர்து விட முடியாது! இதை இறைவன் பாதுகாப்பான்.

"ஆம்; நீங்கள் பொறுமையுடனிருந்து, அல்லாஹ்வுக்கு பயந்தும் கொள்வீர்களானால், அந்நேரத்திலேயே உங்களைத்தாக்க அவர்கள் வந்த போதிலும், போர்குறிகள் கொண்ட மலக்குகளில் ஐயாயிரத்தைக் கொண்டு அவன் உங்களுக்கு உதவி செய்வான்" என்று இறைவன் சவால் விடுகிறான்!

இது எமது வெற்றியின் அடித்தளமா?? அல்லது அழிவின் ஆரம்பமா ??  சிந்தித்து சீர் திருந்திக் கொள்வோம்!


No comments

Powered by Blogger.